“கலகல” வென்று சிரித்தால் என்ன கவலை வரும்போது
“சிடுசிடு” வென்று இருப்பதாலே எதுவும் மாறாது
ஒருசில நாட்கள் சூரியன் தூங்கும்
ஒருசில நாட்கள் தவறாய்ப்போகும்
நடக்கும் தவறு நமது லீலை
சிரித்து விட்டுத் தொடர்க உன் வேலை
பிடித்து வைத்த களிமண்போல இருக்கக் கூடாது
சிரித்துவிட்டால் இதயக்கோவிலில் குப்பை சேராது
பாதையின் வளைவு வழியைக் காட்டும்
புன்னகை விளைவு வலியைப் போக்கும்
வேதனை இல்லா வீடுகள் இல்லை
வாழ்வோ தாழ்வோ நிரந்தர மில்லை…
மனசைக் கொட்டிக் கவிழ்க்கும் வித்தை சிரிப்பு ஒன்றேதான்
தினுசு தினுசாய் குழப்பம் எதற்கு? தெளிக இன்றேதான்
அற்புதம் படைக்கிற ஆண்டவன் கூட
அபத்தமாக சிலதைச் செய்வான்
தப்பே இல்லாக் கணக்குகள் இல்லை
ரப்பரைப் படைத்தவன் இதனை அறிவான்
வீட்டில் பாலை கவிழ்த்தால் வெடித்துச் சிரித்துவிடு
பாக்கெட்பாலை வாங்கிவந்து பாயாசம் வைத்துவிடு
பூனைக்கும் எறும்புக்கும் பாலில் விருந்து
வாய்விட்டுச் சிரிப்பது வாழ்க்கைக்கு மருந்து
வாட்டும் கவலைகள் வலிகளை மறந்து
நோக்கம் நோக்கி நடப்போம் விரைந்து