குருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு
அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது
ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய
களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது
நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே
உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது
சுகங்களில் உடல்பழுது சுமைகளில் மனம் பழுது
சகலமும் சுகம்பெறுமே சத்குரு வரும்பொழுது
புன்னகை நந்தவனம் புனிதனின் குளிர்வதனம்
என்மனம் கரைந்துவிடும் இறையவன் முன்னழுது
தென்றலின் இதமிதுவா தெய்வத்தின் குரலிதுவா
மன்னவன் குருநாதன் மன்றத்தில் வரும்பொழுது
விண்மதி பொலிந்திருக்க விரல்களும் குவிந்திருக்க
கண்களும் நிறைந்துவிடும் குருமுன்னர் வரும்பொழுது
கீதங்கள் ஒலித்திருக்கும் கவிதைகள் மலர்ந்திருக்கும்
பாதங்கள் பதியஎங்கள் புண்ணியன் வரும்பொழுது