பெய்யும் பனியை வெயில் தின்னும்
படர்கிற கோடையை மழைதின்னும்
செய்கிற பணியை காலம் தின்ன
சிறிதும் வாய்ப்பு தர வேண்டாம்
தூண்டில் புழுவை மீன்தின்னும்
துடிக்கும் மீனை நாம் தின்போம்
நீண்ட கனவை தயக்கம் தின்ன
நிச்சயம் வாய்ப்பு தரவேண்டாம்
மண்ணின் சத்தை மரம்தின்னும்
மரம்விழுந்தாலோ மண்தின்னும்
எண்ணிய வெற்றியை எந்த எதிர்ப்பும்
எடுத்துத் தின்ன விடவேண்டாம்
கவிழ்கிற இருளோ பகல்தின்னும்
கதிரவன் எழுந்து இருள்தின்னும்
தவமாய் வளர்த்த கனவை அச்சம்
தாவித் தின்ன விடவேண்டாம்