அசையாமல் நீயிருக்க யோகியுமல்ல!
அப்படியே உட்காரப் பாறையுமல்ல!
திசையாவும் திரிகின்ற பறவையைப் பார் நீ!
திரிந்தலைய அதன் தேவை கோடி செல்வமா?
விசை வேண்டும் நம்முடற்கு வீணில் கிடப்பதா?
வேலையொன்றும் செய்யாமல் சோம்பி இருப்பதா?
இரும்பு கூடத் தரைகிடந்தால் துருப்பிடிக்குமாம்
விரும்பு எதையும் செய்ய விரும்பு விடிவு காணலாம்
வேலை யாவும் சுமைகளல்ல சுகமும் காணலாம்
கரும்பு போல வாழ்வை மாற்றக் கடமை யாற்றுவாய்!
காலநேரம் பார்த்தி டாமல் உழைப்பில் மூழ்குவாய்.
தண்ணீரில் சிறகடித்தால் அலையில் மிதக்கலாம்
தரையிலிருந்து சிறகசைத்தால் காற்றில் மிதக்கலாம்
நிலவிலிருந்து சிறகடித்தால் அண்டம் கடக்கலாம்
எதிலும் முயற்சிவேண்டும்மென்ற எண்ணம் வேண்டுமே!
அந்த முயற்சி விதியை மாற்றும் உயர்வு திண்ணமே!