காற்று நடக்கிற வான்வெளியில் – உன்
கனவுகள் இருக்கும் பத்திரமாய்
நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் – உன்
நினைவில் இருக்கும் சித்திரமாய்
கீற்று வெளிச்சம் படிந்தபின்னே – இருள்
கூடாரங்கள் கலைத்துவிடும்
ஆற்றல் அரும்பி வெளிப்பட்டால் – உன்
ஆதங்கங்கள் தொலைந்துவிடும்
தேடல்கள் இலக்கைத் தொடுவதற்கே – ஒரு
தேதி இருக்கும் நிச்சயமாய்
வாடும் நிலைகள் மாறிவிட – உன்
வாழ்க்கை மலரும் உற்சவமாய்
கூடுகள் அமைக்கிற பறவைக்கெல்லாம் – இந்த
குவலயம் முழுவதுரும் இரைகிடைக்கும்
வீடெனும் வேலியைத் தாண்டிவிடு – இந்த
வையகம் உனக்குத் துணியிருக்கும்
சின்னச் சின்ன வட்டங்கள் – உன்
சிறகுகள் விரிவதைத் தடுப்பதுவோ?
ஜன்னல் கம்பிக்கும் பின்னிருந்தே – ஒரு
ஜன்மம் முழுவதும் கிடப்பதுவோ
மின்னல் மழையோ கடும்வெயிலோ – உன்
முயற்சிகள் தினமும் தொடர்ந்துவிடு
என்ன தொலைவாய் இருந்தாலும் – நீ
எப்படியாவது கடந்துவிடு.
செய்கிற நகைகளின் கலையழகில் – அட
சிறிதளவேனும் சேதாரம்
கையளவேனும் உறுதிகொண்டால் – நீ
கண்ட வலிகளே ஆதாரம்
எய்கிற அம்பாய் இருக்காதே – நீ
எண்ணிச் செயல்பட இதுநேரம்
மையிருள் வானத்தில் விலகும்முன்னே – உன்
மனதுக்குள் ஒலிக்கட்டும் பூபாளம்.