சிறகுகள் இருந்தும் என்னபயன் – அந்த
சேவல்பறக்க மறந்துவிட்டால்
உறவுகள் இருந்தும் என்னபயன் – உன்
உணர்வுகள் மதிக்க மறந்துவிட்டால்
பிறவி எடுத்தும் என்னபயன் – நீ
பயனுற வாழ மறந்துவிட்டால்
மறதி இருந்தும் என்னபயன் – நீ
மனதில் குப்பைகள் சுமந்திருந்தால்
வந்ததன் நோக்கம் உன்னுள்ளே – நீ
வேட்டை நடத்திக் கண்டுபிடி
எந்திர தினங்களை நடத்தாமல் – நீ
எழுதினம் புதுமைகள் செய்தபடி
முந்தைய தோல்விகள் மறந்துவிடு – நீ
முயற்சியில் புதிதாய்ப் பிறந்தபடி
வந்தோம் போனோம் என்னாமல் – புது
வரலாறாக வளர்ந்தபடி
காலம் தன்னைப் புதுப்பிக்கும் – ஒரு
கணமும் பழைய கணமில்லை
மூலம் இந்தக் கணக்கேதான் – இதை
முறையாய் உணர்ந்தால் கனமில்லை
வேலை செய்கிற சுகம்போலே – இந்த
வாழ்வில் வேறு சுகமில்லை
பாலாய் பொங்குக கனவுகளே – இந்தப்
பாத்திரம் சூடாய் இருக்கும்வரை