திருக்கடவூர்-20
தன்னை அறியார் தலைவன் தனையறியார்
முன்னை வினையின் முடிவறியார் – பின்னைக்
குருக்களென்றும் பேரிட்டுக் கொள்ளுவர்கள் ஐயோ
தெருக்கள் தனிலே சிலர்!
-ஸ்ரீ குருஞானசம்பந்தர்
(சிவபோகசாரம்)
திருக்கடவூர்க்காரர்களின் வாழ்வை இயக்கும் ஆதார மையங்களே உழுவதும் தொழுவதும்தான். ஊரின் நடுநாயகமாய் விளங்கிய திருக்கோயில் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் புகுந்து ஊடாடியது. வீதி நடுலே நிற்கும் பசுவைத் தொட்டுக் கொண்டும் வருடிக்கொண்டும் செல்பவர்களைப் போல் அமுதகடேசரையும் அபிராமியையும் சார்ந்தே வாழ்ந்த வாழ்க்கை அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
முப்போக விளைச்சல் தரும் வயல்வெளிகள் உழவர்களுக்குத் தாய்மடிகளாகத் திகழ்ந்தன. வேளாண்குடிகளின் வியர்வையைத் தொட்டு துடைக்க, கடவூர் வந்தது கடற்காற்று. வான்வெளியை அளந்துவரும் பறவைகள் மாலை நேரங்களில் திருக்கோயில் மதில்களில் அமர்ந்தன. இருட்டியபிறகு திருக்கோவிலியே அடைந்தன.
கோயில்மணி ஒலிக்கம்போதெல்லாம் கோபுர மாடங்களிலிருந்து சடசடத்துப் பறக்கும் பறவைகளைக் கண்டு குழந்தைகள் எழுப்பும் உற்சாகத் குரலும், மடவிளாகங்களில் ஓயாதொலிக்கும் சாம கானமும் சாளரங்கள் வழி வெளிப்படும் வேள்விப் புகையும் திருக்கடவூரை உயிர்ப்பும் உற்சாகமும் ததும்பும் தலமாகவே வைத்திருந்தன.
மராட்டிய மன்னர்களின் சாத்வீக அணுகு முறையும் பக்தியும் அவர்களை மிக நெருக்கமாக உணரும் மனநிலையை ஏற்படுத்தியது. அரசர்களின் ஆளுகையிலும் சிறிதுகாலம் டேனிஷ் கோட்டையின் கட்டுப்பாட்லும் இருந்த திருக்கடவூரில் ஒரு மாற்றம் மெல்ல மலர்ந்தது.
நாயக்கர் காலத்திலிருந்தே பொதுமக்களின் பக்திக்கும் அபிமானத்திற்கும் பெயர்பெற்று விளங்கிய தருமை ஆதீனத்தின் அருளாட்சியில் திருக்கோவில் ஒப்படைக்கப்பட்டது. தருமையாதீனத்தின் குருமுதல்வர் ஸ்ரீ குருஞான சம்பந்தர் சின்னஞ்சிறுவராய் பெற்றோருடன் சொந்த ஊராகிய ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து மதுரை சென்றவொரு சிறு பிள்ளை. அந்தப் பிள்ளைக்கும் ஞானசம்பந்தர் என்றே பெயர்.
சொக்கேசர் திருவடியை நீங்க மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்ட அந்தக் குழந்தையின் தீராத பக்திப் பெருக்கின் விளைவாக பொற்றாமரைக் குளத்தின் ஈசான திசையில் கிடைத்தது. வழிபடு மூர்த்தம் கிடைத்தது போலவே வழி காட்டும் குருநாதரும் கிடைக்க வேண்டும் என்னும் விருப்பத்தை விண்ணப்பித்தபோது அதனையும் நிறைவேற்றினான் ஆலவாய்ச் சொக்கன்.
திருவாரூரில் வாழ்ந்து வந்த கமலை ஞானப்பிரகாசரே தன் குருவென இறைவன் உணர்த்தியதை முன்னிட்டு ஆரூரையடைந்து ஆசாரியமூர்த்தியின் திருவடிகளைப் பணிந்தார் ஞானசம்பந்தர். சொக்கநாதன் அருள்பெற்று சொக்கநாதக் கலித்துறை பாடிய ஞானசம்பந்தர், தன் குருநாதரைக் குறித்து ஞானப்பிரகாசமாலை என்ற நூலினை இயற்றினார்.
பேரின்பப் பாதையில் விளக்கென ஒளிரும் குருநாதர் திருக்கோயில் தரிசனத்திற்குப் போகும்போது கை விளக்கெடுத்து வந்தார் ஞானசம்பந்தர். இல்லம் வந்ததும் இயல்பான மனநிலையில் குருநாதர், ஞானசம்பந்தரை நிற்கப் பணித்து உள்ளே சென்றார். குருநாதர் சொல்லிலிருந்து குன்றி மணியளவும் வழுவாக் கொள்கையுடைய ஞானசம்பந்தர் கைவிளக்கேந்தி வாயிலிலேயே இரவு முழுவதும் நின்றார். பொழுது புலர்ந்ததும் நிட்டா நியமங்களுக்கென வெளிவந்த குருநாதர் சுடர் விளக்கேந்தும் சூரியனாய் தன் சீடன் நின்றிருப்பதையும் இரவு பெய்த மழை சீடன்மேலும் விளக்கின் மீதும் படாமல் விலகிப் பெய்த விந்தையையும் கண்டு வியந்தார்.
தன்முன் சீடனாய் அரும்பிய செல்வன் குருவாய் மலரும் தன்மை எய்தியதை நன்குணர்ந்த கமலையார் பக்குவம் மிக்கவர்களுக்கு உபதேசம் செய்யும் அருட்பணியில் ஈடுபடப் பணித்தார். கண்ணுதற் திருவும் கமலைநகர்க் குருவும் அன்றி வேறொன்றறியாத ஞானசம்பந்தர், “பொதியும் சரி, பொதி சுமக்கும் எருதும் சரி, தம்முடைய தனிப்பட்ட இச்சையின் வண்ணம் செல்வதில்லை. இரண்டுமே தன்னை செலுத்தபவன் இச்சையின் வண்ணமே செல்வதுபோல், என் உடம்புக்கும் உயிருக்கும் தனிப்பட்ட இச்சைகள் வாழ்வேன். எனவே எனக்குரிய வழியையும் தாங்களே காட்ட வேண்டும்++ என்று விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் அரியதொரு பாடலாகவே மலர்ந்தது.
“கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்
சினக்கும் கமலையுள் ஞானப்ரகாச சிதம்பர இன்று
உனக்கிச்சை எப்படி, அப்படியாக உரைத்தருளே!”
பக்குவமெய்திய சீடனின் பணிவுநிலை கண்டு நெகிழ்ந்த ஞானப்பிரகாசர், “திருத்தருமபுரத்தில் சென்றிருந்து சிவ மணம் பரப்புக” என்று பணிக்க, தருமையாதீனத்தின் குரு முதல்வரானார் குருஞானசம்பந்தர். சிவம் பெருக்கும் எட்டு அருள்நூல்களை அருளிச்செய்தார் அவர்.
தருமையாதீன பரம்பரையில் நான்காவது குரு மூர்த்திகளாக எழுந்தருளிய ஸ்ரீ மாசிலாமணித் தேசிகரிடம் உபதேசம் பெற்ற அருளாளராகிய ஸ்ரீ குமரகுருபரர் காசிப் பதியில் குமாரசாமி மடம் நிறுவினார். காலப்போக்கில் அதன் தலைமையகம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டது.
துறைசை எனப்படும் திருவாவடுதுறை ஆதீனம் பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. சிவபெருமானின் முக்கண்களாய் விளங்கிய இத்திருமடங்களில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்டது திருக்கடவூர் திருக்கோவில். மூன்று திருமடங்களில் உள்ள குருமூர்த்திகளின் தரிசனமும் வழிகாட்டுதலும் சிவம் பெருகிச் செழித்த திருக்கடவூரில் அருள்நெறி பன்மடங்கு பெருகச் செய்தது.
“திருவெண்காட்டில் திருவாவடுதுறை மகாசந்நிதானம் மகேசுவர பூசைக்கு அன்னதானக்கட்டளை நிறுவி இருக்கிறதாம்” திருக்கடவூர் கிராமசபையில் இதுபற்றிய ஆலோசனை நிகழ்ந்தது. சிவனடியார்களுக்குப் பாதபூசை செய்து, வரிசையில் அமர்த்தி, அவர்களை சிவபெருமானாகவே பாவித்து அமுது படைப்பதற்கு மகேசுவர பூசை என்று பெயர்.
“நம்முடைய ஏழுமாகாணம் சார்பாக நூறுகலம் நெல் தரலாம் என்று நினைக்கிறேன். சபை தீர்மானத்தின்படி செய்யலாம்” என்றார் நட்சத்திர மாலை கணபதி பண்டாரம். அவரும் குத்தால பிள்ளையும்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் பின் வேலப்ப தேசிகரிடம் திருவெண்காட்டுக் கோவிலுக்கு மகமை நெல் தந்து வந்தவர்கள்.
அவருடைய பரிந்துரையை சபை ஏற்று தீர்மானத்தை செப்பேடாக அடித்து திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடம் சமர்ப்பித்தது. திருக்கடவூர்ச் சீமையின் ஏழு மாகாணங்கள் சார்பாக மணிக் கிராமச்சேரி பிறவிப் பெருமாள் பிள்ளை, பெருநாட்டுக் கட்டளை தானாபதி வேங்கிடத்தையன், உள்மாகாணம் கருப்பட்டியா பிள்ளை, நல்லாடை மாகாணம் திருமலை அய்யன், திருக்குராச்சேரி மாகாணம் சூரிய மூர்த்தியா பிள்ளை, திருவிடைக்கழி மாகாணம் நாகநாத பிள்ளை, ஆக்கூர் மாகாணம் ஆண்டியப்ப பிள்ளை,திருச்செம்பொன்பள்ளி மாகாணம் தம்பா உடையார், கொட்டுச்சேரி மாகாணம் கறுப்ப முதலியார் ஆகியோர் ஒப்பமிட்ட இந்த சாசனத்தை குண்ணமருதூர் பல்லவராய திருவேங்கடன் எழுதித் தந்தார்.
திருமடங்களின் அரவணைப்பில் புதிய உற்சாகம் பெற்ற திருக்கடவூர் குடிமக்கள் அரசின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். துளஜா மன்னர் ஆட்சியில் இருந்தபோது ஸ்வார்ஷ் பாதிரியார் தரங்கம்பாடியில் இருந்து தஞ்சை சென்றது அக்காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
“வெள்ளையர் அரசுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்வார்ஷ் பாதிரியார் தன்னுடன் இருந்தால் நல்லதென்று மன்னர் நினைக்கிறாரோ?” திருக்கடவூர் வந்த ராஜ பிரதானியிடம் மெள்ள விசாரிக்க முற்பட்டார் விவல்வநாதர். அவர் பிடி கொடுக்கவில்லை.
துளஜா மன்னரின் சுவீகார புத்திரர் இரண்டாம் சரபோஜியின் நியமனத்தை வெள்ளைக்காரர்கள் ரத்து செய்தாலும் பின்னர் ஏற்றது ஸ்வார்ஷ் பாதிரியாரால் தான் என்று பேச்சு நிலவியது. தன்னை சிறுவயது முதல் வளர்த்து அரச நியமனத்தையும் மீட்டுத் தந்த ஸ்வார்ஷ் பாதிரி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார் இரண்டாம் சரபோஜி.
திசைகளை சிலிர்க்கச் செய்யும் ஒரு தெய்வீக சம்பவத்திற்காக இரண்டாம் சரபோஜியை திருக்கடவூர் வரச் செய்தது காலம்.