திருக்கடவூர்-18
நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம்புகழ் திருநாடென்றும்
பொற்தடந் தோளால் வையம் பொதுக்கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அன்பாயன் பொற் குடைநிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்பால் வரம்புற விளம்பலாமோ!
-தெய்வச் சேக்கிழார்
“நம்முடைய மன்னர் பெருமானின் மனங்கவர்ந்த அமைச்சராகிய அருண்மொழித்தேவர், தமிழகத்தில் வாழ்ந்து வந்த நாயன்மார்களின் வரலாற்றை திருத்தொண்டர் மாக்கதை என்று புராணமாகப் பாடியிருக்கிறாராம். நம்முடைய ஊரில் வாழ்ந்த குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரைப் பற்றி அதில் விரிவாக வருகிறதாம்!” என்றார் ஒரு புலவர்.
தில்லையில் திருத்தொண்டர் மாக்கதை அரங்கேற்றத்திற்குச் சென்றிருந்த திருக்கடவூர் புலவர்கள், அப்புராணத்தின் பெருமையையும் அரங்கேற்றத்தின்போது திருத்தொண்டர் புராணம் சுவடிகள் பட்டில் அலங்கரிக்கப்பட்டு யானையின் மேல் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட விமரிசையையும் வெகுகாலம் விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
அநபாயன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் சிவநெறியிலும் தமிழ்நெறியிலும் தலைநின்றவன். அவன் ஆதரவில் துவங்கிய சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் குங்கிலியக்கலய நாயனாரும், காரி நாயனாரும் கலசம் போல் ஒளிர்ந்தார்கள்.
அரசர்களாலும் அறக்கொடையாளர்களாலும் அடுக்கடுக்காய் நிலங்களும் நிவந்தங்களும் திருக்கடவூர் திருக்கோயிலுக்கு பரிசளிக்கப்பட்ட காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம்.
நாடாளும் அரசன் குறித்து நாளொரு பாராட்டும் பொழுதொரு புகழ்மொழியும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது கடவூர்க்காற்று. திருவாரூர் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்று திரும்பிய திருக்கடவூர் சொக்கநாதர் பரபரப்பாய் ஒரு செய்தியை விவரித்துக் கொண்டிருந்தார்.
“கேள்விப்பட்டீர்களா? திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் சந்நிதியில் இறைவாக்கொன்று உத்தரவானதாம். நம் அரசரை இறைவன் =நம் தோழன்+ என்றே அருளினாராம். சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிறகு நல்ல நண்பர் கிடைக்காமல் பெருமான் அவதிப்பட்டார் போலும்! நல்ல வேளையாய் நம் அரசர் கிடைத்தார்!” என்றார் அவர்.
“இருக்கும், இருக்கும்! தில்லைத்தலத்திலும் நம் அரசர் பெருமானை ஏக பக்தன் என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால்…” என்று இழுத்தார் முத்தையன்.
“என்ன ஓய்! ஆனால்… என்று ஆலாபனை செய்கிறீர்? சொல்ல வந்ததைச் சொல்லும்!” மற்றவர்கள் தூண்டி விட்டனர். “எல்லாம் சரிதான். நாம் தென்னாடுடைய சிவனே போற்றி என்கிறோம். ஆனால் இப்போது தென்னாட்டுச் சிவனடியார்களை விட வடநாட்டு வைதீக மரபில் வந்த அடியார்களுக்கல்லவா செல்வாக்கு மிகுதியாயிருக்கிறது!”
சட்டென்று நிலவிய அமைதியைக் கலைத்தார் நல்லசிவம். “அதை விடுங்கள்! ராஜராஜ சோழன் காலத்திலேயே அப்படிதான் இருந்ததாய் சொல்வார்கள். இதைப் பெரிதுபடுத்தாதீர்.”
ஆனால் திருக்கடவூரில் இப்படியொரு பேச்சு நிலவியது தெரிந்ததோ என்னவோ! மூன்றாம் குலோத்துங்களிள் ராஜகுரு சுவாமி தேவர் ஓரிரு நாட்களில் திருக்கடவூர் வருகிறார் என்ற அதிகார பூர்வ செய்தி கிடைக்கப்பெற்று ஊரெங்கும் அதே பேச்சாய் இருந்தது.
“ராஜகுரு சுவாமிதேவர் வருகிறாராமே! எந்த ஊர்க்காரர் அவர்?” ஒருவர் வினவினார். “வடக்கிலுள்ள வங்கத்திலிருந்து வந்தவராம் இவர். கோஸ்வாமி மிச்ரர் என்பவரின் சகோதரராம் நம் சுவாமித் தேவர். இவருடைய இயற்பெயர், ஸ்ரீ கண்ட சம்பு. அச்சுத மங்கலத்தில் சோமநாதர் ஆலயம் என்றொரு சிவாலயத்தை எழுப்பி இருக்கிறாராம். இந்தத் திருக்கோவிலுக்கு நம் மகாராஜா ஏராளமான நிவந்தங்களையும் மடவிளாகங்களையும் தந்திருக்கிறாராம் என்றார் மற்றொருவர்.
சுவாமிதேவரை வரவேற்க ஊரெல்லையில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூரணகும்ப மரியாதையுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாய் அழைத்துவரப்பட்ட சுவாமிதேவர் “கடுகடு” வென்றிருந்தார். “என்ன ஓய்! கிசுகிசுத்த ஒருவரை அருகிலிருந்தவர்கள் சைகையால் அடக்கினர்.
சந்நிதியில் வடமொழி மந்திரங்கள் முறையாக உச்சரிக்கப்பட சுவாமிதேவர் முகம் சற்றே மலர்ந்தது. சந்நிதியிலிருந்து நகரத் தொடங்கிய சுவாமிதேவரிடம் பூசைப் பொறுப்பிலிருந்தவர்கள் தயக்கத்துடன் நெருங்கி ஏதோ சொன்னார்கள். சுவாமிதேவர் முகம் மாறியது. அவர் சுற்றும் முற்றும் பார்க்க, துணிவு கொண்டவர்களாய் இருவரை நோக்கி விரல் சுட்டினர்.
திருக்கோவில் அதிகாரியை அழைத்து ஏதோ முணு முணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சுவாமிதேவர். திருக்கோவில் உபசாரங்களை ஏற்று அவர் திரும்பிய பிறகுதான் நடந்ததென்னவென்று வெளியானது.
“பார்த்தீரா ஓய்! திருக்கோவில் பூசைக்கென்று மகாராஜா இரண்டு சிவாச்சாரியார்களை நியமித்திருந்தார் அல்லவா! அந்த நியமனத்தை நிறுத்திவிட்டு பூசைக்குப் பரம்பரை உரிமை பெற்றவர்களையே சுவாமிதேவர் நியமித்து விட்டாராம். இப்போதாவது தெரிந்து கொள்ளும், ராஜகுரு சர்வ வல்லமை படைத்தவரென்று!” முத்தையன் சொன்னதை மற்றவர்கள் வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிறிது காலத்திலேயே தென்னகத் திருமடங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்தன. திருத்துறைப் பூண்டியிலும் மற்ற இடங்களிலும் தென்னகத் திருமடங்களின் குகைகள் இடித்து நொறுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி குகையிடிக்கலகம் என்று பேசப்பட்டது. சிவபக்தியில் தலை நிற்கும் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் இப்படியும் நிகழுமா என்று வேதனையோடும் வியப்போடும் விமரிசனங்கள் எழுந்தன.
“தகதீம் தீம் தீம்!” திருக்கடவூர் திருக்கோவிலுக்கு உட்பட்ட நாட்டிய சாலையிலிருந்து கம்பீரமான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. “நம்முடைய ஊருக்கு புதிதாக நட்டுவனார் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறாராமே! யாரவர்?” என்றார் ஒருவர். “அவர் பெயர் பாரசவன் பொன்னன். காலவிநோத நிருத்தப் பேரரையன் என்னும் சிறப்பு விருது பெற்றவராம். அரசவைப்புலவர் வீராந்த பல்லவரையர் இருக்கிறாரல்லவா! அவருடைய பரிந்துரையில் நடந்த நியமனமாம்!” என்றார் இன்னொருவர்.
“எதற்குமவர் எச்சரிக்கையாய் இருக்கட்டும். சுவாமி தேவர் மறுபடியும் வந்து இந்த நியமனத்தையும் நிறுத்திவிடப் போகிறார்” ஒருவர் குறும்பாகச் சொன்னார்.
மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பிறகு மூன்றாம் இராஜராஜனும் அவனைத் தொடர்ந்து மூன்றாம் இராசேந்திர சோழனும் ஆண்டதும், அவனுக்குப் பிறகு சோழநாடு பாண்டியர்கள் வசம் சென்றதும் வரலாறு. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் குல சேகர பாண்டியன் போன்ற வேந்தர்கள் விரும்பி நல்கிய அருட்கொடைகளும் நிவந்தங்களும் திருக்கடவூர் வீரட்டானத்திற்கு வளம் சேர்த்தன.
மாறவர்மன் குலசேகரன் வழங்கிய முப்பத்தோரு வேலி நிலத்தின் வருவாய் திருக்கோவிலின் நித்திய பூசைக்கும் அரசனின் பிறந்தநாளாகிய ஆனி மூலத் திருநாளன்று சிறப்புப் பூசைக்கும் பயன்படுமாறு விதிக்கப்பட்டது.
பாண்டியர்கள் காலத்தில் திருக்கோவிலுக்கு நல்கப்பட்ட நகைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
பேரரசுகள் வேர்கொண்டெழுந்ததையும் வளர்ந்ததையும் விழுந்ததையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காலம்.