இன்று முளைத்தது இன்று.. இதன்
கன்றாய் துளிர்விடும் நாளை….
அன்றே முடிந்தது அன்று-அதன்
அச்சம் சுமப்பவன் கோழை
நன்றே நிகழ்ந்தது வாழ்வு – இந்த
நிலையே தொடரட்டும் நாளை
என்றே தொடருக யாவும் – இந்த
எண்ணம் இறைவனின் லீலை
ஒவ்வொரு நிமிடமும் வைரம் – அதை
உணர்பவர் தொடுவார் உயரம்
செவ்விய செயல்களின் சேர்க்கை – ஒன்று
சேர்த்தால் அமைவதே வாழ்க்கை
கருதிடும் கனவுகள் உண்டு – அவை
கைவர வேண்டும் நன்று
உறுதியை நெஞ்சினில் கொண்டு – நாம்
உயர்ந்திட வேண்டும் இங்கு
இன்றெனும் கொடையை உணர்ந்து – அதன்
இயல்பினை அறிந்தே நடந்து
வென்றிட வேண்டும் உலகை – உங்கள்
வழித்துணையாய் இந்தக் கவிதை