பூமியின் ஆயுள் என்னவென்றே -சிலர்
புலம்பித் தள்ளிடுவார்
சாமியின் ஆயுள் என்னவென்றும் – சிலர்
சஞ்சலம் கொண்டிடுவார்
ஆமிந்த உலகின் ஆயுளெல்லாம் நாம்
ஆக்கும் செயல்களிலே
தாமதம் இன்றி செயல்புரிந்தால் அவை
தாமாய் நிலைத்திருக்கும்
ஏதும் நிரந்தரம் இல்லையெனில் – அட
ஏனிந்தப் பாடுகளும்
வாதம் புரிந்திட நேரமில்லை – இந்த
வாழ்வே ஆடுகளம்
மோதிப் பார்ப்பதில் உள்ளசுகம் – அதை
மேதைகள் உணர்ந்திருப்பார்
ஏதும் செய்திட அறியாதோர் – தினம்
ஏக்கத்தில் ஆழ்ந்திருப்பார்
சின்னச் சின்ன ஸ்வரங்களிலே – நல்ல
சங்கீதம் பிறக்கிறது
சின்னச் சின்ன செயல்களிலே – என்றும்
சந்தோஷம் இருக்கிறது
உன்னால் முடிந்தது எவ்வளவோ – அதை
உடனே செய்துவிடு
தன்னால் நிகழும் சாதனைகள் – மனத்
தயக்கம் தகர்த்துவிடு