கோகனக மலர்மாதிருவர் அருளுடையார் பொறையுடையார்
கேகனக சபைப்பிள்ளை எனும் பேருடையார் மதுர வாக்கார்!
-பிச்சைக்கட்டளை ஆஸ்தான புலவர்
நாராயணசாமி செட்டியார்
வடக்கு வீதியிலிருந்து சந்நிதித் தெரு நோக்கி வரிசையாய் சில பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வருவது தெரிந்தது. வேட்டியும் முண்டாசும் மட்டும் அணிந்த ஆகிருதியான ஆட்கள் அவற்றைத் தாங்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அரைக்கை பனியனும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய் இருவர் பின்தொடர நடுநாயகமாய் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தார் கனகசபைப்பிள்ளை. பிச்சைப்பிள்ளை நிறுவிய பிச்சைக் கட்டளையின் அதிபர். ஆனால் கனகசபைப் பிள்ளைக்கோ தான் அபிராமி திருக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் என்னும் எண்ணமெல்லாம் எழுந்ததில்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்கு அபிராமி மூத்த மகள். அவருடைய அப்பா கயிலாசம் பிள்ளையின் சொந்த ஊர். பெருந்தோட்டம். தாயின் ஊர்தான் திருக்கடவூர். மூன்றே வயதில் அன்னை அலமேலு இறந்துவிட, தாய்வழிப்பாட்டி மீனாட்சியால் தத்தெடுக்கப்பட்டார் கனகசபை.
அபிராமியின் திருவடிகளில் ஆழமாய் ஊன்றிய அன்பு அந்தக் கனவானை பக்திமானாகவே வளர்த்தது. திருக்கோவிலுக்குள் நுழைந்தவரின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. குடும்பம் குடும்பமாய் கோவில் மதில்களை ஒட்டி சுருண்டு படுத்திருந்தவர்கள் மீது பார்வை பதிந்தது. உடன்வந்த அரைக்கை பனியன்காரர்கள் குறிப்புணர்ந்து அவர்களை அணுகி விசாரிக்கத் தொடங்கினார்கள். அடுத்த பத்தாவது நிமிடம் அவர்கள் கனகசபை பிள்ளையின் மாளிகையில் உணவுக்கூடத்தில் தலைவாழை இலைகளுக்கு முன்னர் அமர்த்தப்படுவார்கள் என்பதை தரிசனத்துக்காக வந்தவர்கள் அறிய வாய்ப்பில்லை.
திருக்கடவூர் கோயிலுக்கு மட்டுமின்றி கீழத்தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களின் தர்மகர்த்தாவாக இருந்தாலும் அவருடைய முழு கவனமும் பசியாற்றுவதிலேயே இருந்தது.
விருந்தோம்பலில் வன்தொண்டராய் அறியப்பட்டவர் அவர். கே.கே.பிள்ளை என்றால் தமிழகம் முழுவதும் தெரியும். அபிராமி அம்பாள் ஆலயத்திற்கு வெள்ளிக் கதவுகள் நிர்மாணிக்க மைசூர் அரசர் சாமராஜ உடையார் வந்த போதும் முன்பின் தெரியாத சாமானியர் வரும்போதும் உபசாரம் ஒன்றுதான். அடையாக் கதவு; அணையா அடுப்பு.
காலை எட்டு மணிக்கெல்லாம் முழுச்சாப்பாடு சாப்பிடுபவர் அவர். உடனிருந்துண்ண ஒருவரும் இல்லையென்றால் பிச்சைக்கட்டளை மேனேஜர் ரங்கசாமி முதலியாருக்கு ஆள் போகும். அதிதிகள் வராத குறைக்கு அவரேனும் அருகே அமர்ந்து சாப்பிட வேண்டும். அதற்கு முன்னால் ஒரு வைபவம் அரங்கேறும். அதுதான் கே.கே.பிள்ளை குளியல் படலம்!!
முதல்கட்டு தாண்டி இரண்டாம் கட்டையும் கடந்து வலதுபுறம் ஆங்கிலத்தில் ஆஹற்ட் ழ்ர்ர்ம் என்று பொறிக்கப்பட்ட குலியலறை இருக்கும். காலை ஆறு மணிக்கெல்லாம் பெரிய ரெட்டியார் என்ற பணியாளர் கொதிக்கக் கொதிக்க வெந்நீர்த் தவலையைத் தூக்கிக் கொண்டு குலியலறைக்குள் நுழைவார். தண்ணீரை விளாவி வைத்து விட்டு முதற்கட்டுக்குத் தகவல் அனுப்புவார். அதற்குள் குளியலறையில் மைசூர் சாண்டல் சோப் மற்றும் வாசனாதி திரவியங்கள், சிகைக்காய் பொடி முதலியன தயார் செய்யப்படும். சொக்கலிங்கம், மாரிமுத்து, சுந்தரராசு, தம்பான் ஆகிய நான்கு பணியாட்கள் சூழ கே.கே.பிள்ளை குளியலறையில் பிரவேசிப்பார். நடுத்தர உயரம். சிவந்த நிறம். கூர்மையான சிறிய கண்கள். உதடு திறந்தால் ஒளிவீசும் ‘தங்கப்’ பற்கள் இரண்டு. பண்ணையார்களுக்கே உரிய பருத்த மேனி.
கோவணத்துடன் நிற்கும் அவரிடம் சுந்தரராசு குவளையில் தண்ணீரை நீட்ட, சூடு போதுமா என்று தொட்டுப் பார்த்து தலையசைப்பார். முழங்கால் அளவில் ஆரம்பித்து தண்ணீரை மெல்ல மெல்ல மேலுக்கு வார்ப்பார் சுந்தரராசு. சொக்கலிங்கமும் மாரிமுத்துவும் பரபரவென்று கைகால்களைத் தேய்த்துவிட்டு சோப்புப் போடத் தொடங்கும் போது தம்பான் ஒரு காரியம் செய்வார். பெரிய சைஸ் பனை ஓலை விசிறியை எடுத்து விசிறத் தொடங்குவார்!!
துவட்டி விடுவது, சலவை வேட்டியை உதறிக்கட்டுவது போன்ற வேலைகளையும் இந்த நால்வரணிதான் செய்யும். அதன்பிறகு அவர் வருகிற இடம் இரண்டாம் கட்டு. அது அவருடைய மனைவி ருக்மணி ஆச்சியின் சாம்ராஜ்யம். மணக்குடி பண்ணையார் கல்யாண சுந்தரம் பிள்ளையின் மூத்த மகள் தான் ருக்மணி ஆச்சி. அங்கிருக்கும் விஸ்தாரமான ஊஞ்சலில் அவர் வந்து அமர்கிறபோது சண்முகம்பிள்ளை, பெரிய தம்பி என்ற பணியாளர், சின்ன ரெட்டியார் என்ற பணியாளர் ஆகியோருடன் சுந்ரராசுவும் மாரிமுத்துவும் சேர்ந்து கொள்வார்கள். அவர் ஊஞ்சலில் வந்தமரும் முதல் சில நிமிஷங்கள் அவரது பொன்னிற மேனியில் வாசனை பிடிக்கப் போட்டி போடும் பேரப்பிள்ளைகளுக்கானவை.
கோவையிலிருந்தும் சென்னையிலிருந்தும் குழந்தைகள் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அதற்குப் போட்டா போட்டிளே நடக்கும். கோயில் யானையின் மீது அணில்கள் புரண்டு விளையாடுவது போல் இருக்கும். அவர்களைக் கொஞ்சி நாசூக்காக விலக்கிவிட்டு அவர் நிமிர்வதற்கும், பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடியை பெரிய தம்பி அவர் முன் காட்டவும் சரியாக இருக்கும். வலது கையை நீட்டியதும், சின்ன ரெட்டியார் தந்தத்தினால் ஆன சீப்பை தருவார். தன் தலையில் ஒரு வகிடு எடுத்து விட்டு சீப்பைத் திருப்பித் தந்து விடுவார் கே.கே.பிள்ளை. அவர் தலையில் இருக்கும் எழுபது எண்பது முடிகளையும் சீவி விடும், “தலையாய” கடமை சின்ன ரெட்டியாரைச் சேர்ந்தது.
அதன்பின் தண்ணீரில் தயாராகக் குழைத்து வைக்கப்பட்டிருக்கும் திருநீறை எடுத்து நெற்றியில், மார்பில், தோள் பட்டைகளில் முன்னங்கைகளில் மும்மூன்று பட்டைகளாகப் பூசிக் கொள்வார். அப்போது அவர் உதடுகள் எதையோ முணுமுணுக்கும்.
ருக்மணி ஆச்சியின் கைகளில் இருக்கும் காபி வட்டா டம்ளர் அவர் கைக்குப் போகும். காபியை மெல்லப் பருகிக் கொண்டே பேரக்குழந்தைகளிடம் பேச்சுக் கொடுப்பார். அடுத்தது, சண்முகம் பிள்ளையின் “டர்ன். ‘பொடி பொடியாய் நறுக்கப்பட்ட, நெய்யில் வறுக்கப்பட்ட சின்ன வெங்காயங்களை கிண்ணம் நிறையப் போட்டு, ஸ்பூனுடன் நீட்டுவார். பிறகு காலை வேளைக்கான மாத்திரைகளைப் பெரிய தம்பி நீட்டுவார். விழுங்கிவிட்டு, பூஜை அறைக்குப் பக்கத்திலுள்ள பாராயண அறைக்குக் கிளம்புவார் கே.கே.பிள்ளை. அங்கே அவர் பாராயணம் செய்யும் தேவாரம்,திருவாசகம், அபிராமி அந்தாதி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
அவருடைய பணியாளர்களுக்கு சீருடை கிடையாது. ஆனால் ஆடைகளை வைத்தே அவர்களின் அதிகார எல்லைகளைத் தெரிந்து கொள்ளலாம். சுந்தரராசு, சொக்கலிங்கம், தம்பான். மாரிமுத்து போன்ற கடைநிலைப்பணியாளர்களுக்கு வேட்டி, தலையில் முண்டாசு மட்டும். சின்ன ரெட்டியார், பெரிய தம்பி மற்றும் ராமதாஸ் போன்றவர்களுக்கு வேட்டி, முண்டா பனியன். மேனேஜர் ரங்கசாமி முதலியார், ஆஸ்தான புலவரான நாராயணசாமி செட்டியார், அவரது மருமகனும், செட்டியார் மாப்பிள்ளை என்றழைக்கப்படுபவருமான கலியபெருமாள் ஆகியோருக்கு சட்டை அணியும் அதிகாரம் உண்டு.
தவிசுப்பிள்ளையான சண்முகம்பிள்ளைக்கு, வேட்டி, பனியன், உபரியாக சமையற்காரர்களின் டிரேட் மார்க்கான அழுக்குத் துண்டு, ஆள் குள்ளம். கறுப்பு. வழுக்கைத்தலை. வாயில் புகையிலை எப்போதும் இருப்பதால் அண்ணாந்து தான் பேசுவார்.
ஒரு நாளைக்கு ஐம்பது முதல் ஐந்நூறு பேர் வரை சாப்பிடுவார்கள் என்பதால் குறிப்பிட்ட திட்டமோ குறைந்த பட்ச பொதுத்திட்டமோ இல்லாமல் சமையல் கடமைகள் இருக்கும். வருவிருந்தோம்பி வராத விருந்தையும் வரவழைக்கும் கே.கே.பிள்ளையின் இயல்புக்கு அச்சுப்பிசகாத அந்தப்புரம். அக்காலத்தில் கூட விருந்தாளிகள் வந்திருப்பதாய் இரண்டாம் கட்டுக்குத் தகவல் பறக்கும். இலை போட்டாச்சு என்பதுதான் ருக்மணி ஆச்சியின் பதிலாய் இருக்கும்.
காலையில் சபை கூடும். கடிதங்கள் படிப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பது என்று நிர்வாக வேலைகள் நடக்கும். அதன்பிறகு பதினொன்றரை மணிக்கு மேல்தான் பார்வையாளர் நேரம். பஞ்சாயத்து தொடங்கி, படிப்புக்கோ மருத்துவத்துக்கோ பணம் கேட்டு வருபவர்கள், அறநிலையத் துறை அதிகாரிகள், பிரபலங்கள் என்று பலரும் இந்தப் பட்டியலில் அடங்குவர். நிர்வாக சபை நடக்கிறபோதே, சண்முகம் பிள்ளை பார்வையாளர்கள் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்து உத்தேசமாய் சமைக்கத் தொடங்குவார்.
விருந்தினர்களிடம் கே.கே.பிள்ளை பேசத் தொடங்குவார். இப்போது, திண்டுகள் நிறைந்த பெரிய கட்டிலில் சாய்ந்து கொண்டிருப்பார் அவர். எதிரே இருப்பவர் உள்ளூர்த் தலையாரியா உயர்நீதிமன்ற நீதிபதியா என்று கவலைப்படாமல் பேரப்பிள்ளைகள் அவரின் பொன்னார் மேனியில் ஏறி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களை வந்திருப்பவர்களிடம், கர்ம சிரத்தையாய் அறிமுகம் செய்வார். பேரப்பிள்ளைகளை அறிமுகப்படுத்த அவரிடம் பொதுச்சொல் ஒன்றுண்டு. “வெரி பிரைட் பாய்” என்பதுதான் அது.
உதவி கேட்டு வருபவர்கள் வெறுங்கையோடு திரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு குறைந்தபட்ச நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். வேறொன்றுமில்லை. அவர்கள் சாப்பிடாமல் போகக்கூடாது. தேடி வருபவர்கள் சாப்பிடாமல் புறப்பட்டால் வாழ்வின் அதிகபட்ச அவமானத்தை உணர்வார் அவர்.
அப்படித்தான் ஒருநாள் யாரோ ஒரு புதியவர் ஓர் உதவி கேட்டு வந்திருந்தார். வந்த காரியம் முடிந்து விடைபெற எத்தனித்தவரிடம் கனிவோடும் கண்டிப்போடும் சொன்னார். “சாப்பிட்டுப் போலாம்!!” வந்தவர் மறுத்தார். “மாயவரத்திலே அக்கா வீடு இருக்கு! அங்கே வர்றேன்னு சொல்லியிருக்கேன்.” கனகசபைப் பிள்ளையின் முகம் மாறியது. “போலாம்! சாப்பிடாமப் போறதாவது!! வேடிக்கையாயிருக்கு!” வந்தவர் மறுக்க மறுக்க வற்புத்திப் பார்த்தவரின் முகத்தில் புன்னகை மறைந்திருந்தது.
“ஷண்முகம் பிள்ளை” உரக்கக்குரல் கொடுத்ததும், ‘எசமான்’ என்றபடி ஓடோடி வந்து நின்றார் சமையற்காரர். வந்தவரைச் சுட்டி, “அய்யா நம்ம வீட்டில் சாப்பிட மாட்டேங்கறாங்க!” சொன்ன தொனியில் பண்ணையாரைக் காணோம். பலப்பத்தைப் பறிகொடுத்த பள்ளிக்கூடப் பையனின் புகார் தொனி இருந்தது.
“அய்யா!! எலை போட்டாச்சு! சாப்பிடலாங்க” ஷண்முகம் பிள்ளை இரண்டு மூன்று முறை வலியுறுத்த, வந்தவருக்கு தர்ம சங்கடம். அவர் தனது மறுப்புப் படலத்தைத் தொடர்ந்ததும் தன் எநமானரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் ஷண்முகம் பிள்ளை. சம்மதத் தலையசைப்பு கிடைத்ததும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டவர், “அய்யா மறுக்காம சாப்பிடணும்” என்று விருந்தினரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார். அதிர்ந்து போன விருந்தாளி ஐந்தாவது நிமிடம் இலைமுன் அமர்ந்திருந்தார். சாப்பாட்டில் காரம் இல்லை. ஆனால் அவர் கண்கள் கலங்கியிருந்தன. சற்று முன்னர் நடந்த சம்பவத்தின் சுவடே இல்லாமல் பரிமாறிக் கொண்டிருந்தார் சண்முகம் பிள்ளை. எய்யப்பட்ட அம்புக்கு ஏது உணர்ச்சிகள்…