இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உருவகக் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். பலம்பொருந்திய ஒரு மனிதரை சாதுவான மனிதர் தேர்கடித்ததைப் பற்றி என்று கருதி விடாதீர்கள்.
நான் சொல்வது நான்கு கால்கள் கொண்ட பசுவைத்தான். இப்போது புலியா புளியா என்று குழம்புவீர்களே.. தெரியும். புலிதான் சுவாமி. புளியல்ல.
இது எங்கோ காட்டு வழியில் நடந்தாலும் கூட எப்போதோ நடக்கும் அதிசயம் என்று விட்டுவிடலாம். பெருநகரம் ஒன்றில், காலைவேளையில், என் நடைப்பயிற்சியின் போது நான் பார்த்த காட்சி. எனவேதான் பூசி மெழுகாமல், தலைப்பை பார்த்தாலே விஷயம் புரிய வேண்டும் என்பதற்காக நேரில் பார்த்த விநாடியே மனதில் தோன்றிய தலைப்பு “புலியைத் தின்ற பசு”.
காலை நடைப்பயிற்சிகளில் இப்படி சில அரிதான காட்சிகளைப் பார்க்கமுடியும். இது, காலை நடைப்பயிற்சியே அரிதான விஷயம் என எண்ணும் யாருக்கும் புரியப்போவது கிடையாது. ஒருமுறை கோவையில் திருச்சிசாலை பகுதியில், சுங்கம் என்னும் இடத்தில் நடைப்பயிற்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தப் பகுதியில்தான் எங்கள்வீடு.
(நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே மேடைப் பேச்சுகளில் பங்கேற்கத் தொடங்கியதால் அப்போதே விசிட்டிங் கார்டு அடித்திருந்தேன்.
பத்மா லே அவுட், திருச்சிசாலை, கோவை என்ற முகவரியைப் பார்த்துவிட்டு சக பேச்சாளராக தென்றல் ராஜேந்திரன் கேட்டார், “ஏனுங்க! பெரியாஸ்பத்திரியிலே தொடங்கி திருச்சி வரைக்கும் திருச்சி சாலை தான். கோயமுத்தூர்ல எங்கிருக்கீங்கன்னு தெளிவா போடுங்க”. பிறகுதான் சுங்கம் சிந்தாமணி அருகில் என்று சேர்த்தேன்). அந்த சுங்கத்தைக் கடக்கும்போது நீளமாய் ஒருபறவை சாலைக்குக் குறுக்கே பறந்து மதில்மேல் அமர்வதைப் பார்த்தேன். நெருங்கிப் பார்த்தால் நீளமான பறவை மட்டுமல்ல. நீலமான பறவையும்தான். மயில்! (பார்த்தீர்களா… மறுபடியும் ‘ல’ கரம் ‘ள’ கரம்).
கோவையின் மத்தியில் மாநகர எல்லையில் இப்படி மயில்கள் பறக்குமோ என்று வியந்தேன். அதேபோல் ஓர் அதிகாலையில் கோவை ஏடிடி காலனியில் காலை நடைப்பயிற்சியின் போது மயில்கள் சாவதானமாக உலவுவதைப் பார்க்க முடிந்தது.
இப்படித்தான், பெருநகரமொன்றில் புலியைத் தின்ற பசுவைப் பார்த்தேன். அதுவும் எங்கே தெரியுமா? சாட்சாத் நமது சிங்கரச் சென்னையில்தான்!!
கிரீன்வேஸ் சாலை மையத்திலுள்ள ராஜ்பேலஸ் சுந்தர் விடுதியில்தான் நான் பெரும்பாலும் தங்குவது. அங்கிருந்து நடைப்பயிற்சிக்காக மந்தைவெளி வழியாக மயிலாப்பூர் வரை போய் வருவது என் வழக்கம்.
பலபேர், ஸ்ரீ ராம கிருஷ்ணர் மடத்தில் நுழைந்து ஆலயத்தைப் பலமுறை சுற்றிவருவார்கள். பயிற்சிக்குப் பயிற்சி, புண்ணியத்துக்குப் புண்ணியம், ஆனால் இலட்சியத்தை எட்டும் வரை திசை திரும்பாத வீர இளைஞனாகிய நான் மயிலாப்பூர் சரவணபவனை நோக்கியே வீறுநடை இடுவேன்.
அப்போதுதான் சற்றும் எதிர்பாராமல் அந்தக் காட்சியைக் கண்டேன். மந்தைவெளிக்கும் மயிலாப்பூருக்கும் மத்தியப் பகுதி அது. இன்றும் ஏராளமான மாடுகளில் வழியெல்லாம் மேயும்.
“மாடுகன்னு மேய்க்க மேயுறதப் பார்க்க மந்தைவெளி இங்கே இல்லையே” என்று கௌதமி ராமராஜனிடம் சலித்துக் கொள்ளும் காட்சி உங்கள் நினைவில் நிழலாடினால், அந்த லயிப்பிலேயே கடந்து போய்விடுவீர்கள். அப்புறம் அபூர்வமான காட்சிகளை கோட்டை விடுவிர்கள்.
இதற்குத்தான் என்னை மாதிரி வீதியை விழிப்புணர்வோடு பராக்கு பார்த்துக் கொண்டே வரவேண்டும் என்பது. காதருகே ஆட்டோக்காரரின் ஹாரன் ஒலியும் அர்ச்சனையும் கேட்டால் கூட அசர மாட்டேனாக்கும்.
இப்போது உங்கள் மனதில், காட்டெருமை ஒன்றை புலி தாக்க வர, கூட்டமாய் வரும் காட்டெருமைகளில் ஒன்று புலியை தன் கொம்புகளில் சுழற்றி வீசும் காட்சியை யூ ட்யூபில் பார்த்ததை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
பார்க்காதவர்கள் உடனே யூ டியூபில் பார்த்துவிட்டு கட்டுரையை விட்ட இடத்தில் தொடருங்கள்.
இராமகிருஷ்ண மடத்தில் நடைபாதையருகே இப்போது வந்துவிட்டேன். உங்களுடன் பேசிக் கொண்டே வந்ததில் இவ்வளவு தூரம் நடந்ததே தெரியவில்லை.
இதே இடத்தில் தான் அந்தக் காட்சியை அன்றொரு நாள் பார்த்தேன். பசுவும், பசுவைவிட சாதுவான ஒரு மாமியும் சேர்த்து புலியை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆமாம்! மிகுந்த வாஞ்சையுடன் அந்த மாமி பசுவுக்கு தன் கையிலிருந்த பொட்டலத்தில் இருந்து எதையோ ஊட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் போய்ப் பார்த்தால்… டைகர் பிஸ்கெட்!!.