நின்றபடி நின்றவர்க்கு அன்றி நிறந்தெரியான்
மன்றினுள்நின் றாடல் மகிழ்ந்தானும் – சென்றுடனே
எண்ணுறும்ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின் றாடும் பிரான்!
-திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயணார்
அமுதகடேசர் சந்நிதியில் அன்று பெருங்கூட்டம் திரண்டிருந்தது. முழுநீறு பூசி உருத்திராக்கம் அணிந்து சிவச்சிந்தையராய்த் திரண்டிருந்த அடியவர்களும், இல்லற நெறியில் இருந்தபடியே இறைநெறியில் இதயம் தோய்ந்த சிவநெறிச் செல்வர்களும் ஒருங்கே திரண்டிருக்க, அவர்கள் நடுவில் கனிந்த சிவப்பழமாய், கனலும் அருட்தவமாய் வீற்றிருந்தார் ஒருவர்.
ஆளுடைய தேவநாயனார் என்பது, அவருடைய தீட்சாநாமம். திருவியலூர் என்னும் சிவத்தலத்தில் வாழ்ந்து வந்த வேளாளர் அவர் ஒவ்வொரு திருத்தலமாய் சஞ்சரித்து வந்த சிவயோகியாம் உய்யவந்த தேவநாயனார். திருவியலூர் வந்தபோது இவரின் பரிபக்குவம் கண்டு தன்னுடைய சீடராக ஆட்கொண்டார்.
சீடனின் தலத்திலேயே நெடுங்காலம் தங்கியிருந்து, தன்னுடைய சீடனின் வழியாகவே உலகுக்கு சிவஞானம் புகட்டத்திருவுள்ளம் கொண்டு ==திருவுந்தியார்++ என்னும் ஞானநூலை அருளினார் அவர். சிவத்தலங்கள் தோறும் திருவுந்தியாரை விரித்துரைக்குமாறு சீடனுக்கு ஆணையிட்டார் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார். அதன் படியே திருக்கடவூரில் திருவுந்தியார் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஆளுடைய தேவர்.
“ஊஞ்சலில் ஆடும் பெண்கள் பூமியில் பாதத்தை ஊன்றி உந்த ஊஞ்சல் பறக்கும். அவர்கள் பாதத்தை பூமியில் பதிப்பது மேலே பறப்பதற்காக, அதுபோல் இக வாழ்வை, பரவாழ்வு நோக்கிப் பறக்கும் பக்குவத்திற்குப் பயன்படுத்தவே அருளாளர்கள் இத்தகைய ஞான நூல்களை அருளினர். ஒவ்வொரு பாடலிலும் உந்திப்பறக்குமாறு உயிர்களை இறை நெறியில் ஆற்றுப்படுத்துவது திருவுந்தியார். சிவப்பரம்பொருளுக்கு தனி வடிவமில்லை. எனவே பலரும் சிவத்தை உணர்வதில்லை. அதனாலேயே குருநாதர் வடிவில் சிவம் தன்னை வெளிப்படுத்துகிறது. நல்ல குருவை உணர்ந்தவர்கள் சிவத்தை உணர்ந்தவர் ஆவார்கள்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் குருநாதரை நினைந்து மலர்விழிகளில் மஞ்சனநீர் பெருக்கினார் ஆளுடைய தேவர்.
மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரவிய அவருடைய பார்வை ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அங்கொரு மனிதர் விழிகளிலிருந்து வெள்ளம் பெருக, குவிந்த கரங்களுடன் உள்ளுருகி அமர்ந்திருந்தார். நல்ல குருவைத் தேடிக்கொண்டிருந்த அவரின் தாகமும், சரியான சீடனை இனங்கண்ட ஆளுடைய தேவநாயனாரின் ஞானமும் அமுதகடேசர் சந்நிதியில் சங்கமித்தன.
விரிவுரை நிறைவுபெற்று மற்ற அன்பர்கள் விடைபெற்ற பிறகும் வைத்த கண் வாங்காது நின்று கொண்டிருந்த அந்த அன்பரை அருகே அழைத்து ஆட்கொண்டார் ஆளுடைய தேவநாயனார். எந்நேரமும் தன்னுடைய குருநாதரின் பொன்னார் திருவடிகளையே எண்ணிக் கிடந்த ஆளுடைய தேவநாயனாருக்கு தன் சீடனுக்கு வேறு தீட்சா நாமம் சூட்ட விருப்பமில்லை. தன்னுடைய குருநாதரின் பெயரையே சூட்டினார். தன் பழைய நாமமும் பழ வினையும் கழிந்து திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் எனும் திருப்பொலிவு பெற்றார் அவர்.
அடுத்தநாள் திருக்கடவூரில் ஒரே பரபரப்பு. “நம்முடைய ஆட்டு வணிகர் இருக்கிறாரே! அவர் இனி மேல் சிவனடியாராம். ஆளுடைய தேவநாயனாரின் முதன்மைச் சீடராம்! என்ன விந்தை பார்த்தீர்களா?” என்றார் ஒருவர். “ஆண்டவன் நினைத்தால் ஆகாதென்ன? ஈசன்பால் இதயத்தைச் செலுத்தினால் மாடு தின்பவர்கூட நாம் வணங்கக்கூடிய கடவுள் என்று திருநாவுக்கரசர் பாடவில்லையா?” என்றார் மற்றொருவர்.
“எல்லாம் சரிதான்! நாமறிய ஆடு விற்றுக் கொண்டிருந்தவர். சிவபக்தி உள்ளவரென்று தெரியும். அதற்காக அவரை அருளாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா என்றுதான்…” மெல்ல இழுத்த ஒருவரை முதுகில் தட்டி அடக்கினார் இன்னொருவர். “மாணிக்கவாசகரின் இடர் தீர்க்க, சிவபெருமானே குதிரை விற்பவராய் வரவில்லையா என்ன? பக்குவமமில்லாதவரை பரமாச்சாரியரான ஆளுடைய தேவநாயனார் ஆட்கொள்வாரா? உருவு கண்டும் தொழில் கண்டும் உள்ளொளியை நிர்ணயிக்க நாம் யார்?” எனற அவரின் சொற்களில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர்கள் மெல்லக் கலைந்து சென்றனர்.
தன் குருநாதரின் திருநாமம் தரிக்கப்பெற்ற சீடருக்கு திருவுந்தியாரின் நுட்பங்களை விரித்துரைத்த ஆளுடைய தேவநாயனார், அவருடைய தகுதியில் முழுநிறைவு பெற்றபின், திருவுந்தியாரை ஒவ்வொரு சிவத்தலமாகப் பரப்ப ஆணையிட்டருளி அனுப்பினார்.
குருநாதரின் குருநாதர் அருளிய மொழிகளை உயிருக்கு உறுதிதரும் மந்திரமொழிகளாய் இறுகப் பற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் ஒவ்வொரு சிவத்தலமாய் சென்று திருவுந்தியார் விரிவுரை நிகழ்த்தினார்.
வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதிகள் அவை. சிவனடியார்கள் மட்டுமின்றி எளிய உழவர்களும் அவர்தம் விரிவுரைகளைக் கேட்கத் திரண்டனர். அரிய தத்துவங்கள் மிக எளிதாய் விளக்கப்படுவது கண்டு விம்மிதம் கொண்டனர். குருவின் அருமையை உணர்த்தும் இடங்களில் எல்லாம் நெக்குருகி, தங்களை ஆட்கொள்ளவுமொரு குரு வேண்டுமென்று மனதுக்குள் இறைஞ்சினர்.
திருவுந்தியாரின் முப்பத்தெட்டாவது பாடலை விளக்கினார் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். “தங்கத்தால் ஆன கொழுவைக் கொண்டு வரகு விளையும் நிலத்தை ஒருவர் உழுதால் அவரை என்ன சொல்வீர்கள்?” அவையினர் ஒரே குரலில் சொன்னார்கள், “சுத்த மடையர் என்போம்.”சிரித்தபடியே கைகளைக் கூப்பி உய்யவந்த தேவர் சொன்னார், “மன்னிக்க வேண்டும். உங்களில் பலர் அப்படித் தான் இருக்கிறீர்கள். இறைவன் திருவருள் என்னும் தங்கக் கொழுவைக் கொண்டு உலகவாழ்வின் நலன்களைத் தேடுதல் என்னும் உழு தொழிலைச் செய்கிறீர்கள். இதை நான் சொல்லவில்லை; திருவுந்தியார் சொல்கிறது.”
“பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுதென்?
அக்கொழு நீஅறிந்து உந்தீ பற
அறிந்தறியா வண்ணம் உந்தீ பற”
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரின் உரைத்திறனும் பக்தியும் பணிவும் உலகவரை ஈர்த்தன. ஒவ்வொரு தலத்திலும் பெருமளவில் சிவநேயர்கள் திரண்டு, அவர்தம் தெளிவுரையில் திளைத்தனர். தில்லை வந்து சேர்ந்தார் நாயனார். அங்கே திருவுந்தியார் உரைகேட்க வந்த ஒருவர், இவரின் அணுக்கச் சீடரானார். திருவுந்தியாரில் பெரிதும் ஈடுபட்ட அவர், தன்னுடைய குருநாதராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்.
“சுவாமி! இந்நூலுக்கு விரிவுரையை சொற்பெருக்காகத் தாங்கள் ஆற்றுவதே இத்தனை அற்புதமாய் இருக்கிறதே! இதற்கொரு வழிநூலைத் தாங்கள் அருளக்கூடாதா?”
சீடனின் வேண்டுகோளைத் தன்னுடைய குருவின் கட்டளையாகவே ஏற்று ஞானநூல் ஒன்றை இயற்றத் தொடங்கினார் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். சிவநெறிச் செல்வர்கள் மத்தியில் அவருக்குப் பெருகி வரும் சிவநெறிச் செல்வர்கள் மத்தியில் அவருக்குப் பெருகி வரும் புகழை பொறாத ஒருவர், அவரின் சீடரிடம் இழித்தும் பழித்தும் பேசத் தொடங்கினர். “ஆட்டு வணிகனுக்குப் பாட்டுச் செய்யவும் வருமோ?” என்றார் ஒருவர். “அவர் பாட்டுக்கு விளக்கம் கேட்டால் நேராகச் செல்வாரா? கைகளில் துகில்கொண்டு மூடி விரல்கன் பிடித்துச் சொல்வாரா?”ஆரவாரமாய்க் கேள்வி கேட்டவர்களின் அகங்காரம் சீடரைக் காயப்படுத்தியது. அவர்களையும் அழைத்துக் கொண்டு தன் குருநாதரைத் தேடி வந்தார் அவர். அதற்குள் நூறு வெண்பாக்களால் ஆன ஞான நூலை இயற்றி முடித்திருந்தார், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்.
ஆடல்வல்லானின் சந்நிதியில் அவர் அமர்ந்திருக்க, அந்த நூலை பணிந்து வாங்கிய சீடர், “பெருமானே! இந்நூல் கொள்ளத்தக்கதா தள்ளத்தக்கதா என்பதை நீங்களே உணர்த்துங்கள்” என்று விண்ணப்பித்து பொன்னம்பலத்தின் படிமிசை வைத்தார். அந்தப் படிகளில் செதுக்கப்பட்டிருந்த கல் யானை உயிர்பெற்றெழுந்து அந்நூலைத் துதிக்கையில் சுமந்து, பொன்னம்பலத்தின் மேற்படியில் வைத்தது.
கூடியிருந்தோர் அனைவரும் கூத்தப் பெருமானையும் நாயனாரையும் பணிந்து புளகமெய்தினர். கல்களிறு தொட்டுத் தூக்கிய அந்நூலுக்குப் பெயரும் திருக்களிற்றுப் படியார் என்றே வழங்கி வரலாயிற்று, குருவருள் நிலை, திருவருள் நிலை, கரணங்கள், வினைப்பயன்கள், நாயன்மார்கள் அருள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடு பொருட்களின் கருவூலம் திருக்களிற்றுப்படியார்.
சராசரி மனிதர்களுக்கிருக்கும் கரணங்கள்தான் அருளாளர்களுக்கும் உள்ளன. அவர்கள் அவற்றின் மனிதத் தன்மையை சிவமெனும் புனிதத் தன்மையாய் மாற்றியதால் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
திருஞானசம்பந்தர் பதிகம்பாட, திருநனிபள்ளியில் பாலை நிலம் நெய்தல் நிலம் ஆனதும், திங்களூரில் திருநாவுக்கரசர் பதிகம்பாட, அப்பூதியடிகளின் மகன் அரவின் நஞ்சகன்று பிழைத்ததும், திருப்புக்கொளியூரில் சுந்தரர் பதிகம் பாட, முதலைவாய்ப்பட்ட சிறுவன் பல்லாண்டுகள் தாண்டி மீண்டதும் அதனால்தான் என்னும் கருத்தமைய ஓர் அழகிய பாடல் திருக்களிற்றுப்படியாரில் உண்டு.
பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனை அன்றேவிக் காரம் கொண்டபாலனை
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்.
இதே தன்மைகொண்ட நூறு வெண்பாக்கள் பொன்பாக்களாய்ப் பொலியும் திருக்களிற்றுப் படியாருக்கு தில்லைத் திருத்தலத்தில் விரிவுரைகள் செய்துவந்த நாயனார் கூத்தபிரானின் கழலடிகளில் கலந்தார்.
சைவ சித்தாந்த உலகம் உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு. அவற்றில் முதல் நூலாகிய திருவுந்தியார் உபதேசம் பெற்று, இரண்டாவது நூலாகிய திருக்களிற்றுப்படியாரை அருளிய உய்யவந்த தேவநாயனார் அவதரித்த திருத்தலம் என்னும் பெரும்பேறு பெற்றது திருக்கடவூர்.