வைர வடிவழகே வண்ணக் கலையழகே
மைவிழி பூத்த மலரழகே-பைரவி
மாடக்கூ டல்நகரின் மாதங்கி மீனாட்சி
பாடத் தருவாய் பதம்
பதந்தருவாய் தேவீ! பழக இனந் தந்து
நிதந்தருவாய் நூறு நலன்கள்-இதந்தருவாய்
ஆலவாய் ஆளும் அழகியே மீனாட்சி
மூலக் கனல்தூண்ட முந்து
முந்து நகைமழையும் மூக்குத்தி வெய்யிலும்
அந்தியில் ஆதவன் ஆக்குமே-சுந்தரி!
வண்ணத் திருவடியில் வைத்தவிழி மாறாமல்
எண்ணம்போல் வாழ்வைநீ ஈ.
ஈகை உனக்கழகு;என்தாயே நீவழங்கும்
வாகை எனக்கழகாய் வாய்க்காதோ-தேகமெனும்
புல்லாங் குழல்துளைகள் பொங்கும் அருள்ஸ்வரங்கள்
எல்லாமும் நீயாய் இரு.
இருவினைகள் நீங்க இளகாதோ உள்ளம்
பெருகாதோ பூங்கருணை வெள்ளம்-அருள்நிலையே
வைகை நிலத்தரசி வாஞ்சை மகனிவனை
வையகமே பாராட்ட வை.