சில ஆயிரம் பேர்களே வசிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் திருக்கடவூர். அதனுள் பொதிந்து கிடக்கும் புராணப் பின்புலமும் அங்கு நிகழ்ந்த சம்பவங்களுக்குக் கிடைக்கும் சான்றாதாரங்களும், அந்த மண்ணில் நின்று அருளாளர்கள் இசைத்த அற்புதமான பாடல்களும் அந்தச் சிறிய கிராமத்தை பண்பாட்டின் களஞ்சியமாய் ஆக்கின.
பூமியின் மார்பில் புதைந்த காலச்சுவடுகளில் பல, காலச்சுவடுகளாய் ஆன கதைதான் திருக்கடவூரின் கதை. திருக்கடவூர் அபிராமியம்மை ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரின் பெயரனாகப் பிறந்தபோதே இந்நூலை எழுதும் பணி எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று திண்ணமாக எண்ணுகிறேன்.
உருவாக காலந்தொட்டு உயிர்ப்புமிக்க கிராமமாய் இன்றளவும் இருக்கும் திருக்கடவூர் என்றென்றும் இவ்வண்ணமே இருக்கும். ஆன்மீகமே ஆதாரமாய் திருக்கோயிலை மையப்படுத்தி வாழ்கிற வாழ்க்கை இந்தத் தொழில் நுட்ப யுகத்திலும் இத்தகைய தலங்களில் சாத்தியம் என்பதே வியப்புக்குரியது.
இப்படியொரு நூல் உருவாக வேண்டுமென்று கருதி அதற்கான முயற்சிகளில் இறங்கும்போதே திருக்கடவூர் தொடர்பான கல்வெட்டு ஆதாரக் குறிப்புகளைத் தந்தவர் தொல்லியல் அறிஞர் முனைவர் குடவாயில் பால சுப்பிரமணியன் அவர்கள்.
அவர் தந்த குறிப்புகளையும் என்வசமிருந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களையும் ஒன்றுசேர்த்துப் பார்த்த பிறகு திருக்கடவூர் என்னும் களம் எத்தனை விரிவானது என்பதை உணர்ந்தேன். இன்னும் ஆர்வமாய் இதில் ஈடுபட்டேன்.
மாதவியின் சொந்த ஊர் திருக்கடவூர் என்பது கோவலன் கண்ணகி தொடர்பான பெரும்பாலான நாட்டுப் புறப்பாடல்களில் காணப்படும் குறிப்பு. காவிரிப் பூம்பட்டினத்தின் சுற்றளவு நான்குகாதம் என்பது சிலப்பதிகாரத்தில் காணப்படும் செய்தி. திருக்கடவூர் காவிரிப் பூம்பட்டினத்தின் எல்லைக்கு உட்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே மாதவியின் ஊர் திருக்கடவூராக இருந்திருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு.
மேலப்பெரும்பள்ளத்தைச் சார்ந்த தமிழறிஞர் தியாகராசன் அவர்கள் எழுதிய, ==பூம்புகாரில் வரலாற்று எச்சங்கள்++ என்னும் ஆய்வு நூலில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சம்பாபதி கோவிலின் அச்சு அசலாய் இன்னொரு கோவில் திருக்கடவூரில் இருந்ததாகவும், மாதவி மனை என்று கருதப்பட்ட இடத்திற்கருகே அந்தக் கோவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கோவிலின் படம் திர. சிவபாத சுந்தரம் எழுதிய, “சேக்கிழார் அடிச்சுவட்டில்” என்ற நூலில் வெளியாகி உள்ளது. எனவே திருக்கடவூர் சம்பாதி கோவிலுக்கு கோவலன் வந்திருக்கக்கூடும் என்னும் புனைவை இந்நூல் செய்ய மேற்கண்ட தரவுகளே தூண்டின.
திருக்கடவூர் கல்வெட்டுக்களில் இராஜராஜ சோழன் காலத்திலிருந்து, “படை ஏவிய திருக்கடவூர்”, “உள்படை ஏவிய திருக்கடவூர்” ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. எந்த நாட்டுக்கான படையெடுப்பு திருக்கடவூரிலிருந்து நிகழ்ந்ததென்று தெரியாமல் அறிஞர்கள் பலரையும் கலந்தாலோசித்தேன். ஆய்வுரைத் திலகம் அறிவொளி அவர்கள் திருக்கடவூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். என் பாட்டனார் பூம்புகார்க் கல்லூரி தாளாளராகத் திகழ்ந்தபோது அங்கே பணி புரிந்தவர். என் பாட்டிக்கு ஏழரை நாட்டுச் சனி நடந்தபோது வாராவாரம் சனிக்கிழமையன்று எங்கள் வீட்டிற்கு வந்து நளவெண்பா வாசித்ததை இன்றும் நினைவு கூர்வார்.
திருக்கடவூரில் இராஜராஜசோழனின் படை ஒன்று நிலைகொண்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னது சரியென்று பட்டது. அதையே இந்நூலில் பதிவு செய்திருக்கிறேன்.
தமிழின் ஆய்வுப்பரப்பில் சேக்கிழாரின் பெரியபுராணம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில்தான் அரங்கேற்றப் பட்டதென்று நீண்டகாலம் ஒரு கருத்து நிலவி வந்தது.. ஆனால் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் பெரிய புராணம் உருவானதென்று ஆய்வுலகம் புதிய தரவுகள் கொண்டு தீர்மானித்துள்ளது என்பதையும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் வழியே அறிந்தேன்.
மேற்குறித்த அறிஞர்களுக்கென் தனிப்பட்ட நன்றிகள் உரியன.
என்னுடைய நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் விஜயா பதிப்பக நிறுவனர் அண்ணன் திரு. மு.வேலாயுதம் அவர்கள் இந்நூலைப் பலமுறை வாசித்து பரவசமாய்த் தந்த பாராட்டு மொழிகள் இன்னும் என் செவிகளில் எதிரொலிக்கின்றன. அவருக்கும் அவர்தம் புதல்வர் திரு.வே.சிதம்பரத்திற்கும் என் நன்றிகள்.
இந்நூலை அழகுற வடிவமைத்த தத்ரூபா கிராஃபிக்ஸ் தம்பதியர் அம்பிகா மற்றும் சீனிவாசன் என்னுடைய நந்தவனத்தில் மலர்ந்தவர்கள் என்பதில் எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. அவர்களுக்கென் நன்றிகளும் பாராட்டுக்களும்.
ஓவியர் திரு.பத்மவாசனின் உயிர்ச்சித்திரங்கள் இந்தப் புத்தகத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. அவருடைய ஈரத் தூரிகைக்கென் இனிய நன்றிகள்.
“திருக்கடவூர் புத்தகத்தில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டுமென” அடம்பிடித்து காமிராவுடன் திருக் கடவூருக்கும் திருமயானத்திற்கும் வந்திருந்து அற்புதமான புகைப்படங்களை எடுத்துத் தந்த அன்புச் சகோதரர் இசைக்கவி ரமணனுக்கென் இனிய நன்றிகள்.
கள்ளிக்காட்டு இதிகாசம் வெளிவந்து சிறிது காலத்திற்குப் பிறகு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை திருக்கடவூர் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அவர் கோவிலுக்கு வருவாரோ மாட்டாரோ என்று கருதி வீட்டிலேயே அர்ச்சகர்களை அழைத்து வந்து பரிவட்ட மரியாதைகள் செய்தோம். “முத்தையா! கள்ளிக்காட்டு இதிகாசம் போல கடவூர் இதிகாசம் ஒன்றை நீங்கள் எழுதலாமே!”என்றார். இந்தப் புத்தகத்தின் பின்புலத்தில் அந்தச் சொற்களும் உள்ளன என்பதை சொல்லவும் வேண்டுமோ!!
வாசிப்பதன் மூலமே ஒருவனை எழுத்தாளனாக வளர்த்தெடுக்க முடியுமென்று உலகுக்கு உணர்த்தியிருக்கும் என் வாசக நண்பர்கள் அனைவரையும் நன்றியறிதலுடன் வணங்குகிறேன்.
என்னுடைய பாட்டனாரின் பெருவாழ்வை பிஞ்சுப் பருவத்தில் கண்ணுற்ற நினைவுகள் பல இன்னும் என் இதயத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தில் ஒரேயோர் இடத்தில் ஒரு கணநேரப் பாத்திரமாய் வந்துபோவேன். தியாகப்ப செட்டியார் அமுதகடேசர் சந்நிதியில் அமுதகடேசரை மட்டுமே வைத்துக் கொண்டு பெரியபுராண விரிவுரை செய்தபோது என்னைக் கோயிலுக்கு அழைத்துச் சென்ற நாராயணசாமி செட்டியாருடன் அவரெதிரே சிறிதுநேரம் அமர்ந்திருந்த சிறுவன் நான்தான்.
சிந்தித்துப் பார்த்தால் திருக்கடவூரில் நான் அதிகநேரம் செலவிட்டது தாத்தாவின் ஆஸ்தான புலவர் நாராயணசாமி செட்டியாருடன்தான் என்று இன்று தோன்றுகிறது.
நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம். தாத்தாவின் மேசையில் கட்டுக்கட்டாய் திருமண அழைப்பிதழ்கள் இருப்பதையும் மானேஜர் தாத்தா என்றழைக்கப்பட்ட திரு.ரங்கசாமி முதலியார் தினமும் வாழ்த்துத் தந்திகள் அனுப்புவதையும் பார்த்தேன். தாத்தாவிடம், “உங்களுக்குத்தான் ஆஸ்தான புலவர் இருக்கிறாரே! அவரைவிட்டு ஒரு வாழ்த்துக்கவிதை எழுதச் சொல்லி அச்சடித்து வைத்துக் கொண்டால், அதையே அனுப்பலாமே தாத்தா!” என்றேன்.
“செய்யலாமே!” என்றவர் சொன்னதுதான் தாமதம். நாராயணசாமி செட்டியார் ஒரு வெண்பா எழுதிக் கொண்டு வந்துவிட்டார்.
“அன்புமண மக்கள் அபிராமி இன்னருளால்
இன்ப நலங்கள் இனிதெய்தி – மன்பதையோர்
தேடரிய செல்வச் சிகாமணிக ளாய்மண்ணில்
நீடுழி வாழ்க நிலைத்து.”
ஓரிரு நாட்களிலேயே அந்த வாழ்த்துக் கவிதை அச்சாகி வந்தது. அதன்பின் தாத்தா கலந்து கொள்ள முடியாத திருமணங்களுக்கு அந்த மடலே அனுப்பப்பட்டு வந்தது.
தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பலரும் தாத்தாவுக்குக் கையப்பமிட்டுத் தந்த அருமையான நூல்கள் பலவற்றை, அவருடைய இறுதிக் காரியங்கள் முடிந்து ஒரு எபரிய டிரங்குப் பெட்டியில் போட்டு கோவைக்குக் கொண்டுவந்தேன். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் தோற்று மறுபடியும் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தப் புத்தகங்கள் என் இலக்கிய வாழ்வுக்கு மிகப்பெரிய அடித்தளமாய் அமைந்தன. தன் மரணத்துக்குப் பிறகும் எனக்கு அத்தனை புத்தகங்கள் தந்த தாத்தாவுக்கு அவருடைய நூற்றாண்டின் நிறைவில் பெயரன் தரும் பரிசு இந்தப் புத்தகம்.
படிப்பில் வெகுசுமாராக இருந்த என்னை மற்றவர்களிடம், “பிரைட் பாய்” என்று அறிமுகம் செய்து வைத்த தாத்தா, இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதாகவும் தங்கப்பல் தெரிய சிரித்து, “பிரைட்பாய்” என்று சொல்வதாகவும் இந்தக் கணத்தில் எனக்குத் தோன்றுகிறது.
இது சாதனை செய்தாள் அபிராமி!