காணரிய தில்லை கடவூரை யாறுகச்சி
சோணகிரி வேளூர் துவாரசக்திகோணகிரி
தண்டாத காசி தலத்துவிடை பஞ்சசக்தி
கண்டானெல் லன்காலிங் கன்!
-திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள கல்லெழுத்துப் பாடல்
திருக்கடவூர் அம்பாள் ஆலயத்தின் முன் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த குழுவினர் கண்மூடி மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர். செந்நிற வஸ்திரங்கள் பூண்டு, கழுத்தில் உருத்திராக்கம் அணிந்திருந்தனர். அம்பிகையை முழுமுதற் பொருளாக வழிபடும் சாக்த மார்க்கத்தினர் என்பது பார்த்தாலே புரிந்தது. அவர்களில் சிலர் சோழி மாலைகள் அணிந்திருந்தனர். சிலர் சோழி மாலைகளைக் கைகளில் வைத்து உருட்டியவண்ணம் செபித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை சுட்டிக்காட்டி சோமநாத சிவாச்சாரியார் இளம் அந்தணர்களுக்கு மெல்லிய குரலில் விலக்கிக் கொண்டிருந்தார். “தாந்திரீகத்தில் சோழிகளுக்கு ஹம்ஸீ என்று பெயர். உலகவாழ்வின் இன்பங்களும் செல்வங்களும் கடலளவு கிடைக்க சோழிகள் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. யோனி வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சோழிகளாலான மாலைகளை அணிந்து கொள்வார்கள். பாதரசத்தையும் மானின் கோமியத்தையும் கலந்து பொதிக்கப்பட்ட சோழிகள் உலக இன்பங்களை அளவின்றித் தருபவை. பாற்கடலைக் கடைந்தபோது வந்த புனிதப் பொருட்களில் சோழிகளும் அடங்குமென்று புராணங்கள் சொல்கின்றன.”
சிவாச்சாரியார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஓர் இளைஞன் இடைமறித்துக் கேட்டான். “அது சரி சுவாமி! இவர்களெல்லாம் யார்? இங்கே குழுவாக அமர்ந்து என்ன செய்கிறார்கள்? இவர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்பட்டதும், சுற்றிலும் வீரர்கள் காவலுக்கு நிற்பதும் பெரிய இடத்துத் தொடர்புள்ளவர்கள் என்று காட்டுகிறதே!”
சிவாச்சாரியார் சொன்னார். “நீ சொல்வது சரிதான் நம்முடைய மன்னர் செவ்வப்ப நாயக்கரின் பெரும் மரியாதையைப் பெற்ற எல்லப்ப நயினாரின் சீடர்கள் இவர்கள். யாமள தந்திரத்தில் தலைசிறந்து விளங்கும் காளிங்கராயன் உண்ணாமுலை எல்லப்ப நயினார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவையாறு ஆகிய தலங்களில் துவார சக்தியைப் பிரதிட்டை செய்துவிட்டு திருக்கடவூரிலும் பிரதிட்டை செய்ய இங்கே வரவிருக்கிறார். இதன்பிறகு புள்ளிருக்கு வேளூரிலும் தில்லையிலும் பிரதிட்டை செய்யப் போகிறாராம். அதற்கான பிரதிட்டை சடங்குகளில் அவருடைய சீடர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே துந்துபியும் எக்காளமும் முழங்கின. மறையவர் சூழ ராஜ பிரதானிகள் பின்வர நடுநாயகமாய் வந்து கொண்டிருந்தார் எல்லப்ப நயினார். நெடிதுயர்ந்த தோற்றம். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க கண்களில் அமைதியும் தவமும் தம்மையும் அறியாமல் எழுந்து நின்று கைகூப்ப அவருடைய சீடர்கள் மட்டும் அசையாமல் தொடர்ந்து மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விஜயநகரப் பேரரசு தஞ்சையில் நிலை கொண்ட நாள்முதலாய் திருக்கோவில்கள் புதுப்பொலிவு பெற்றன. கிருஷ்ணதேவராயர் காலம் முதல் திருக்கடவூரில் திருப் பணிகள் நடந்தேறின. அவர் மறைவுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசாய் அரியணையேறிய அச்சுததேவராயர் தஞ்சையின் முதல் நாயக்க மன்னராக செவ்வப்ப நாயக்கரை நியமித்தார். துவார சக்தியின் பிரதிட்டை திருக்கடவூர் கோவிலுக்கு புதுப் பொலிவைக் கொடுத்தது.
நாயக்க மன்னர்களைப் பொறுத்தவரை தந்தையும் மகனுமாக சேர்ந்து ஆட்ப்பொறுப்பை கவனிப்பது அடிக்கடி நடந்தது. செல்லப்ப நாயக்கர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் அதைத் தொடர்ந்து அச்சுதப்ப நாயக்கரும் அவர் மகன் இரகுநாத நாயக்கரும் ஒன்றிணைந்து ஆட்சிப் பொறுப்பை கவனித்தனர். தான் வாழும் காலத்திலேயே கூட இரகுநாதனின் திறமையை தாத்தா செவ்வப்ப நாயக்கர் அடையாளங்கண்டு பாராட்டியதுண்டு.
மக்கள் மத்தியில் இரகுநாத நாயக்கர் வேகமாக செல்வாக்குப் பெற அவருடைய இசைப்புலமையும் காரணம். கோவிந்த தீட்சிதரின் சீடரான இரகுநாத நாயக்கர் பற்றி சுவாரசியமான தகவல்கள் பரவின. அரசருடைய சமையல் பரிசாரகரின் மைத்துனன் செம்பான், திருக்கடவூர் கோயிலில் வேலை பார்த்து வந்தான். மகாராஜா அரண்மனையில் இரகுநாத மன்னனுக்கு பரிமாறப்படும் உணவுவகைகள் பற்றி அவனை அடிக்கடி சொல்லக்கேட்டு ரசிப்பார்கள் ஊர்க்காரர்கள்.
அப்பளம், எள்ளுப்பொடியிட்ட கற்பூரக்கோழி, தேங்காய்ப்பொடியும் கருவேப்பிலைப்பொடியும் கலந்த குங்குமக்கோழி, உளுந்து கடலைப்பருப்பு, சானகி சூர்ணம் கலந்து தயாரிக்கப்பட்ட கஸ்தூரிக் கோழி, சர்க்கரை போட்டுச் செய்யும் பால்கோழி, வெங்காயம் பூண்டு போட்டு செய்யப்பட்ட கட்டுக்கோழி, நுலுவ கோழி, மீன் வறுவல் வகைகள், பேணி, மாண்டே, இலட்டு, பூர்ண கலச மோதகம், அதிரசம் ஆகிய இனிப்பு வகைகள், கறி வடை, தயிர்வடை, ஆமை வடை, பன்னீர்ப்பாயசம், ஜீரகபாயசம், குளிர்ந்த பாயசம், ùஸôஜ்ஜி பாயசம், சீகரணி எனும் சர்க்கரைச் சாதம், பலவகை சித்ரான்னங்கள், தேனில் நனைந்த பழரகங்கள், நீர் மோர், ஏலமும் சுக்கும் வெட்டிவேரும் கலந்த குடிநீர்.
விஜயரகுநாத மன்னன் கைகால் கழுவி மனையிட்டு இலைமுன் அமரும் கோலத்தை செம்பான் வர்ணிக்கும்போது ஏதோ அவன் அடுத்த இலையில் அமர்ந்து விருந்துண்டு வந்ததுபோல் தோன்றும். எல்லாம் அவன் மைத்துனன் சொன்ன கதைகள்தான்.
இரகுநாத நாயக்கர் காலத்தில் திருக்கடவூரில் பரவிய மற்றொரு பரபரப்பு டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் கோட்டை அமைத்தது. சங்ககாலத்திலேயே புகழ்பெற்ற தரங்கம்பாடிக்கு நாயக்கர் காலத்தில் சடங்கன்பாடி என்று தான் பெயர். அங்கிருந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலுக்கு நிறைய நிவந்தங்களும் நிலபுலன்களும் அளிக்கப்பட்டன.
சோழர் காலத்திலேயே தரங்கம்பாடியில் கைக்கோளர்கள் சேனை இருந்தாலும் அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே தரங்கம்பாடி கோட்டை இருந்தாலும் இரகுநாத நாயக்கர் காலத்தில்தான் கோட்டை டேனிஷ்காரர்கள் வசமானது.
“இப்படி பரதேசத்துக்காரர்களுக்கு மகாராஜா இடந்தரலாமோ” மெல்லிய முணுமுணுப்பு திருக்கடவூர் குடிமக்களிடையே பரவியது. ==கடல்வாணிகம் பரவத்தானே செய்கிறார். அவர் என்ன விபரம் தெரியாதவரா?++ சிலர் சமாதானப்படுத்தினார்கள்.
ஆனால் அந்த அச்சம் அர்த்தமுள்ளது என்பதை இரகுநாத நாயக்கரின் இளையமகன் ஆட்சிக் காலத்தில் திருக்கடவூர் மக்கள் உணர்ந்தார்கள். இரகுநாத நாயக்கர் காலத்திலேயே அவருடைய மூத்த மகன் இராமபத்ர நாயக்கர் மரணமடைய இளைய மகன் விஜயராகவ நாயக்கர் இளவரசு பட்டமேற்றார். பதிகேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவர் ஆட்சிப்பொறுப்பேற்றபோது, டேனியர்கள் மிக மோசமான வணிக இழப்பை சந்தித்தார்கள். தங்கள் கோட்டையை விற்பது பற்றியும் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரமது. ஆனால் விஜயராகவ நாயக்கர் அனுமதிக்கவில்லை.
திருக்கடவூர் ஏகாம்பரம்பிள்ளை தன் சகாக்களிடம் ஒருநாள் பெருங்குரலெடுத்துப் பேசிக் கொண்டிருந்தார். “நேற்று வரை புலம்பிக் கொண்டிருந்த டேனிஷ்காரன் இன்று நிமிர்ந்து விட்டான், ஓய்! அவர்கள் நாட்டிலிருந்து படை பலமும் பணபலமும் நிரம்பிய கப்பல் ஒன்று வந்துவிட்டது. அவனுடைய இருபதாண்டுகாலப் போராட்டம் ஓய்ந்து விட்டது ஓய்! இனி அவனுக்கு சுக்ரதசைதான்.”
ஆனால் திருக்கடவூர்க்காரர்கள் எதிர்பாராத ஒரு சம்பவமும் நடந்தது. தனக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்திக் கொண்டிருந்த மதுரைப்படையை எதிர்கொள்ள டேனிஷ்பர்க்கின் உதவியை நாடினார் விஜயராகவ நாயக்கர். அதற்கு கைம்மாறாக டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த 50 சதுர கி.மீ. நிலப்பரப்பைக் கேட்டுப் பெற்றனர்.
டேனிஷ்காரர்கள் வசமான நிலப்பகுதியில் திருக்கடவூரும் இருந்தது. ==மலைபோல் நம்பிய ராஜா நம்மை மாற்றான் வசம் ஒப்படைத்து விட்டாரே++ என்று மாய்ந்து மாய்ந்து புலம்பினார்கள் திருக்கடவூர்க்காரர்கள்.
ஆனால் காலம் வேறொரு கணக்கை வெளிப்படுத்தியது. மதுரை சொக்கநாத நாயக்கர் வென்ற வல்லம் கோட்டையை மீட்க விஜயராகவநாயக்கர் பீஜப்பூர் சுல்தான் உதவியைப் பெற்றார். கோட்டையையும் மீட்டார். ஆனால் அதே படைகள் மராட்டியப் படையுடன் கைகேர்த்து எதிர் பாராத நேரத்தில் விஜயராகவ நாயக்கரைத் தாக்கியது.
1675 பிப்ரவரி மூன்றாம் நாள் தஞ்சை வடக்குவீதி இராஜகோபாலசுவாமி திருக்கோவில் அருகே நடந்த மோதலில் விஜயராகவ நாயக்கரும் அவர் மகன் மன்னாருதேவனும் வீழ்ந்தனர். தஞ்சையில் நாயக்கர் ஆட்சி விழுந்தது. ஏகோஜி தலைமையில் மராட்டிய அரசு மலர்ந்தது.