வீணையை உறையிட்டு மூடிவைத்தும்
வீணை என்பதை வடிவம் சொல்லும்!
பூணும் உறையினுள் வாளிருந்தும்
புரிபடும் வாளென்று… பார்த்ததுமே!
காலம் வரும்வரை காயாக
காலம் கனிந்ததும் கனியாக
கோலங்கள் மாற்றும் தாவரங்கள்
கூடிச் சுவைத்திடும் பறவையெலாம்!
தன்னை வெளிப்பட உணர்த்துதற்கு
தருணம் பிறந்திடும் யாருக்கும்
உன்னில் உள்ளது என்னவென்றே
உணர்ந்திட நாள்வரும் ஊருக்கும்!
ஆழ்மனம் கொண்ட தகுதிகள்தான்
ஆசைகள் என்று வெளிப்படுமாம்
தாழ்வாய் தன்னை கருதாமல்
தீயாய் எழுந்தால் ஒளிவருமாம்!
ஒவ்வொரு நாளும் சூரியனும்
ஒவ்வொரு நேரத்தில் வருகிறது
எவ்விதம் தீவிரம் என்பதில்தான்
எண்ணம் செயலாய் மல்ர்கிற்து!
என்ன நினைப்போ அதைநோக்கி
நடையிடத் தடையொன்றும் கிடையாது
உன்னைக் கைவிடும் உரிமைமட்டும்
உனக்கெந்த நாளலும் கிடையாது!