காதில் விழுந்த கேலிச் சொற்களைக்
காற்றில் எறியுங்கள்
வீசிய பந்தாய் திரும்பிப் போகும்…..
விட்டுத் தள்ளுங்கள்
வாதம் செய்பவர் வழியில் வந்தால்
விலகிச் செல்லுங்கள்
வாழ்வில் நினைத்ததை அடைவதன் மூலம்
வெற்றி கொள்ளுங்கள்
குறுக்குப்பாதை இருக்கிறதென்றால்
காதுகள் பொத்துங்கள்
குறிக்கோள் எட்ட நேர்வழி போதும்
குதிரையைத் தட்டுங்கள்
வெறுக்கத் தக்கவர் வீண்சொல் தெருவில்
வீசிச் செல்லுங்கள்
விதைத்தவர் தமக்கே முள்ளாய் போகும்
விளக்கிக் கொள்ளுங்கள்.
ஊக்கம் கொஞ்சம் குறைந்தால் கூட
உடனே பாருங்கள்
உங்களை நீங்கள் நம்புவதாலே
உயர்வுகள் காணுங்கள்
நீக்க வேண்டிய பலவீனங்களை
நொடியில் நீக்குங்கள்
நீங்கள் வகுத்ததே நடக்கும் என்கிற
நம்பிக்கை கொள்ளுங்கள்.