முகிலின் கனவுகள் மழையானால்
மழையின் கனவுகள் நதியானால்
அகலின் கனவுகள் ஒளியானால்
அகமே உந்தன் கனவென்ன?
யாழின் கனவுகள் ஸ்வரமானால்
ஸ்வரங்களின் கனவுகள் இசையானால்
வாழையின் கனவுகள் கன்றானால்
வாழ்வே உந்தன் கனவென்ன?
கடலின் கனவுகள் முத்தானால்
நித்திலக் கனவுகள் ஒளியானால்
மடலின் கனவுகள் பதிலானால்
மனமே உந்தன் கனவென்ன?
தோணியின் கனவுகள் துடுப்பானால்
துடுப்பின் கனவுகள் திசையானால்
காணிநிலம் கவி கனவானால்
கூறக உந்தன் கனவென்ன?
எல்லார் மனதிலும் கனவுண்டு
கனவுகள் அனைத்துக்கும் வடிவுண்டு
சொல்லாக் கனவுகள் நினைவோடு
நினைத்தவை நடந்திடத் தடையென்ன
எல்லாத் தடைகளும் தாண்டிடத்தான்
எல்லாத் திரிகளும் தூண்டிடத்தான்
நில்லா நதிபோல் நடைபோடு
நீதான் நிஜமெனும் உணர்வோடு.