54 வயது வரை உலக வாழ்வு. கவிதை, கட்டுரை,திரைப்பாடல்,புதினம்,பத்திரிகைகள் அரசியல்,ஆன்மீகம் என எத்தனையோ தளங்களில் அசகாய முத்திரை. வாசிப்பு வளர்ந்து எழுத்தாகி, அனுபவம் பழுத்து கருத்தாகி, அமர எழுத்துகளாய் ஒளிவீசச் செய்த உன்னதப் படைப்பாளி,கவியரசு கண்ணதாசன்.
திறந்த ஏடாய் விரிந்த வாழ்வில் கண்ணீரும் வியர்வையும் கலந்து காலம் அழிக்க முடியாத விதமாய் கவிதை வரிகளை வடித்த அமரத்துவம் அவருடைய எழுத்துகளின் மகத்துவம்..
நான்கு வரிகளை வாசித்தாலும், அவரின் பாடல் வரிகளை யோசித்தாலும் வாழ்வின் பாதையில் பளீரென்று பாயும் பால் வெளிச்சம் அந்தப் பிறவிக் கவிஞனின் தனித்தன்மை.எவரையும் பகையாய் எண்ணாது புயல்பொழுதுகளையும் பாடியே கடந்து பகைக்க நினைத்தவரையும் பரிவாய் அணைத்தது அவரின் பெருந்தன்மை.
இப்படி அவரின் வாழ்வினூடாகவும் வரிகளினூடாகவும் நாம் கண்டறிய எத்தனையோ படிப்பினைகள்.ஒவ்வொரு ஜூன் மாதமும் கவியரசரைக் கொண்டாடக் காத்திருக்கும் நமது நம்பிக்கை,இந்த முறையும் அவர் தன் படைப்புகள் வழியாகக் காட்டும் உலகத்தை எல்லோருக்கும் காட்டுவிக்க முயல்கிறது.
எல்லோருக்கும் கனவுகள் உண்டு. கனவுகளில் தகுதிக்கு மீறிய கனவு என்று ஏதும் உண்டா? இந்தக் கேள்வியை நாம் கவிஞரின் முன்னர் வைக்கிறோம். பறவைகளிலேயே இனிமையாகப் பாடவல்லது வானம்பாடி . கர்ண கடூரமாகக் கத்துவது காக்கை.ஒருநாள் காக்கை வானம்பாடியாக ஆக வேண்டுமென்று முடிவு செய்கிறது . அதனால் முடியுமா,முடியாதா?
“காக்கையன்று வானம்பாடி ஆவதென்று கருதினால்”
இது அந்தக் கவிதையின் முதல் வரி.
இதற்கான விடையைக் கண்டறியும் முன்பாக, ஒரு கிராமத்துக் காட்சி. அரசு தொடக்கப்பள்ளி. உயரக் குறைவு காரணமாய் பள்ளிநிகழ்ச்சியில் முதல் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறான் அந்தச் சிறுவன். பள்ளியில் ஏதோ விழா.மாவட்ட ஆட்சித் தலைவர் வந்திருக்கிறார். அந்த ஆனந்தமான சூழலிலும் தன் ஆங்கில ஆசிரியரின் கண்கள் தன்னை எங்கிருந்தோ கனல் பார்வை பார்ப்பதாய் கற்பனையில் கூனிக் குறுகிப் போகிறான் அந்தச் சிறுவன். ஆங்கிலம் என்றாலே வேப்பங்காயாய் எண்ணும் சிறுவன், எதேச்சையாக மேடையைப் பார்க்கிறான். மாவட்டஆட்சித் தலைவரின் நுனி நாக்கு ஆங்கிலம் முதல்வரிசையில் இருக்கும் அவனின் செவிகளில் விழுகிறது.
தங்கள் தலைமை ஆசிரியரையே திணற வைக்கும் அவரின் அநாயசமான உரையாடலில் சொக்கிப் போகிறான் சிறுவன். ஏதோ விளக்கம் தர மேடைக்கு அழைக்கப்படும் அவனுடைய ஆங்கில ஆசிரியர் அசடு வழிந்து நெற்றி வியர்த்து ” எஸ் சார்! நோ சார்!” என்று பதறுவதைப் பார்க்கையில் அவனுக்கு ஆனந்தம். ஆங்கிலத்தைப் பார்த்து அஞ்சிக் கிடக்காமல் தானும் நன்கு ஐ.ஏ.எஸ் படித்து அதே கல்விக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்னும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது,
“காக்கையன்று வானம்பாடி ஆவதென்று கருதினால்”
இந்தக் கனவு அந்தச் சிறுவன் வாழ்வில் நிஜமாக வேண்டுமென்றால் அவனிடம் என்ன நிகழ வேண்டும்? மாற்றம்நிகழவேண்டும்.அதுவும் இருநூறு சதவிகித மாற்றம்.தன்னைப்பற்றிய எண்ணம் மாறி தாழ்வு மனப்பான்மை நீங்கி தலைநிமிர்ந்து பாடங்களைப் படிப்பதில் படுவேகம்காட்டி பாயும் குதிரையாய் புறப்பட வேண்டும்.
இப்படி முழுமையான மாற்றத்தை அவன் நிகழ்த்திக் காட்டினால் ஆட்சித் தலைவர் பதவியென்ன அதைவிடவும் பெரிய இடங்களை எட்டலாம்.
“காக்கையன்று வானம்பாடி ஆவதென்று கருதினால்
மூக்கும் மாறி குரலும் மாறி முகமும் மாற வேண்டுமே”
எவ்வளவு எளிமையாய் அதேநேரம் வலிமையாய் சொல்லிவிடுகிறார்!!
போர்க்களம் என்பது எப்படிப்பட்டது என்றொரு பேரன் தன் வயது முதிர்ந்த பாட்டனாரைக் கேட்டான்.எண்பதைத் தாண்டி எலும்பும் தோலுமாய் இருந்த அந்தப் பெரியவர் இராணுவ முன்னாள் வீரர். கையிலுள்ள கொட்டைப்பாக்கை தன் பாக்கு வெட்டியால் பிளக்கவே சிரமப்படும் அவர் தன் போர்க்கால பராக்கிரமங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
விருப்பமாய் கதை கேட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்கு விபரீதமாய் ஓர் ஆசை வந்தது. தன் தாத்தா தூங்குகிற போது அவர் வெற்றிலைப் பெட்டியில் இருந்து
பாக்குவெட்டியைக் கைகளில் எடுத்துக் கொண்டு தானும் போருக்குப் போனால் என்ன?
“பாக்குவெட்டி போர்க்களத்தில் பாய்ந்து செல்ல எண்ணினால்”
அடுத்த புதிரை ஆரம்பிக்கிறார் கவிஞர்.
பாக்குவெட்டியால் போர்க்களத்திற்குப் போக முடியுமாஎன்னும் அவநம்பிக்கைக் கேள்விக்கு அழுத்தம் திருத்தமாய் அவர் தருகிற பதில் அழகானது.ஆழமானது.
“பாக்குவெட்டி போர்க்களத்தில் பாய்ந்து செல்ல எண்ணினால்
தூக்குகின்ற கைகளுக்குத் துணிவு வேண்டும் தோழனே”
பாக்குவெட்டி,பகையை வெட்டும் ஆயுதமாக ஆகுமா என்றால்,ஆகும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் தானே.கையில் இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு எய்த வேண்டிய வெற்றியை எட்டலாம் என்கிறார் கவிஞர்.
எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நடைமுறைக்கு ஒவ்வாத செயல்கள் என்று சில உள்ளன.அவை முழு வெற்றியைப் பெறாவிட்டாலும் உழைப்புக்கேற்ற பலனைத் தரத்தான் செய்யும். கடவுளாலேயே ஆகாத காரியமென்றாலும் கூட எவ்வளவு முயல்கிறோமோ அந்த அளவு உழைப்புக்கேற்ற ஊதியமாவது கிடைக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
பொருளாதாரம்,குடும்பச் சூழல்,சமூகச் சூழல் என்று பல காரணிகளைக் கடந்தும் சாதிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் சில விஷயங்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால் ஏற்றுப் புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமையல்லவா…
“வண்ண வண்ண ஈக்கள் யாவும் மாம்பழத்தில் அமரலாம்”
என்கிறார் கவிஞர். ஈக்களில் தேனீ சாதாரண ஈ என எத்தனையோ உண்டு. சாதாரண ஈ மாம்பழத்தில் அமர்ந்து முயன்று பறந்து விடுகிறது.தேனீ மாம்பூவில் வேண்டுமானால் தேனெடுக்கலாம். வண்டு மாம்பழத்தைக் குடைந்து உள்ளே போகிறது. வண்டு போனதே என்னால் இயலவில்லையே என்று ஈ வருந்தலாமா என்ன?
” வண்ண வண்ண ஈக்கள் யாவும் மாம்பழத்தில் அமரலாம்
உண்ணுகின்ற ஆசைஅந்த உளுந்து வாயில் நடக்குமா?” என்று கேட்கிறார் கவிஞர்.
மக்கள் மனங்களில் இடம்பெற்றிருக்கும்கவிஞரின் ஆயிரமாயிரம் வரிகளை நாம் அறிவோம். இது போன்ற சின்னச்சின்ன வரிகளில் கூட வாழ்வியல்வெளிச்சத்தை வாரி வழங்கும் கவியரசர் கவிதை உலகத்தின் கலங்கரை விளக்காய் ஒளிர்கிறார்.
அவருடைய திரைப்பாடல் ஒன்றில்,
“மாளிகையில் ஒரு மதி வந்தது அது எந்த வானத்து மதியோ?
மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ?”
என்பார். எந்த வானத்தின் மதியாகவோ எந்த ஆலயத்தின் மணியாகவோ நம் வாழ்வில் வந்தவரே கவியரசு கண்ணதாசன்