யாரோ உருட்டிய பகடையிலே
ஏதோ விழுவதா உன்வாழ்க்கை?
ஊரோ உலகோ கொடுப்பதல்ல
உனக்குள் இருப்பதே உன்வாழ்க்கை
நீரோ நெருப்போ எதுவரினும்
எல்லாம் நமது செயலாலே
போரோ புகழோ எல்லாமே
பழகும் நமது இயல்பாலே
பத்து நிமிடம் பேசியதும்
பழக சிலரிடம் பிடிக்கிறது
எத்தனை வருடமாய் தெரிந்தாலும்
ஏனோ சிலரை வெறுக்கிறது
வித்தைகள் காட்டத் தேவையில்லை
வெளிப்படையான பேச்சிருந்தால்
முத்திரை மனங்களில் பதித்திடலாம்
மனிதரை நம்வசம் ஈர்த்திடலாம்
வெள்ளைப் பேச்சால் வெற்றி வரும்
வெகுளிச் சிரிப்பால் வெற்றி வரும்
பிள்ளை குணத்தால் வெற்றி வரும்
பிறருக் குதவிட வெற்றி வரும்
கொள்ளை அன்பால் வெற்றி வரும்
கொடுக்கும் குணத்தால் வெற்றி வரும்
உள்ளம் திறந்த புத்தகமாய்
உள்ளவர்க் கெல்லாம் வெற்றி வரும்
எங்கோ எவரோ சந்திப்பார்
ஏதோ பேசிச் செல்கின்றார்
இங்கே இதனால் என்ன பயன்
என்றே எவரும் எண்ணாதீர்
அங்கே இங்கே அறிமுகங்கள்
அவையே தொடரும் உறவுகளாய்
தங்கு தடையின்றி பழகுபவர்
தினம்தினம் உலகை வென்றெடுப்பார்