(திருக்குட முழுக்குக்குப் பின்னர் கற்பகாம்பாள் தரிசனத்தில் கனிந்த கவிதை)

நீயென்னும் உண்மையை நினைந்தவர் உயிருக்குள்
நீலமாம் சுடர்கூட்டினாய்
நீலியிவள் காளிதிரி சூலியென வருவார்க்கு
நீளுகிற வினைபோக்கினாய்
தாயென்றும் சேயென்றும்தீயென்றும் ரூபங்கள்
திரிபுரை நீமாற்றினாய்
தானென்னும் தருக்கங்கள் தவிடுபொடி யாகவே
தாண்டவப் பதம் காட்டினாய்
காயங்கள் ஆறாமல் கதறுகிற போதுனது
குங்குமம் களிம்பாக்கினாய்
கடுகிவரும் நஞ்சுதனைக் கருதாமல் சிவன்பருக
கைவைத்துத் தழும்பாக்கினாய்
தாவென்று கேட்குமுனம் தருகின்ற கற்பகத்
தாயேஉன் பதம் போற்றினேன்
தொன்மயிலை ஆள்கின்ற பொன்மயிலைப் போற்றியென்
தமிழுக்கு மெருகேற்றினேன்

தேயாத நிலவெனவே தேசுடைய கதிரெனவே
தீபங்கள் ஒளிரட்டுமே
தகதகக்கும் உன்னழகை பரபரக்கும் விழிபருகி
தாகங்கள் தணியட்டுமே
ஓயாத பிறவிகளும் ஓயும்படி தாயேஉன்
ஒருபார்வை படரட்டுமே
ஓங்காரி சந்நிதியில் ரீங்காரம் இடும்மணியின்
ஒலியில் உயிர் மலரட்டுமே
மாய்மாலக் காரனிவன் வாய்ச்சால வித்தைகளை
மாதங்கி பொறுக்கட்டுமே
மாயையிலே கருகுமுயிர் முகில்போல லேசாகும்
மாமாயம் நிகழட்டுமே
காயாத கனலாக குளிர்கின்ற கற்பகக்
கனவே உன் பதம்பாடினேன்
களிமயிலை ஆள்கின்ற ஒளிமயிலை நினைந்தேயென்
கவிதைக்கு கதிதேடினேன்

Comments

  1. அம்மனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிற,உள்ளத்தை
    உருக்கி,கண்ணீர் வரவழைக்கிற,
    அபிராமி அந்தாதியை நிகர்க்கிற
    பக்திப் பெருக்குள்ள படைப் பு.
    வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *