மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம்
மழையின் கோலங்கள் ஆகும்
செந்நெல் செழித்த வயல்களின் நடுவே
தென்றல் கோலங்கள் போடும்
தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள்
சிந்தனைக் கோலங்கள் ஆகும்
இன்னும் இன்னும் உள்ளே அமிழ
எண்ணங்கள் இமயம் ஆகும்!
பொன்னுடன் வாழ்க்கை பொருளுடன் வாழ்க்கை
புகழுடன் எல்லாம் சரிதான்
என்னென்ன தேடல் எனினும் எல்லாம்
தன்னிறைவடையும் வரைதான்
“என்னுடன்” என்கிற எண்ணத்தின் எல்லையை
எட்டிடும் நொடிதான் நிறைவு
பொன்னினும் விலைமிகு பொருளினை உள்ளே
பார்க்கிற வாழ்வே பொலிவு!
எல்லா நிலையில் வெல்லவும் வேண்டும்
என்றும் பணியவும் வேண்டும்
பொல்லா மனிதன்முன் சீறவும் வேண்டும்
பரிவில் கனியும் வேண்டும்
நில்லா உலகில் நிலைபெறும் விதமாய்
நித்தம் பணிசெய்ய வேண்டும்
சொல்லா வார்த்தைகள் செல்வதன் வழியே
சோர்வுகள் அகற்றிட வேண்டும்!
புள்ளிகள் வைத்துக் கோலங்கள் போடும்
பெண்களின் கைவண்ணாம் போலே
உள்ளம் நினைத்தவை உருப்பெறும்போது
உவகை மலர்வதனாலே
தள்ளி வைப்பதைத தவிர்த்திடு மனமே
துணிவாய்க் களத்தில் இறங்கு
பள்ளம் மேடுகள் பாதையில் வரலாம்
பயங்கொள்ளாமல் இயங்கு!