கோணலென்று சிலமூடர் குற்றம் சொல்வார்
குழைகிறதே நெறிகிறதே என்றும் சொல்வார்
ஊனமென்றும் சிலரதனை உளறக்கூடும்
உணராமல் பலவகையாய் பேசக் கூடும்
நாணலது காற்றினிலே வளையும் போக்கை
நாலும்தெ ரிந்தவர்கள் என்ன சொல்வார்?
ஞானமென்று கொண்டாடி மகிழ்வார் – ஆமாம்
நாணல்போல் வாழ்பவர்க்கு நன்மை உண்டு.
எப்போதும் இரும்பைப் போல் இருப்பதென்றால்
எதற்காக இதயமென ஒன்று வேண்டும்?
முப்போதும் கல்போலக் கிடப்பதென்றால்
மூச்சுவிட எதற்காக முயல வேண்டும்?
இப்போதும் அப்போதும் மாற்றம் நூறு
ஏராளம் என்பதனை உணர வேண்டும்
தப்பேதும் செய்யாமல் இருந்தால் போதும்
தண்ணீர்போல் இயல்பாக இருக்க வேண்டும்.
வற்றாத ஊருணிபோல் மனித வாழ்க்கை
வழிப்போக்கர் அனைவருக்கும் ஒருகை தண்ணீர்
கற்றாரும் கல்லாரும் மதிப்பில் ஒன்றே
கனிந்தமனம் இதையறியும், புரிதல் கொள்ளும்
பெற்றகல்வி செல்வமென எதுவானாலும்
பயன்பட்டால் மட்டும்தான் பெருமை உண்டு
சற்றேநேரம் இறுக்கங்கள் தளர்ந்தால் போதும்
சமாதானம் எனும் தென்றல் நம்மைச் சூழும்.