வானமுகில் கதைபேசி ஓய்ந்தால் – சொன்ன
வார்த்தைசொல்லி சலசலக்கும் ஆறு!
தேனீக்கள் கதைபேசி ஓய்ந்தால் – நல்ல
தேன்துளிகள் சேமிக்கும் கூடு
கானங்கள் கதைபேசி ஓய்ந்தால் – அந்த
காருண்யம் சுமந்திருக்கும் காற்று
மனிதர்கள் கதைபேசி ஓய்ந்தபின் – அங்கே
மண்ணுக்கு ஏதுபயன் கூறு?
நேரங்கள் தின்னும்வீண் பேச்சு – அதை
நிறுத்திவைத்தால் பெருகிவரும் ஆக்கம்
பாரங்கள் சுமந்திருக்கும் நெஞ்சே – வீண்
பேச்சைநீ குறைத்தால்தான் ஊக்கம்
யாராரோ ஏதேதோ செய்தால் – அட
ஏனுனக்கு அதுபற்றி ஏக்கம்
ஊர்வம்பை நாடுவதை விட்டால் – அது
உன்வாழ்வில் பெரும்வெற்றி சேர்க்கும்
பேசுவதில் சுகம்காணும் மூடர் – உன்
பொழுதுகொள்ளை கொள்ளாமல் பார்ப்பாய்
ஏசுவதில் ஏதுபயன் தோழா – நீ
இருக்கும்வரை சிறந்ததையே கேட்பாய்
வீசுகிற காற்றினைபோல் நீயும் – ஒரு
விசைகொண்டு திசையெட்டும் அளப்பாய்
மாசடைந்த மனங்களினைத் தாண்டி – இந்த
மணணுலகில் செயல்களினால் நிலைப்பாய்