“கைப்போது கொண்டுன் முகப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன்;
கண்போதி னாலுன் முகப்போது தன்னை யான்
கண்டு தரிசனை புரிகிலேன்;
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்;
மோசமே போய் உழன்றேன்;
மைப்போத கத்தின் நிகரெனப் போதும்எரு
மைக்கடா மீதேறி யே
மாகோர காலன் வரும்போது தமியேன்
மனங்கலங் கித்தி மயங்கும்
அப்போது வந்துன் அருட்போது தந்தருள்
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
-அபிராமி பட்டர்
(அபிராமியம்மை பதிகம்)
டேனிஷ்காரர்களும் டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் வெவ்வேறு கரைகளில் வந்து கால்பதித்தாலும் நாடு கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமான பின்னர் விதம் விதமாக மாற்றங்கள் விளைந்தன. வாழ்க்கையின் பகடைகள் உருள்வதும் வெற்றிகள் தோல்விகளாய்க் கவிழ்வதும் வேக வேகமாய் அரங்கேறின.
திருக்கடவூரின் தேரோடும் வீதிகளும் ஏரோடும் வயல்களும் பெரிதாய் மாறிவிடவில்லை. கலப்பை கொண்டு உழுபவர்களுக்கு களஞ்சியம் நிறைய தானியங்களை வாரித்தந்தாள் பூமித்தாய். வீதிகளை நிறைத்தது வேள்விப்புகை. தரிசனத்துக்கென்று வரும் யாத்ரீகர்கள் ஊருக்குள் நுழைந்த மாத்திரத்தில் சந்தோஷத்தை உணர்ந்தார்கள்.
பல்வேறு மகுடங்கள் பணிந்த சந்நிதிகளும், ஆண்டாண்டு காலமாய் ஆண்டுவந்த அரசர்கள் விரிவு செய்த பிரம்மாண்டமான திருக்கோயிலும் ஆகர்ஷணத்துடன் விளங்கின. அபிராமி பட்டர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் திசைகளெங்கும் பரவின. தமிழகத்தில் சாக்த வழிபாடு மீண்டும் செழித்து வளர அபிராமி அந்தாதி ஆதாரமாய் நின்றது. மார்க்கண்டேயர் எமபயம் நீங்கி சிரஞ்சீவித்துவம் பெற்றதால் சாந்தி ஹோமங்களுக்கு மக்கள் திருக் கடவூரைத் தேடிவரத் தொடங்கினார்கள். அதே போல அரச தண்டனை பற்றிய அச்சம் இருப்பவர்களும் அபிராமியம்மன் சந்நிதியில் வந்து பிரார்த்தனை செய்தார்கள்.
இத்தனை பேருக்கும் நடுவில் சட்டநாதக் குருக்கள் மகன் சந்திரமவுலீசுவரன் பற்றிய பேச்சும் திருக்கடவூரில் பரவியது. அபிராமிபட்டருக்கு அம்பாள் அருளிய வரலாற்றை குழந்தைப் பருவம் முதல் கேட்டு வளர்ந்த சந்திர மவுலீசுவரன், தனக்கும் அம்பாள் தரிசனம் தருவாள் என்று நம்பினான்.
ஒவ்வோர் அமாவாசையிலும் ஆகாயத்தில் நிலவு தெரியுமென்று விடிய விடிய விழித்திருக்கத் தொடங்கினான். தொடக்கத்தில் பெற்றோரும் மற்றவரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. நாட்கள் போகப் போக அபிராமி எந்த நேரத்திலும் எதிர்ப்படுவாள் என்னும் எண்ணம் வலுப்படத் தொடங்கியது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்துக் கொண்டேயிருப்பது வாடிக்கையாகிவிட்டது.
சட்டநாதக் குருக்கள் பக்குவமானவர். ஆன்மீகத் தேடலுக்கு தீவிரமான ஆத்மசாதனை அவசியமென்பதை அறிவார். அத்தகைய சாதனைகள் இல்லாதபோது அதீதமான கற்பனை மனதை ஆக்கிரமித்து நிலைகுலையச் செய்யுமென்ற அச்சம் அவருக்கிருந்தது. சாக்த நெறியில் சிறந்து விளங்கிய பலரும் அவருக்கு நெருக்க மானவர்கள். யாரிடமாவது சந்திர மௌலீசுவரன் முறையான தீட்சை பெற்றால் நல்லதாயிற்றே என்று நினைத்தார்.
சந்திரமௌலீசுவரன் பிடிகொடுக்கவில்லை. “எனக்கு குரு தேவையில்லை. அம்பாள் நேரடியாக வந்தென்னை ஆட்கொள்ளுவாள்” என்று முரண்டு பிடித்தான். சட்டநாதக் குருக்கள் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். “பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் என்று அபிராமி பட்டரே பாடவில்லையா? பாதையை சரியாகத் தேர்ந்தெடுக்காவிட்டால் பயணம் போக முடியுமா?” கெஞ்சியும் மிஞ்சியும் சொல்லியும் சந்திரமௌலீசுவரன் கேட்பதாயில்லை.
தன்னுடைய வழிதான் சரி என்னும் எண்ணமும் இருந்தது. தந்தை சொல்லச் சொல்ல சந்தேகமும் பிறந்தது. இரு வேறு உணர்ச்சிகள் நடுவே அவன் மனம் அலைமோதத் தொடங்கியது. ஆகாயத்தில் அம்பிகை தோன்றுவாள் என்னும் எண்ணம் வலுவிழந்தது. எதிர்ப்படும் பெண்கள் எவர் விடிவிலாவது என்னும் எண்ணம் வலுவிழந்தது. எதிர்ப்படும் பெண்கள் எவர் வடிவிலாவது அம்பிகை வருவாளா என்று கோயில் வாயிலில் நின்று கொண்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.
சுவாமி சந்நிதியின் வெளிப்பிரகாரத்தில் பூக்கட்டும் பிச்சைக்கண்ணு மகள் காத்தாயி, அப்பாவிடம் பூக் குடலையைக் கொடுக்க தினமும் மாலையில் வருவாள். உள்ளே போகும்போதும் வெளியே வரும்போதும் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் சந்திரமௌலீசுவரனைப் பார்த்தால் அவளுக்கு பயமாக இருக்கும். அவனைக் கடக்கும் போது வேகவேகமாய் தாண்டிப்போய் இன்னும் பார்க்கிறானா என்று தொலைவில் நின்று திரும்பிப் பார்ப்பாள்.
நாட்கள் போகப் போக காத்தாயிக்கு அச்சம் விட்டுப் போனது. கோயில் வாயிலில் சந்திரமௌலீசுவரன் நிற்பானா என்ற எதிர்பார்ப்புடனே பூக்குடலையைக் கொண்டு வருவாள் காத்தாயி. சந்திரமௌலீசுவரனை ஒரு சின்னப் புன்னகையுடன் கடந்து போகத் தொடங்கியவள் முகம் பார்த்து முறுவலிக்கத் தொடங்கினாள்.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் சந்திர மௌலீசுவரனுக்குள்ளும் ஏதோ அசைந்தது. அந்த உணர்வு பக்தியல்ல; அவள் அம்பிகையுமல்ல என்பது புரிந்தது. அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் காத்தாயி தானாகவே முன்வந்து பேச்சுக் கொடுத்தாள். “இங்கேயே நிக்கறதுக்கு நந்தவனத்தில வந்து பூப்பறிச்சுக் கொடுத்தா புண்ணியமாப் போகுமில்லே!” சொல்லிக்கொண்டே கடந்து போனவளின் காலடித் தடங்களைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
அதற்கடுத்த நாட்களில் அவனைக் கோயில் வாயிலில் காணவில்லை. அவனை வேறு யாரும் தேடவுமில்லை. வழக்கமாகக் கோயிலுக்கு வரும் பெண்கள் அவன் இல்லாததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தார்கள். காத்தாயி பூக்குடலையுடன் வருவதும் தாமதமாகத் தொடங்கியது. கோயிலில் பூக்குடலையைக் கொடுத்த பிறகும் அவளுக்கு நந்தவனம் போக வேண்டியிருந்தது. அந்தி மயங்கிய பிறகு சந்திரமௌலீசுவரன் வீடு திரும்புவதும், நள்ளிரவுவரை திண்ணையில் புரள்வதும் சட்டநாதக் குருக்களை சஞ்சலப்படுத்தின. அவன் கண்களின் கீழ் படிந்த கருவளையம் அவன் சலனப் பட்டிருப்பதை உணர்த்தியது.
சந்திரமௌலீசுவரனும் குழம்பிக் கிடந்தான். காத்தாயியுடன் இருக்கும் நேரங்களில் பிறக்கும் உற்சாகம் மற்ற நேரங்களில் குற்றவுணர்வாய் மாறியது. காத்தாயி மீது மோகமும் தன்னை அவள் திசைதிருப்பி விட்ட கோபமும் கலந்தே பிறந்தன. ஒரு நாள் சந்திரமௌலீசுவரனைக் காணவில்லை. அவன் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதம் மட்டும் இருந்தது. “அபிராமி என்னை மறுபடி அழைப்பாள். எந்தப் பிறவியிலாவது அழைப்பாள். எந்தப் பாதையில் தொலைந்தேனோ அந்தப் பாதை வழியாகவே அழைப்பாள்” என்று கிறுக்கலாய் வளர்ந்தது கடிதம். வெகுநாட்கள் வெளியே வராமல் குடிசைக்குள்ளேயே பதுங்கிக் கிடந்தாள் காத்தாயி.
அவனை நாகப்பட்டினம் கடற்கரையில் பார்த்ததாகவும் தஞ்சாவூரில் கண்டதாகவும் வெவ்வேறு தகவல்கள் சட்ட நாதக் குருக்களுக்குக் கிடைத்தன. வடதேசத்திலிருந்து கோரக்கர் சமாதிக்கு வந்திருந்த சந்நியாசிகள் கூட்டத்துடன் சேர்ந்து சென்றுவிட்டதாக வந்த தகவல் உண்மையாயிருக்கக்கூடும் என்று சட்டநாதக் குருக்கள் நம்பினார். அவர் வயோதிகமடைந்து மறைந்த பின்னர் அவருடைய மற்ற மகன்களும் சந்திரமௌலியைத் தேடுவதை விட்டு விட்டார்கள். சட்டநாதக் குருக்களின் மனைவி பர்வதம் மட்டும் மரணப்படுக்கையிலும், “சந்துரூ! சந்துரூ!” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். அப்புறம் சந்திரமௌலியை எல்லோருமே மறந்து போனார்கள். அபிராமியைத் தவிர…
இதற்கிடையில் ஆங்கிலேயர் அடுக்கடுக்காய்க் கொண்டுவந்த மாற்றங்கள் கிராமங்களை அதிசயத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. திருக்கடவூருக்கு மின்சாரம் வந்தது. ரயில் வந்தது. மணக்குடி கிராமத்தில் கல்யாண சுந்தரம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முதலாகக் கார் வாங்கி ஊருக்குள் ஓட்டிக் கொண்டு வந்ததையும், காரைப் பார்த்து வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடிவிட்டதையும் கதை கதையாய்ப் பேசினார்கள்.
ஆனைகுளத்தின் கரைகளிலும் பூசைக்குளத்தின் கரைகளிலும் கதைபேசும் கூட்டங்களுக்கு அள்ள அள்ள அவல் கிடைத்துக் கொண்டிருந்தது. கடல்மணல் நிரம்பிய வீதிகளில் மண்டிக் கிடந்தன வண்டித் தடங்கள். சிறுவர்கள் உண்டிவிற்களுடன் திரிந்தனர். சித்தரை மாதம் வந்து விட்டால் ஊரே விழாக்கோலம் பூண்டுவிடும். எம சங்காரத்துக்கு முதல்நாள் பல்லக்கில் எமன் உருவம் முன்னே போக காலசம்ஹாரர் பின்னால் வருவார். எமனைத் துரத்திக் கொண்டு போவதாய் ஐதீகம். பிள்ளைகள் தென்னை ஓலைகளாலும் பனை ஓலைகளாலும் வீட்டு வாசல்களைத் தட்டி எமன் எங்கேனும் ஒளிந்திருக்கிறானா என்று தேடுவார்கள்.
சங்காரத்துக்கு முன் காலசம்ஹார மூர்த்தி உற்சவர் எமனை முன்னும் பின்னுமாய்த் துரத்துவார். எமனைச் சுமப்பவர்களும் உற்சவரைச் சுமப்பவர்களும் ஓடி ஓடிக் களைப்பார்கள். சங்காரத்துக்குப் பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் நடக்கும் அபிஷேக தீர்த்தத்தை அள்ளிக் குடிக்கக் கூட்டம் அலைமோதும்.
தருமபுர ஆதீனத்தின் மகாசந்நிதானங்கள் வருகையின் போதெல்லாம் ஊரே விழாக்கோலம் பூணும். ஒவ்வொரு குடும்பமும் மகாசந்நிதானத்தை தன் குலகுருவாகக் கும்பிடும். ஒடுக்கத்தம்பிரான் விபூதிக்கலயம் ஏந்த அவரின் மணிக்கட்டில் மடித்துப் போடப்பட்ட காவித்துண்டில் கையூன்றி மகாசந்நிதானம் எழுந்தருளும்போது வழிநெடுக விழுந்து வணங்கி ஆசிபெறுவார்கள் பக்தர்கள்.
திருக்கோயில் நிர்வாகத்தின் அருளாட்சி செலுத்துவதில் தருமையாதீனம் மகாசந்நிதானங்கள் வழிவழியாகக் காட்டிய அக்கறையும் நேர்த்தியும் திருக்கடவூர்க் கோயிலின் புராதனத்தையும் பொலியச் செய்தன. அம்பாள் ஆலயத்தின் பூசை நியமங்களுக்கென்று உருவான தனிக்கட்டளையயும் தருமபுர ஆதீனம் ஆசீர்வதித்து அனுமதித்தது.
அதுதான் அபிராமிபட்டரின் சமகாலத்தவரான பிச்சைப்பிள்ளை அபிராமி அம்பாள் ஆலயத்துக்கு எழுதி வைத்த ஆயிரத்து எழுநூறு ஏக்கர்கள் அடிப்படையில் உருவான பிச்சைக்கட்டளை.