தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே!
-திருமந்திரம்
“ஏன் ஓய்! இந்த ஸ்வார்ஷ் பாதிரியார் நம் சரபோஜி மன்னருக்கு அனுகூலரா? சத்துருவா? அல்லது அனுகூல சத்துருவா?” சட்டநாதக் குருக்கள் கேட்ட கேள்வி அப்பு குருக்களுக்குப் புரியவில்லை. “ஏன் கேட்கிறீர்?” என்றார். “கும்பினி அரசாங்கத்திடம் போராடி இவரை பாதிரியார் மன்னராக்கினாரே, இப்போது மகாராஜாவுடன் கும்பினி அரசாங்கமே நேரடியாக ஆட்சி செய்யுமாம். ஐயாயிரத்து அறுபத்தியிரண்டு ஊர்களை சுளையாக அள்ளிக் கொண்டு விட்டார்களாம். இதில் வேடிக்கை என்ன தெரியுமா ஓய்! மகாராஜாவுடன் நல்லெண்ணத்தை பலப்படுத்தத்தான் இந்த ஏற்பாடு என்று அந்த ஒப்பந்தத்திலேயே ஒரு ஷரத்து எழுதப்பட்டிருக்கிறதாம்.”
சட்டநாதக்குருக்கள் சொல்லி நிறுத்தினார். “என்ன நல்லெண்ணமோ என்னமோ! சரிசரி! இன்றைக்கு சாயரûக்ஷ பூஜை என் முறை!” என்றபடி நகர்ந்தார் அப்புக்குருக்கள். எதிரே வந்த அமிர்தலிங்க ஐயரைப் பார்த்து தயங்கி நின்றார். “அமிர்து! சௌக்கியமா? சுப்பிரமணியன் எங்கே?” என்றதும், “சௌக்கியம்தான் மாமா! சுப்பிரமணியன் திருவிடை மருதூர் போயிருக்கிறான். வருகிற நேரம்தான்” என்ற படியே நடையை எட்டிப் போட்டார் அமிர்தலிங்க ஐயர்.
ஊரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசினாலும் தன் மகன் சுப்பிரமணியன் மேல் அமிர்தலிங்க ஐயருக்கு அபார நம்பிக்கை. அதிலும் அம்பிகை வழிபாட்டில் திருப்தி. கடந்த வாரம்கூட மார்கழிப் பனியில் சிலிர்த்து நின்ற பசுஞ்செடியை, “அபிராமி! என் அபிராமி!” என்று சுப்பிரமணியன் கட்டிக்கொண்டதாய் அவன் அம்மா கலவரத்துடன் சொன்னபோது அமிர்தலிங்க ஐயர் பரவசமானார். “அடி அசடு! நிறைய பேருக்கு அம்பாள் சந்நிதியில நின்னாக்கூட அம்பாள் தெரியலை. உன் பிள்ளைக்கு பசுஞ்செடியிலே பச்சை நாயகி தெரியறாள்னா எவ்வளவோ குடுத்து வைச்சிருக்கணும்.”
அவர் மனைவி அப்போது மேலும் கலவரமானதை நினைத்து வாய்விட்டுச் சிரித்தபோது தொலைவில் சுப்ரமணியன் வருவது தெரிந்தது. அருகில் வந்த பிள்ளையை சிநேகமாய் பார்த்தபடி, “என்ன சுப்ரமணி! பெரியவர் எப்படி இருக்கார்” என்று கேட்டார் அமிர்தலிங்க ஐயர். பெரியவர் எப்படி இருக்கார்” என்று அவர் சொன்னது பாஸ்கரராயரை. சாக்த நெறிச் சாகரம் என்றவரை தேசமே கொண்டாடியது. சாக்த வழி பாட்டின் சூட்சுமமான அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் எல்லோருக்குமே அவர் சிம்ம சொப்பனம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாகா என்னும் ஊரைச் சேர்ந்த அவரை, அவர் தந்தை கம்பீர ராயர் பிஞ்சு வயதிலேயே சரசுவதி உபாசனையில் ஈடுபடுத்தினார். அதன் பின்னர் காசியிலிருந்த மகாபண்டிதர் நரசிம்மானந்த நாதரிடம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
சாக்த நெறியில் முறையாக ஈடுபடுபவர்களுக்கு வசீகர சக்தி பெருகும். அந்த நாட்களில் காசியை ஆண்ட சரபேந்திரர், சாத்திர நிபுணராகவும் விளங்கினார். அவர் பாஸ்கரராயரைப் பெரிதும் மதித்தார். அதர்வண வேதத்தை ஆழ்ந்து கற்ற பாஸ்கரராயர், தேவி பாகவதம் விரிவுரை செய்வதில் நிகரற்று விளங்கினார். கங்காதர வாஜபேயி என்னும் மேதை இவருக்கு கௌடதர்க்க சாத்திரத்தை போதித்தார்.
பண்டிதத்துவத்தில் பகலவனாய்ப் பொன்னொளி வீசிய பாஸ்கரராயருக்கு ஸ்ரீ வித்யை உபதேசம் செய்து பாஸ÷ரானந்த நாதர் என்னும் தீட்சா நாமத்தை சூட்டிய மகான், சிவதத்த சுக்லர். தஞ்சை மன்னரின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்த பாஸ்கரராயருக்கு ஓர் ஆனந்தச் செய்தி காத்திருந்தது. அவருடைய குருநாதர்களில் ஒருவரான கங்காதர வாஜபேயி திருவாலங்காட்டில் இருக்கிறார் என்ற செய்திதான் அது. திருவாலங்காட்டில் காவிரிக்கு வட கரையில் பாஸ்கரராயரை அரசர் குடியமர்த்தினார்.
அம்பாள் வழிபாட்டில் உபாசனா கர்வமின்றி ஈடுபட்டவர்கள் பாஸ்கரராயரின் பெருமையினை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள். அவருடைய தோளில் கிளி வடிவில் அம்பாளின் பிரசன்னம் இருப்பதை பலர் உணர்ந்திருக்கிறார்கள். உணர விரும்பி வேண்டிக்கொண்டவர்களுக்கு பாஸ்கரராயர் அந்த உண்மையை உணர்த்தியதும் உண்டு.
சாக்த நெறியால் தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு சாக்த நெறியையும் சீர்ப்படுத்தும் பாஸ்கரராயருடன் சுப்ரமணியன் நெருங்கிப் பழகுவதில் அமிர்தலிங்க ஐயருக்கு அலாதியான ஆனந்தம். சுப்பிரமணியனுக்குள் சாக்த ஜோதி சுடர்விடத் தொடங்கியது. அழகே வடிவான அபிராமசுந்தரியின் சந்நிதியில் மணிக்கணக்கில் நிட்டையில் இருப்பதும் அந்தப் பரவசத்திலேயே தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வருவதும் அடிக்கடி நிகழ்ந்த நிலைமாறி அன்றாடம் நிகழத் தொடங்கி விட்டது.
“அமிர்தலிங்க ஐயர் மகன் வாமாச்சாரத்தில் விழுந்து விட்டான் ஓய்! கோவிலுக்குள் வரும்போதும் போகும் போதும் கால்கள் பின்னுவதைப் பார்த்தீரா?” முதலில் கிசு கிசுத்துக் கொண்டவர்கள் காதுபடவே பேசினார்கள். வீட்டுத் திண்ணையில் விச்ராந்தியாக அமிர்தலிங்க ஐயர் அமர்ந்திருந்த நேரம் பார்த்து, அடுத்த வீட்டுத் திண்ணையில் நான்கைந்து பேர்களாய் வந்த மெள்ள அமர்ந்தார்கள்.
“சேதி கேள்விப்பட்டீரா அமிர்து? திருமுல்லை வாசலில் மாரியம்மன் கோவிலில் ஒரு பெண் தன் தம்பி மகளையே தரங்கம்பாடி வெள்ளைக்காரனுக்கு விற்றுவிட்டாளாம். கூசாமல் ஆறு சக்கரமும் ஒரு பணமும் வாங்கி இருக்கிறாள். அவன் அவளை பாதிரி கோவிலுக்கு அழைத்துப் போய், வேதம் சொல்லிக் கொடுத்து தன் பையனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க உத்தேசித்திருக்கிறான். அவன் போட்ட நகைகளுடன் ஓடிப் போனவளைத் தேடி சீர்காழியில் பிடித்திருக்கிறார்கள்.” ஒருவர் மெள்ள ஆரம்பித்தார்.
“வீட்டுப் பிள்ளைகளை வேறு மதத்துக்கு ஒப்புக் கொடுப்பது ஒருவகை அனாச்சாரமென்றால் சொந்தப் பிள்ளைகள் வேண்டாத விஷயங்களில் ஈடுபடுவதை நம்மவாளே பார்த்துக் கொண்டிருப்பதை என்ன சொல்வது?” இன்னொருவர் விஷயத்தை விஷமாகத் திசை திருப்பினார். அமிர்தலிங்கம் புன்னகையுடன் எழுந்து, “பச்சரிசி சாதமோன்னோ! ஜீரணமாகும்வரை இப்படிதான் படுத்தும். கட்டையை சாய்த்து கொஞ்சம் புரளுங்கோ” என்றபடியே உள்ளே போய் கதவை சார்த்திக் கொண்டார்.
அபிராமவல்லியின் அருள்வெள்ளத்தில் தன் பிள்ளை திளைப்பதும் உள்ளே ஆனந்தம் பழுப்பதும் அமிர்தலிங்க ஐயருக்கு நன்றாகத் தெரிந்தது. இந்த உண்மை ஊரில் சிலருக்கு மட்டுமே புரிந்தது.
மார்கழி மாதம் வந்தாலே தஞ்சாவூர் அரண்மனை பரபரப்பாகிவிடும். கும்பினியாருக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்பளிப்புகளை அரசர் சார்பில் அனுப்புதற்கான ஆயத்தங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும். அரசரின் வழக்கறிஞர் சம்பாஜி இந்தக் காரியங்களை கனகச்சிதமாக கவனித்துக் கொள்வார். அந்த ஆண்டு கவர்னருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கும் ஜெனரலுக்கு பதிமூன்றாயிரம் ரூபாய்க்கும் வராகன்கள் தரப்பட்டிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.
இன்னொருபுறம் பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள். மகராஷ்டிர வழக்கப்படி பொங்கலை மகரசாந்தியாகக் கொண்டாடும் மகாராஜா வெண்ணெயால் சிவலிங்கங்கள் செய்து தானமாகத் தருவார். “நவநீத லிங்கம்” என்று இதற்குப் பெயர். பழவகைகள் நைவேத்தியத்துடன் நவநீதலிங்கங்கள் தானமாகத் தரப்படும்.
அந்தத் தைமாதத்தில் அமாவாசைக்கு கடல்நீராட சரபோஜி பூம்புகார் செல்லத் தீர்மானித்தார். முப்படைகளும் அந்த யாத்திரைக்காக ஆயத்தப்படுத்தப்பட்டன. தன்னிடம் இருந்த யானைப்படைகள் குறித்தும் குதிரைப்படை குறித்தும் அளவில்லாத பெருமிதம் அவருக்கு.
யானைக் கூடத்தை பீல்கானா என்பார் மகாராஜா. ஒரு முறை ஒரே நேரத்தில் ஐம்பத்தியிரண்டு யானைகள் நோய் வாய்ப்பட்டு இறந்தன ஆனாலும் அவற்றிக்கு சரியாக மருந்து கொடுத்துப் பராமரித்த காரணத்தால் பாகனின் மாத சம்பளமாகிய ஒன்பது சக்கரங்களை நிறுத்த வேண்டாமென்று அவர் உத்தரவு பிறப்பித்ததில் எல்லோரும் மகிழ்ந்து போனார்கள்.
அதேபோல இந்தியாவிலேயே தஞ்சாவூர்தான் குதிரை வளர்க்க மிகவும் உகந்த இடம் என்பதில் இரண்டாம் சரபோஜிக்கு இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. குதிரைகளுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் செய்ய வேண்டிய வைத்தியங்கள் குறிப்புகளாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டினார் அவர்.
முன்னோர்களுக்கு வழிபாடு நிகழ்த்திய மகாராஜா பூம்புகாரில் தச தானங்கள் செய்தார். பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், நெல், வெள்ளி, உப்பு ஆகியவற்றைத் தானம் செய்யும்போது எள்தானம் பெறுபவருக்கு மாத்திரம் ஐந்நூறு சக்கரங்கள் அளிக்க வேண்டி வந்தது.
ஒருவரிடம் இருக்கும் தீய அதிர்வுகளோ திருட்டியோ எள் மூலம் இன்னொருவரை எளிதில் சென்று சேருமென்பதால் எள் தானம் வாங்க எல்லோருமே தயங்குவார்கள்.
பூம்புகாரில் கடல்நீராடிய மகாராஜா திருக்கடவூர் தரிசனத்துக்கும் வருகிறார் என்ற செய்தி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊரெங்கும் தோரணங்களும் ஈச்சங்குலைகளும் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன. மங்கல வாத்தியம் முழங்க, குதிரையை விட்டிறங்கிய மகாராஜாவுக்கு பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டது.
கொடிமரத்திற்கருகே வீழ்ந்து வணங்கி, உள் பிராகத்தின் இடதுபுறம் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமானையும் திருமகளையும் தரிசித்து, சபாநாயகர் சந்நிதியில் மனமுருகி நின்று புலத்தியர் வழிபட்ட புண்ணியவர்த்தனர், ஆதி வில்வ வனநாதர், தட்சிணாமூர்த்தி என ஒவ்வொரு சந்நிதியாய் நின்று, கள்ள வாரணப்பிள்ளையார் சந்நிதிக்கு வந்தார் சரபோஜி. அங்கே தீபாராதனை ஆனதும் நந்தியை வலம் வந்து அமுதகடேசர் சந்நிதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன்னர் பெயரில் அர்ச்சனை ஆராதனைகள் நிகழ, குருக்கள் கைகளில் வழங்கிய இலைவிபூதியைக் கண்களில் ஒற்றிக் கொண்டு நெற்றி நிறையத் தரித்தார் அரசர். கால சம்ஹார மூர்த்தி பாலாம்பிகைக்கு தீபாராதனை காட்டி, அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரருக்கும் மஹாமிருத்யுஞ்சயச் சக்கரத்திற்கும் தீபாராதனை ஆனதும் மன்னருக்கு பரி வட்டம் கட்டப்பட்டது. மாலைகள் அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டு அம்பாள் சந்நிதி நோக்கி மன்னர் அழைத்துச் செல்லப்பட்டார். சித்திரை எமசம்ஹாரத் திருவிழா ஏற்பாடுகள் பற்றி வினவிய வண்ணம் அபிராமி சந்நிதிக்குள்ளே அடியெடுத்து வைத்தார் மன்னர். எதிர்ப்பட்டவர்கள் கைகட்டி வாய்பொத்தி நிற்க மன்னரின் கண்களோ மூலமண்டபம் அருகே சுவரில் சாய்ந்து கண்கள் மேலே செருக அமர்ந்திருந்த மனிதரின் மீது நிலைத்தது.
“அடடா! மகாராஜா வர்றதுக்கு முன்னேயே சுப்பிரமணியனை எழுப்பி விட்டிருக்கப்படாதோ!!”அங்கலாய்த்த அந்தணர் பக்கம் சரபோஜி மன்னர் திரும்ப, அவர் சட்டென ஒளிந்துகொள்ள சுடர்களின் விகசிப்பில் வாய்விட்டுச் சிரித்தாள் அபிராமி.