புதிதாய் திருமணம் ஆனவர்க்கு
பணமோ பொருளோ தருவீர்கள்
புதுமனை புகுகுற உறவினர்க்கு
பரிசுப் பொருட்கள் தருவீர்கள்
புதிதாய் வாடிக்கையாளர் எனில்
பரிசும் சலுகையும் தருவீர்கள்..
புதிதாய் ஆண்டு வருகிறதே
புதிதாய் என்ன தருவீர்கள்.
உங்கள் உழைப்பை பரிசளித்து
உயர்வுகள் ஆயிரம் பெற்றிடுங்கள்
உங்கள் நம்பிக்கை பரிசளித்து
உலகத்தின் பார்வையில் பட்டிடுங்கள்
உங்கள் நேரத்தைப் பரிசளித்து
உன்னத பலன்கள் ஈட்டிடுங்கள்
உங்கள் இலட்சியம் தொடுவதற்கு
உங்களை முழுதாய் கொடுத்திடுங்கள்
வந்துவிட்டோம் பூமிக்கு
வழங்க வேண்டும் எதையேனும்
தந்தனர் பலரும் நமக்காக
தருவோம் நாமும் சிறிதேனும்
சந்திப்பவர்க்கு புன்னகையும்
சரிந்தவர் எழுந்திட ஒருகரமும்
எந்த வகையிலோ உதவிகளும்
ஏற்றவர் தமக்குத் தந்திடுவோம்
ஆண்டின் தொடக்கம் முதலாக
ஆண்ட முழுவதும் நலமாக
வேண்டிய உறுதி வளர்த்திடுவோம்
வாழ்வே மலர்போல் மலர்த்திடுவோம்
நீண்ட காலம் நிலைத்திருக்கும்
நற்பணி ஆயிரம் புரிந்திடுவோம்
ஆண்டினை ஆண்டு வாழ்ந்திடுக
ஆயிரம் வெற்றிகள் சூழ்ந்திடுக’