சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி
சூட்டைத் தெளிக்கும் வானம்
காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே
காத்துக் கிடக்கும் மேகம்
பேரிகை போல இடியை முழக்கிப்
பொழிய வளர்த்து வேளை வருகையில்
வீசியடிப்பதே ஞானம்!
உன்னில் திறமை உருவெடுக்கும் வரை
உள்ளே பொறுமை வளர்ப்பாய்
என்னவும் வலிமை என்பதைக் காட்ட
ஏற்படும் தருணம்…. பொறுப்பாய்
இன்னும் பொறுமை இன்னும் பொருமை
என்கிற மந்திரம் ஜெபிப்பாய்
மின்னும் சுடராய் முழுமை அடைந்தபின்
மறைப்பவை மறைந்து ஜொலிப்பாய்!
எல்லாம் தெரிந்தவர் இருப்பார் இங்கே
ஏது அறியார் போலே
பொல்லா மனிதர் ஆடும் ஆட்டம்
பார்த்தும் பாரார் போலே
சொல்லால் மட்டுமெ ஜாலங்கள் செய்வார்
சாயம் வெளுத்துப் போகும்
கல்லாய் இருக்கும் உறுதியில்தானே
கலையின் அம்சம் தோன்றும்!
வாய்ப்புகள் வரும்வரை காத்திரு என்பதே
வானம் வழங்கும் பாடம்
காய்கள் எல்லாம் கனியும் என்பதை
காட்டிக் கொடுக்கும் காலம்
ஓய்வே வெற்றிகள் சேரும்
தேய்பிறை நிலவுக்குத் தொடர்கதையல்ல
திரும்பவும் பெளர்ணமி அகும்!