கனிமொழி.ஜி.யின் முந்தைய தொகுதி குறித்தும் நான் எழுதியிருக்கிறேன். “கோடை நகர்ந்த கதை” என்றும் அவரின் இரண்டாம் தொகுதியும் எழுதத் தூண்டுகிறது.
“சிவிகை சுமப்பவனுக்கு
தன் காய்ப்பேறிய
தோள்களைக் கொத்தும்
காகம் குறித்து
புகார்களேதும் இல்லை”
இந்த வரிகள், மேலக்காரிகளுக்கு சாமரம் வீசும் குறப்படும் இடைநிலை அதிகாரிகளால் குதறப்படும் கீழ்நிலை பணியாளர்களில் இருந்து, எத்தனையோ திசைகளை சுட்டும் விரல்களாய் சுழல்கின்றன.
இந்தத் தொகுப்புக்குத் தலைப்புத் தந்த கவிதை,
“காற்றில் பறந்து
என் மேசைக்கு வந்த
இலைச்சருகு
கோடை நகர்ந்த
கதையைச் சொல்லி சரசரக்கிறது”
என்கிறது.
காற்றின் தீராப் பக்கங்கள் தீர்ந்ததாலோ என்னவோ மேசையில் எழுதுகிறது காற்று.
இந்தத் தொகுதியில், அபாரமான காட்சிப் படிமத்தை சுமக்கும் கவிதை, இற்றுப்போதல்
அரவமற்ற தீவின்
கரைமரத்தில் கட்டப்பட்டு
நீரில் ஆடிக்கொண்டிருக்கும்
படகின் கயிறு
மெல்ல இற்றுப்போகிறது
எழுத்து வளர வளர, தன்னைப் பற்றிய மதிப்பீடு சேர்ந்து வளர்வது, இயல்பான ஒன்று.
“அகரம்” எனும் தலைப்பில் அப்படியொரு கவிதை,
“உங்களின் மாயக்கோடுகளுக்குள்
ஒருபோதும்
என் வாழ்வையெழுத விரும்பவில்லை
நான் தாளின் கோடுகளுக்குள் அடங்காது
பெருஞ்சுழியோடு முதலெழுத்தை வரைந்தவள்”
இதே தொனியை சற்று விரித்துப்பேசும் கவிதை
“பறவையின் பாதையில் சுவடுகள் இல்லை” எனும் கவிதை,
“நான் வெளிச்சம் பூத்த நிலம்
உன் நிலவை இருளில் இருப்பவளுக்குப் பரிசளி
இமைகளற்றவள் நான்
நீயளித்த கனவுகளை எங்ஙனம் கைக்கொள்வேன்
நீ கைகளென்று பிடித்துக்கொண்டிருக்கும்
என் சிறகடர்ந்த இறக்கைகளை விட்டுவிடு”
என்பன போன்ற பளீர் வரிகளில் சுயம் சுடரும் கவிதை இது. இதன் ஒரே துயரம், அழகான கடைசி வரி, தலைப்பாக இருப்பது தான். விடையைச் சொல்லிவிட்டு புதிரைச் சொல்கிற மாதிரியான உத்தி இது.
சங்கக் கவிதையை நின்வூட்டும் சுகமான இசைமையில் எழுதப்பட்டுள்ள கவிதை “குறிஞ்சி நிலக்குருவியொன்று”.
“திறந்திருக்கும் பின்வாசல் படர்ந்த வெயிலில்
நிழல் கருமையைக் கொத்தும்
குறிஞ்சி நிலக்குருவியொன்று
கோடை குடித்துக் கொன்றையாய் சிரிக்கும்
மருதநிலத்தின் மரமொன்றில்
கூடுகட்ட விழைகிறது”
எனும் தெறிப்பான வரிகள் எத்தனையோ சொல்கின்றன.கோடைக்காலச் சரலின் ஈரம் இந்தத் தொகுப்பெங்கும்…
கனிமொழி.ஜி. இன்னும் சிறந்த படைப்புகளைத் தர வாழ்த்துகிறே
உங்கள் விமர்சனங்கள் என்னை வளர்ப்பவை… மிகப்பெருமிதம் கொள்கிறேன்…