காலத்தால் பண்படுதல் மனித நீதி
கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி
கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும்
கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும்
வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று
வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று
நூலறிவும் நுண்ணிறிவும் வளரும்போது
நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?
தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள்
தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு
ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில்
அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு?
தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார்
தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால்
மூவருக்கு மட்டுமல்ல! நம்தேசத்தில்
மூண்டபல குற்றங்கள் புரிந்துவிட்ட
யாவருக்கும் சிறைவாசம் தரலாம் – ஆனால்
யாருயிரைப் பறிப்பதுவும் நியாயமில்லை
காவலுக்கே சட்டங்கள் கொல்ல அல்ல!
கருணைக்கே குடியரசு! கொளுத்த அல்ல!
பூவுலகே கொண்டாடும் புனித பூமி
பொருந்தாத தண்டனையைப் போக்க வேண்டும்!
வீரமங்கை செங்கொடியின் விரல்கிழித்து
விழித்தெழுந்த தீக்கனலின் வெப்பம் போதும்
ஈரவிறகாய் இருக்கும் மனதில் கூட
இனவுணர்வு என்கிற செந்தீ மூளும்
தூரத்தே தெரிகின்ற சிறுவெளிச்சம்
தூக்கிலிடும் சட்டத்தைத்தூக்கில் போடும்
பாரதத்தின் சட்டத்தைத் திருத்தும் கைகள்
பார்முழுதும் கொண்டாடும் பொருமை காணும்!