வானப் பரப்பிடையே – கரு
வண்ணக் கருமுகில்கள்
தேனைப் பொழிகையிலே – மணி
திமிறிச் சிலிர்க்கிறது
ஏனோ கடும்வெய்யில் – என
ஏங்கிய ஏக்கம்போய்
தானாய் குழைகிறது – விதை
தாங்கி மலர்கிறது
நேற்றைய கோடைவலி – அதன்
நினைவில் துளியுமில்லை
தோற்ற வலிகளையேன் – நீ
தூக்கிச் சுமக்கின்றாய்?
காற்றின் திசைமாறும்- உன்
காயங்கள காய்வதற்கு
ஊற்றுகள் உருவாகும் – புனல்
ஊறிப் பாய்வதற்கு
இந்த விநாடியிலே – வாழ்க்கை
என்ன கொடுக்கிறது?
எந்த முடிச்சுகளை – அது
எப்படி அவிழ்க்கிறது?
இந்தக் கனலைமட்டும் – நீ
இதயத்தில் வளர்த்தெடுப்பாய்
முந்தைய வலியையெல்லாம் – நீ
முற்றிலும் துடைத்தெடுப்பாய்
என்றோ தாண்டியதை – நீ
ஏனின்னும் எண்ணுகிறாய்
தின்று முடித்ததனை – ஏன்
திரும்பவும் தேடுகிறாய்
இன்றுநீ வந்த இடம் – இனி
இதையும் கடந்திடுவாய்
நின்றிட நேரமில்லை – உன்
நடையைத் தொடர்ந்திடுவாய்