கலையாத கல்வியும் குறையாத வயதுமொரு
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
அலையாழி அறிதுயில்கொள் மாயனது தங்கையேல் செய்!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி;
அருள்வாமி; அபிராமியே!
-அபிராமி பட்டர்
(அபிராமியம்மை பதிகம்)
பலகையில் சுப்பிரமணியனாய் ஏறியவர் அபிராமி பட்டராய் இறங்கினார். அவரை வாழ்த்திக் குரலெழுப்பியவர்களைக் கையமர்த்திவிட்டு நூறு பாடல்களையும் நிறைவு செய்தார். மனதுக்குள் அவர் எழுதிப் பார்த்திருந்த விநாயகர் காப்பினையும் வெளியிட்டார்.
“தாரமர்க் கொன்றையும் சண்பகமாலையும் சார்த்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே!”
மரபுப்படி நூற்பயன் அருளச்சொல்லிக் கேட்டனர் புலவர்கள்.
“ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத்த தொழுவார்க்கொரு தீங்கில்லையே!”
என்று நூற்பயன் அருளிய அபிராமிபட்டர், மேனி விதிர்ப்படங்காமல் நின்றிருந்த சரபோஜி மன்னரிடம் சென்று வணக்கம் தெரிவித்தார்.
தங்களைக் கருவியாக்கி இந்த வணக்கத்தை அப்போதே செலுத்தும் நிலையில் நான் இருந்திருந்தால் இந்த அற்புதமே நிகழ்ந்திருக்காது. சமூகத்திற்கு என் வந்தனங்கள்.” தன்முன் குவிந்த அபிராமிபட்டரின் கைகளைப் பிரித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் சரபோஜி.
அம்பிகை எழுந்தருளிய அற்புதத்தைக் கொண்டாடும் விதமாக அனைத்து சந்நிதிகளுக்கும் அபிராமிபட்டரை அழைத்துச் சென்றார்கள். கருதிய வண்ணமே கைகூட அருளும் கள்ள வாரணப் பிள்ளையார் திருமுன்பு நின்றபோது தயங்கித் தயங்கி ஒருவர் கேட்டார்.
“சுவாமி! அபிராமி அந்தாதிக்கு விநாயகர் காப்பு பாடுகிறபோது தில்லை விநாயகரைப் பாடினீர்கள். இவரைப் பாடாததும் ஏனோ?”
அதற்குள் முந்திக்கொண்டு அருகிலிருந்தவர் சொன்னார். “இவர் கள்ள விநாயகர். அமுதக் குடத்தை மறைத்து வைத்துபோல் அந்தாதியை மறைந்து விட்டால் என்ன செய்வது? தில்லையில் இருப்பவர் கற்பக விநாயகர். அதனால்தான் அவரைப் பாடியிருக்கிறார்!”
சமத்காரமான இந்த பதிலைக் கேட்டுச் சிரித்துக் கொண்ட அபிராமிபட்டர், கண்கள் கசிய கள்ள வாரணத்தைச் சுட்டிச் சொன்னார். “என் ஐயனுக்கு விநாயகர் காப்பாய் ஒரு பாடல் போதுமா என்ன? ஒரு பதிகமே பாடுகிறேன்; கேளுங்கள்.” கணீரென்று பாடத் தொடங்கினார்.
“பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமும் ஆகிவந்து என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!”
திருக்கடவூரில் அமுதகடேசனைப் பாட வந்த தேவார மூவரையும் தன்னைப்பாடச் செய்த தமிழ்விரும்புத் தெய்வமாய் வீற்றிருப்பவர் கள்ளவாரணம். அவர்முன் முன் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடுபவர்களுக்கு எக்குறையும் வாராது என்னும் பொருள்பட,
“இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொல்லி ஏத்தி நன்றாய்
உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க்கட வூர்வாழும் கள்ள விநாயகனே!”
என்று ஏழாம் பாடலில் அருளினார்.
கள்ளவாரணப்பதிகத்தை நிறைவு செய்து கொண்டு அமுத கடேசர் சந்நிதியில் நின்ற அபிராமிபட்டருக்கு பக்தி பெருக்கில் கண்ணீர் மடையுடைத்தது. அந்தாதி பாடிய கணங்களின் தீவிரத்திலெல்லாம் அம்மையப்பராகவே தன் முன் காட்சியளித்த பெருமானை அகக்கண்ணில் மீண்டும் கண்டு மனமுருகினார்.
பெற்றோர், மனைவி, குழந்தைகள், உலக இன்பங்கள் என்னும் எல்லைக்குள் சுழல்பவர்களை திருத்தி ஆட்கொள்ளமாட்டாயா என்று விண்ணப்பித்து பெருமானின் திருமேனி வர்ணனை அமையும் விதமாய் அமுதகடேசர் மீது பதிகம் பாடினார் அபிராமி பட்டர்.
“தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
தாயைமென் குதலைவாய்ச் சேயை
தனத்தை யவனத்தை இன்போகத்தைத்
தையல்நல் லாள்பெறும் திறத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
ஆழ்கடல் படுதுரும் பாகி
அலைகழிந் தேனைப் புலப்படத் திருத்தி
ஆட்கொள நினைத்திலாய் அன்றோ!
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
சிலம்பொலி ஆரவே நடித்துச்
செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
திருவெண்ணீறு உடலெலாந் தரித்துக்
கந்தைகோ வணம்தோல் பொக்கணந் தாங்கிக்
கபாலமொன் றேந்தி நின்றவனே!
கனவளம் செறிந்த கடவையெம் பதியாய்
காலனைக் காய்ந்ததற் பரனே!”
அமுதகடேசரைப் பாடிய அதே உருக்கத்துடன் கால சம்ஹாரர் மேல் காதல் கொண்ட பெண்ணின் நிலையிலிருந்து பதிகம் பாடினார் அபிராமிபட்டர். நாயகீ பாவத்தில் அமைந்த அந்தப் பதிகம் அருள்நலனும், காலசம்ஹாரரின் புகழ்நலனும் பொங்கும் தன்மையில் அமைந்தது.
“குயில்மொ ழிப்புணர் முலைக்கருங் கணொடு
கோதை பாதியுறை ஜோதியார்
கொக்க ரித்துவரு தக்க னாருயிர்
குறைத்தெ ழுந்திடும் மறத்தினார்
கயிலை நாதர்கண நாதர் பூதியணி
காய தாயகமு மாயினார்
கால காலகட வூரர் கோலமது
கண்டு கைதொழுது வண்டுகாள்;
அயலி னும்கொடிய அம்பினால் மதுர
ஆர வாரமிசை வேயினால்
அந்த ரந்தனில் அசைந்து நின்று அடரும்
அம்புலிக் கொடிய தீயினால்
துயில்து றந்துமெய் மறந்து வாடிமிக
சோக மோகம் பிறந்துளத்
தோதகப் படவும் நானகப் படுதல்
சொல்லுவீர் மதனை வெல்லவே!”
அபிராமி சந்நிதிக்கு மீண்டும் வந்து நின்ற அபிராமி பட்டர், அந்தாதி பாடியும் ஆற்ற மாட்டாதவராய் அபிராமி அம்மை மீதும் பதிகம் பாடினார். அதற்குள் அரசன் ஆணை பிறப்பித்திருந்த வண்ணம் செப்புப் பட்டயம் தயாராகி இருந்தது. அதில் ஒவ்வோர் ஆண்டும் அபிராமிபட்டரின் சந்ததிக்கு எட்டு நாழி நெல் வழங்கும் கரோத்திரிய உரிமை தரப்பட்டிருந்தது. திருக்கடவூர் வட்டம், ஆக்கூர் வட்டம், திருவிடைக்கழி வட்டம், நல்லாடை வட்டம், செம்பொன் பள்ளி வட்டம் ஆகிய இடங்களில் நெல்பெறும் உரிமை தந்த அரசன் மீண்டும் அபிராமிபட்டரை வணங்கி விடை பெற்றான்.
எல்லோரும் அபிராமிபட்டரின் பெருமைகளையும் அவர் பாடிய பதிகங்களின் அருட்தன்மையையும் பல வாறாகப் புகழ்ந்த வண்ணம் கலைந்து சென்றனர். நடந்து முடிந்த அற்புதச் சம்பவத்தின் அதிர்வுகளிலேயே ஆழ்ந்தவராய் சிலை போல நின்று கொண்டிருந்தார் ஒருவர். ஆனால் அவர் மனதில் ஒரு திட்டம் உருவானது. சந்நிதியில் நின்று அபிராமியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்ற அவரின் பெயர்… பிச்சைப்பிள்ளை.