புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்
கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே!

-நம்பியாண்டர் நம்பிகள்
(திருத்தொண்டர் திருவந்தாதி)

வீரட்டானத்து வித்தகனைத் தேடி அருளாளர்கள் திருவடி நிலந்தோய திருக்கடவூர் வந்து செல்லும் போதெல்லாம் விழாக்கோலம் பூணுந் திருக்கடவூரில் அன்றும் ஆனந்தம் அலைவீசியது. தம்பிரான் தோழராம் நாவலூர்க்கோன் திருக்கடவூருக்கு எழுந்தருளியிருக்கிறார் என்றறிந்து தாமரையை மொய்க்கும் வண்டுகளாய் தெய்வத் தமிழ் பருக திரண்டது சைவ அன்பர்கள் திருக்கூட்டம். திரு ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் குங்கிலியக் கலயரும் இணைந்து நின்ற சந்நிதியில் வந்து நின்ற சுந்தரரை வருகவென அழைத்ததுபோல் சுடர் முறுவல் சிந்தின ஆலயத்தின் அகல் விளக்குகள்.

பெருமானைக் கண்டதும் ஆளுடைய நம்பிகள் அகம் தழுதழுத்தது. உன்னையன்றி வேறுதுணை உண்டோ எனக்கென அவர் உள்ளம் உருகிய பாங்கு திருப்பாட்டின் பெருக்கத்தில் தெரிந்தது. அமுத திருப்பாட்டின் பெருக்கத்தில் தெரிந்தது. அமுத கடேசப் பெருமானை ஒவ்வொரு திருப்பாட்டிலும் ‘அமுதே அமுதே’ என அகம் நெகிழ்ந்தழைத்தார் ஆலால சுந்தரர்.

பொடியார் மேனியனின் பொன்னார் மேனியில் யானைத்தோல் போர்த்திருக்கும் எழிலையும் வாம பாகத்தில் அம்பிகை இடம் கொண்ட அழகையும் திருநீல மிடற்றின் ஒளியையும் அனுபவித்தார் அவர்.

“போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே!”

எங்குமுள்ள பஞ்ச பூதங்களிலும் எதிர்ப்படும் ஒவ்வோர் உயிரினிலும் நிறைந்திருக்கும் சிவமே உயிர்த்துணை என்பதை மீண்டும் மீண்டும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உணரும் விதமாய் அந்தத் தரிசனம் அமைந்தது.

“மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே!”

சுந்தரர் பாடப்பாட அமுதீசப் பெருமானையும் அமுதான தேவாரத்தையும் ஒருங்கே உணரும் பெரும்பேறு பெற்ற அடியார்கள் தங்கள் உவகையை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார்கள்.

“கார்மேகம் பொழிவதுபோலல்லவா அருள் வாக்கு பொழிகிறது” என்றார் ஒருவர். அந்த அடியவரை நோக்கி “உங்களுக்கு எந்த ஊர்?” என்று தம்பிரான் தோழர் வினவ, அவர் திகைத்தவராய், “எனக்கு திருக்கடவூர்தான் சுவாமி” என கூப்பிய கைகளுடன் சொன்னார்.

“கலகல” வெனச் சிரித்த நம்பியாரூரர், “திருக்கடவூரில் பிறந்த நீங்கள் என்னைப்போள் காக்மேகமென்று சொல்லலாமா? கார்மேகம் போல் கவிபொழிந்த வல்லார் இத்தலத்திலேயே வாழ்ந்த நாயன்மாராகிய காரி நாயனார் அல்லவா! அவருக்கும் அவர் தமிழுக்கும் நான் அடியவன் அல்லவா” என்றார். காரிநாயனார் திருப்பெயரை உச்சரித்த மாத்திரத்தில் ஆலால சுந்தரரின் திருக்கரங்கள் சிரமேற் குவிந்த பணிவு கண்டு புளகித்தனர் அடியவர்கள்.

“ஆம் சுவாமி! இரண்டு நாயன்மார்கள் அவதரிக்கும் பெரும்பேற்றினை இத்தலம் கொண்டுள்ளது. கோவைநூல் பாடுவதில் வித்தகராகிய காரிநாயனாரின் கற்கண்டுக் கொடுத்தார்கள். கயிலாய நாதனையும் திருக்கயிலாயத்தையும் கணப்பொழுதும் மறவாத காரிநாயனார் பாடிப் பெற்ற பெருஞ்செல்வத்தை சிவாலயங்கள் எழுப்புவதற்கும் சிவனடியார்களுக்கு திருவமுது ஊட்டுவதற்கும் பயன்படுத்தினார்” என்றார் ஓர் அடியவர்.

“ஆடல்வல்லான் அந்த மகானின் திருநாவிலல்லவா தாண்டவம் புரிந்தான். மனதில் மகேசனை நிலை நிறுத்தி, கயிலாயநாதனையே கருதிக் கிடந்து கார்மேகமாய் வாழ்ந்த காரி எங்கள் ஊர் மேகமல்லவா” பெருமை பொங்கச் சொன்னார் இன்னொருவர்.

திருக்கோவிலை வலம்வந்து, அடியவர்கள் புடைசூழ குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த அருள் மனையினையும் காரிநாயனார் வாழ்ந்த திருமனையினையும் தரிசித்துவிட்டு திருக்கடவூர் திருமயானம் சென்றார் சுந்தரர்.

அங்கே கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமானடிகளையும் வாடாமுலை அம்மையையும் தரிசித்து மனமுருகப் பதிகம் பாடினார். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் கலயருடன் தரிசித்த திருமயானத்தில் சைவ வழிபாட்டின் உள் மரபினராகிய பஞ்சவடியினரைக் கண்டார். கூந்தல் கொண்டு பூணூல் அணியும் மாவிரதிகளாகிய அவர்களைக் கண்டதும் மானக்கஞ்சாற நாயனாரின் நினைவு தோன்றிற்று. மணமகள் கோலத்திலிருந்த தன் மகளின் கூந்தலை மாவிரதியான சிவயோகி கேட்ட மறுவிநாடி அரிந்தளித்த அவரின் பக்தியை நினைந்து நெக்குருகினார்.

அந்த நாயன்மாரின் நினைவை அத்தருணத்தில் வழங்கிய மாவிரதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அவர்களைக் காண நேர்ந்ததைப் பதிகத்தில் பதிவு செய்தார்.

“துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே!”

என்று சுந்தரர் பாட மாவிரதிகள் மனமகிழ்ந்தனர்.

“வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே!”

என்றும்,
“வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்குஅன்று
ஆனஞ்சு உகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே!”

என்றும் பெருமானையும் அம்மையையும் பலவாறாகப் பாடி யாத்திரை தொடர்ந்த ஆளுடைய நம்பிக்கு ஊரெல்லை வரை சென்று பிரியாவிடை தந்தனர் திருக்கடவூர் சிவ நேசர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *