சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந்தனி யிருப்பார்க்கு இதுபோலும் ஒரு தவமில்லையே!
-அபிராமி பட்டர்
அபிராமி சந்நிதியில் தனியொருவராய் முதுகு நிமிர்த்தி அமர்ந்திருந்த சுப்பிரமணியன் அசைவற்றிருந்தார். கைகள் மேல்முகமாய் விரிந்த நிலையில் துடைகள் மீதிருந்தன. உள்ளங்கைகளின் மேல் அதீதமான சக்தியின் மெல்லிய அழுத்தத்தை உணர்ந்தார். தன்னிரு கரங்கள்மீதும் சிற்றாடை உடுத்திய சின்னஞ் சிறுமியின் பாதங்கள் ஜதி சொல்லி அசைவது போல் தோன்றியது. சற்றே நிமிர்ந்திருந்தது. நெற்றிக்கு நடுவே நீள்சுடர் ஒன்று அசைந்து கொண்டிருந்தது. அதில் இடுப்பில் கையூன்றிய கன்னங்கரிய கன்னி முறுவலிப்பது தெரிந்தது. இருதய மையத்தில் அநாகதத்தின் துடிப்பில் உடலெங்கும் மெல்லதிர்வுகள் ஓடின.
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரியில் விழித்திருந்து தியானத்தில் லயித்திருந்து விடியற் பொழுதிலேயே அபிராமி சந்நிதிக்கு வந்து நிஷ்டையைத் தொடர்வார் சுப்ரமணியன். மூடிய கண்களிலிருந்து ஓடிய தாரைகள் கன்னங்களில் மண்டியிருந்த தாடியில் கலந்தன. பலரும் வருவதை காலடி ஓசைகளால் உணர்ந்தாலும் கண்களைத் திறக்க முயலவுமில்லை; முடியவுமில்லை.
ஆகர்ஷணமும் சக்தியும் மிக்க அவரின் இருப்பு அனைவரையும் சலனப்படுத்தியது. அகங்காரம் உள்ளவர்கள் அவஸ்தைக்குள்ளானார்கள். உள்ளே ஓரளவு படிந்தவர்கள் அவருடைய இருப்பின் ரம்மியத்தை உணர்ந்தவர்கள். “சாஸ்திரோக்தமான இடத்தில இப்படியும் ஒரு பிறவி.” அரசரின் செவிகளில் விழும்படி முணுமுணுத்தார் ஒருவர். அதுவரை சலனமில்லாதிருந்த சரபோஜியின் முகம் சுருங்கியது. புருவம் சுருக்கி அருகிலிருந்தவரைப் பார்த்தார். “மகாராஜா! இவன் சுப்பிரமணியன். அமிர்தலிங்கையர் மகன். வேதங்களெல்லாம் நன்கு படித்திருக்கிறான். சமீப காலமாய் வாமாச்சாரத்தில் விழுந்து விட்டானோ என்னவோ, இப்படியேதான். சதா சர்வ காலம் போதைதான்.” தோன்றியதையெல்லாம் சொன்னார்கள். தங்களை ஏறெடுத்தும் பாராத சுப்பிரமணியன் மேல் அவர்கள் அடி மனங்களில் ஒளிந்திருந்த ஆற்றாமை பொங்கி வெளிவந்தது.
“அவன் அப்பாவும் பிராம்மணோத்தமர்தான். ஆனால் மகனைப்பற்றி அவரிடம் பேச வாயெடுத்தாலே எங்களை உதாசீனப்படுத்துகிறார்.” வளவளத்தவரைக் கையமர்த்தி விட்டு சுப்பிரமணியனை உற்றுப்பார்த்தார் சரபோஜி.
முகத்தில் அரும்பியிருந்த வியர்வையும், புருவங்கள் உயர்வதும் சுருங்குவதும், அவரை ஏனோ சலனப்படுத்தியது. புலர்காலையில் கடல்நீராடியதும் நெடுந்தொலைவு கடலில் வந்ததும் அவரைக் களைப்புறச் செய்தாலும் இன்னொரு விஷயம் அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. திருக்கடவூர் அந்தணர்களில் சிலர் தனக்குத் தந்த வரவேற்பில் ஒரு போலி மரியாதை இருப்பதுபோல் உணர்ந்தார். தனக்கு அதிகாரமில்லை என்பது அறிந்துகொண்டே அலட்சியம் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்பட்டதிலிருந்தே அவர் சரியாக இல்லை.
தனக்கு கும்பினியார் என்ன மரியாதை தந்து வைத்திருக்கிறார்கள் என்று இவர்களுக்குக் காட்ட வேண்டும். எதையாவது செய்து நம்மை நிரூபிக்கத்தான் வேண்டும் என்று சரபோஜிக்குத் தோன்றிவிட்டது.
“அவரை உலுக்கி எழுப்புங்கள்” மகாராஜாவின் ஆணையை அங்கிருந்த அந்தணர்களில் புகார் சொன்னவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. சுப்ரமணியனை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொல்வார், அதை வைத்தே அமிர்தலிங்க ஐயரையும் அவர் மகனையும் காலம் முழுவதும் கேலி பேசலாம் என்பதுதான் அவர்கள் எண்ணம்.
அவர்கள் யோசிப்பதற்குள் காரியம் கைமீறியது. உடன் வந்த காவலர்கள் உலுக்கி எழுப்ப சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தார் சுப்ரமணியன். இமைகள் தாமாக மூடிக்கொள்ள மறுபடி மறுபடி இமைகளைத் தேய்தார். “நீர் அந்தணர் தானே!’ அதிகாரமாய்க் கேட்டார் சரபோஜி. அதற்குள் மற்றவர்கள் சுப்பிரமணியனை உலுக்கினார்கள். “மகாராஜா கேட்கிறார்! பதில் சொல்லும்! பதில் சொல்லும்!” சுப்பிரமணியனால் தலையை மேலும் கீழும் அசைக்க மட்டுமே முடிந்தது.
“எதிரில் நிற்பவர் அரசரென்று தெரிந்தும்கூட எழுந்து நிற்கிறானா பார்!” யாரோ ஒருவர் சொன்னது சரபோஜியின் காதுகளில் விழுந்தது. அதை கவனியாதவர்போல் சுப்பிரமணியன் முன் குனிந்து, “இன்று என்ன திதி++ என்று கேட்டார். மறுபடி சுப்பிரமணியனை உலுக்கினார்கள். “சொல்லும்! இன்று என்ன திதி? மகாராஜா கேட்கிறார். சொல்லும்!” உள்ளும் புறமும் நிரம்பிக் கிடந்த குளிர்ந்த ஒளியில் லயித்துக் கிடந்த சுப்பிரமணியத்தின் இதழ்களில் புன்னகை அரும்பியது. “இன்று பௌர்ணமி” என்றார்.
சரபோஜியின் முகம் சிவந்தது. இதையும் கேலியென்றே கருதினார். சுற்றியிருப்பவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் உரத்த குரலில் கேட்டார். “ஓஹோ! அப்படியானால் இன்று நிலவு உதிக்குமோ?” அடுத்த விநாடி உறுதியான குரலில் ஓங்கியடித்தார் சுப்பிரமணியம். “உதிக்கும்! நிச்சயம் உதிக்கும்! அறியாத மனிதர்களுக்குதான் தேய்பிறையும் வளர்பிறையும். ஸ்ரீபுரத்தில் எல்லா நாட்களும் பவுர்ணமி தான்! உதிக்கும்.”
“இன்றிரவு நிலவு உதிக்காவிட்டால் இந்த மனிதரை சிரச்சேதம் செய்யுங்கள்” ஆத்திரத்துடன் கத்திவிட்டு அரை குறையாய் தரிசனம் செய்துவிட்டு தன்னுடைய முகாமுக்குத் திரும்பினார் சரபோஜி. ஒருநாளும் அவருக்குள் இத்தனை பதட்டம் இருந்ததில்லை. மதிய உணவுக்கு அமர்ந்த சரபோஜியின் உடலில் ஆவேசத்தின் நடுக்கம் தொடர்ந்தது.
“என்ன திமிர்! என்ன திமிர்!” மனதுக்குள் குமுறிக் கொண்டே அன்னத்தை வாயில் வைத்தார். அமுதம் போன்ற உணவு ஆலகாலமாய்க் கசந்தது.
உணவுண்டதாய்ப் பேர் பண்ணிவிட்டு வந்தவர்முன் தயங்கி நின்றான் குதிரை லாயத் தலைவன். “மாதவனுக்கு தஹி புத்தி தந்தாயா?++ அதட்டலாய்க் கேட்டார் அரசர். அவருக்கு மிகவும் பிரியமான குதிரையின் பேர் மாதவன். குதிரையின் சூடு தணிவதற்காக தயிர்ச்சோறும் அரை சேர் வெங்காயமும் நான்கரை டேங்க் வெந்தயமும் தரச் சொல்லி குதிரை வைத்தியர் குறிப்புக் கொடுத்திருந்தார்.
“மாதவன் தயிர்சோறு உண்ணவில்லை. அடம் பிடிக்கிறது” என்றதும் சரபோஜிக்குக் காரணமேயில்லாமல் கோபம் வந்தத. “சுட்டுக் கொல்லு” என்று முணுமுணுத்தபடி மஞ்சத்தில் சென்று விழுந்தவர் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தார்.
தன்னிலைக்குத் திரும்பிய சுப்பிரமணியனிடம் நடந்ததை எல்லோரும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவரோ அலட்டிக் கொள்ளவில்லை. அமாவாசையும் பவுர்ணமியும் அம்பாள் சித்தம். அவள் சொல்லிச் சொன்னதன்றி எனக்கென்று சுயமாக எந்தச் சொல்லுமில்லை. அவன் விரும்பினால் நிலவு உதிக்கட்டும். ஆனால் அவளுக்கு ஆட்பட்ட இந்த உயிரைப்பறிக்க அரசனுக்கு உரிமையில்லை. அவள் திருமுன்னர் அரிகண்டம் பாடுவேன்.”
சுப்பிரமணியன் சொன்னதும் அதிர்ந்து போனார்கள் ஊர்காரர்கள். விளையாட்டு வினையாகி விட்டதோ என்ற கவலை எழுந்தது. “நாம் அனைவரும் மகாராஜாவிடம் போய்…” என்று தங்களுக்குள் பேசியவர்களைக் கையமர்த்தி விட்டு சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கி வெளியே வந்தார் சுப்ரமணியன்.
அபிராமி சந்நிதிமுன் ஊரே திரண்டு விட்டது. றீறு கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த பலகையின்மேல் கைகூப்பி நின்றிருந்தார் சுப்பிரமணியன். கீழே நெருப்பு கொழுந்து விட்டெரிந்தது. மூலாதாரத்தில் மூண்டெழும் கனலாய் வடிவமில்லாத வடவை அனலாய் எரிந்த நெருப்பிலிருந்து உதித்தவர்போல் நின்ற சுப்பிரமணியன் பாடத் தொடங்கினார்.
“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே!”
தேனில் தோய்ந்த கற்கண்டுச் சொற்கொண்டு வந்து விழுந்தன பாடல்கள். ஒரு பாடலின் ஈற்றுச்சொல்லே அடுத்த பாடலின் தொடக்கமாய், அந்தாதியாய் வந்த பாடல்களை சுற்றியிருந்தவர்கள் குறித்துக் கொண்டனர். அச்சத்தின் சுவடே இல்லாமல் அம்பிகையின் அருளமுதத்தை அள்ளிப் பருகிய நிறைவின் பிரவாகமாய் வந்தது அபிராமி அந்தாதி. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒவ்வொரு கயிறாய் அறு படுகையில் சுப்பிரமணியன் ஒருவரைத் தவிர ஒவ்வொருவரும் சற்றே கலங்கினாலும் பாடல்கள் பிரவாகமெடுக்க அங்கே புதியதொரு சக்தி நிலை சூல்கொண்டது.
தவத்தில் இருக்கும்போது தன்னுடைய கரங்களில் பதிந்த பிஞ்சுப் பாதங்கள் தன் சிரசில் பதிவதை நன்குணர்ந்தார் சுப்பிரமணியன். பாஸ்கரராயர் போன்ற அம்பிகை அடியார்களுடன் கூடி யாமள தந்திரத்தையும் சௌந்தர்ய லஹரியையும் உபாசித்து மனதில் இடையறாது செபிக்கும் மந்திரம், சிந்துரவண்ண ரூபம் கொண்டு நிற்பதை அகக்கண்களால் அவரால் தரிசிக்க முடிந்தது.
“சென்னிய துன்பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னிய துன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய உன்னடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்பர ஆகம பத்ததியே.”
தனக்குள் ஆனந்த ரூபமாய் நிரம்பி நின்ற அம்பிகையே வான்வரை வளர்ந்து நிற்கும் திருக்கோலம் சுப்பிரமணியனுக்கு தரிசனமானது. மறைகள் தொழுகிற அவளின் திருவடி மலர்கள், வெண் காட்டில் ஆடும் சிவபெருமானின் சடா பாரத்தில் மலர்களாய் மிளிர்வதையும் அந்த தரிசனத்தில் அவர் கண்டார்.
“ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள்; மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே!”
சுப்பிரமணியன் பாடப்பாட, நிலவு நிச்சயம் உதிக்கும் என்னும் எண்ணம் மனங்களிலும் உதித்தது. அவர் மேல் பழிசொன்ன அந்தணர் கூப்பிய கரங்களுடன் குரல் தழுதழுக்க அமிர்தலிங்க ஐயரிடம் சொன்னார், “உங்கள் மகன் சுப்பிரமணியன் இல்லை அய்யா! அவன் அபிராமி பட்டன. அபிராமியின் அருமந்தச் செல்வன். உங்கள் பரம்பரைக்கு தலைமுறை தலைமுறையாய் தொண்டூழியம் செய்தாலன்றி எனக்கு விமோசனம் கிடையாது.” அழுது நின்றவரை அணைத்துக்கொண்டார் அமிர்தலிங்க ஐயர்.
தன் மனச்சந்நிதானத்தில் உயிரையே பீடமாக்கி எழுந்தருளும் அம்பிகைக்கு திருநாமங்கள் சொல்லி அர்ச்சனை செய்தார் அபிராமி பட்டர்.
“பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!”
அருச்சனை செய்ததுடன் நில்லாமல் வினைகளின் திரைகள் விலக்கி அக்கண்களில் தெரியும் அம்பிகையின் திருவுருவுக்கு தீபாராதனை செய்தார்.
“செப்பும் கனகக் கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே!”
உள்நிலை தரிசனத்தில் உயிர்சிலிர்த்த பட்டரிடமிருந்து ஒரு பிரகடனம் போலப் பிறந்து எழுபத்தொன்பதாவது பாடல்.
“விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதஞ்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டினியே!”
அம்மம்மா! மூடிய இமைகளுக்குள் மூண்டெழுந்த சோதியாய், வானின் நீலப் பரப்பிலெழும் நீதியாய், சிலீரென எழுந்தாள் அம்பிகை. செம்பட்டுடுத்தி, சர்வாலங்கார பூஷிதையாய் நின்ற நீலி தன் திருச்செவியில் சுடர்விடும் தாடங்கம் கழற்றி, பந்தாடும் பாவனையில் சுழற்றி வீசியெறிய, வானில் தகதகத்தது பெருஞ்சோதி. அத்தனை பேரும் பார்க்கப் பார்க்க வட்ட வடிவில் பொலிந்து தழலின் வீச்சு குளிர்ந்து முழுநிலவாய் தகத்தகத்தது பெருஞ்சோதி. அத்தனை பேரும் பார்க்க பார்க்க வட்ட வடிவில் பொலிந்து தழலின் வீச்சு குளிர்ந்து முழுநிலவாய் தகத்தகத்தது மகா மாயையின் தாடங்கம்.
“அபிராமி! தாயே! திரிபுர சுந்தரி!” அலையடித்த ஆனந்தப் பரவசத்தில் ஊர் மக்கள் பட்டரை வணங்கப் பலகையை நெருங்க, அனைவரையும் விலக்கிக்கொண்டு வந்து நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார் சரபோஜி.