வீசும் புயலை வெளியில் நிறுத்து
பேசும் பேச்சில் பேரொளி மலர்த்து
ஈசல் போலே இறகுதிராதே
வாசல் திறக்கும் வாடி விடாதே
தடங்கல்கள் எத்தனை தாண்டியிருக்கிறாய்
மயங்கி நிமிர்ந்து மீண்டிருக்கிறாய்
நடுங்கும் அவசியம் நமக்கினி இல்லை
தொடர்ந்து நடையிடு! திசைகளே எல்லை
ஆகச்சிறந்த ஆக்கங்கள் வளர்த்து
வேகத்தை நிறுத்தும் வேதனை விலக்கு
யோகம் பயின்று ஏற்றங்கள் நிகழ்த்து
வாகைகள் சூடி வாழ்வினை நடத்து
எல்லைகள் எல்லாம் நாமே வகுப்பது
இல்லா எதிர்ப்புகள் இதயம் நினைப்பது
வில்லாய் மனதை விரும்பி வளைத்திடு
வெல்க உன் கணை! வெற்றிகள் குவித்திடு