மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்கிற கவிதைத் தொகுதியை குமரகுருபரன் அறிந்தே சொன்னார் போலும்!
“மிக மிக நிதானமாக
நாம் ஒரு வாழ்க்கையை
யோசிக்க வேண்டியிருக்கிறது!..
குறிப்பேட்டின் பலபக்கங்களில்
ஒற்றைப் புள்ளி கூட இருப்பதில்லை.
காட்டின் ஒரு மூலையில்
நாம் வாழாத வாழ்க்கை, பெருமரமென
கிளைவிட்டிருக்கிறது.
அதன்த் துளைகளில் சில பறவைகள்
நம்மைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
உயிரை இடம் மாற்றுவது பற்றி
நமக்கு யாரேனும் போதித்தால் தேவலை”
என்றும் வரிகளை, அநேகமாக அவர் தன் மரணத்திற்குப் பின் எழுதி ஏற்கெனவே வெளிவந்துவிட்ட தொகுப்பில் சேர்ந்திருக்கக் கூடும்.
“மீன்கள் ஏன் இறந்தபின் உம்மென்று இருக்கின்றன” என்று கேட்கும் குமரகுருபரன் அப்படியில்லை. தன் கவிதைகள் வழி பேசிக் கொண்டிருக்கிறார்.
‘பிரம்மப் பனி குளித்து
இளவெயில் தரித்து
உச்சியில் சூடேறி
இரவில் குளிர்கிறேன்’
என்று காற்றின் நாட் குறிப்பில் எழுதி வைக்கிறார்.
“தன்னைத்தான் சிதைத்து
வெளியேறுகிறது குரல்.
மடங்கி, நெடுங்கி, ஒடுங்கி,
விரிந்து, சரிந்து, எழுந்து அடங்கும் அக்குரல்
மூங்கில் காடொன்றை அழிக்கிறது.
துளைகள் அற்ற அந்த வனம்
வேறுவழியின்றி அக்குரலை ஒப்பாரி இடுகிறது”
என்று நாம் காணாத வனமென்றின் கேளாத குரலைப் பதிவு செய்கிறார்.
“கனத்து திரண்டு அழுத்தும்
வேனிற்கால நினைவொன்றை
உருக்கி கண்களில் வழியவிடுகிற இசைக்குறிப்பு”
என்று அவர் எழுதிய வரிகள், அவருடைய கவிதைகளுக்கும் பொருந்தும்.
இறகுகள் அரும்பின தாவரமொன்றைக் கண்டேன்.
வேர்களைக் காற்றில் விட்டிருந்தது அது.
கிளைகள் எனப்பின் அறியப்படுபவை
பூக்கள் கொண்டிருந்தன.
அதுதாவரமில்லை என்றுணரும் முன்பே
பறந்து விட்டிருந்தது காலம்.
இப்படி எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், அது, அந்தக் கவிதையை எழுதிய கவிஞனை, அவன் பறந்துவிட்டதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது, ஆகத் துயரமான வாசிப்பு அனுபவம்.
நேரில் கண்டிராத குமரகுருபரன் பற்றிய நினைவுகளை நீக்கிவிட்டு, அவர் கவிதைகளை கவிதைகளாகவே காண இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவையாய் இருக்கிறது.
நூல் – மறுபடியும் இருந்து ஆரம்பிக்க முடியாது (கவிதைகள்)
ஆசிரியர் – குமரகுருபரன்
பதிப்பகம் – உயிர்மை
விலை – ரூ.80/-
குமரகுருபரன் பற்றிய நினைவுகளை நீக்கிவிட்டு, அவர் கவிதைகளை கவிதைகளாகவே காண இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவையாய் இருக்கிறது.
கனம் கூடுகிறது இதயம். அருகாமைக்காரர்களின் இறப்பு வாழ்வின் மீதான நம்பிக்கையின்மை,பதட்டம்,வெறுமை என பல அகவலிகளைத் தருகிறது