ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும்
அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும்
காயங்கள் எத்தனை மனம் கொண்டாலும்
கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும்
மாயங்கள்ௐ செய்வது மானிட நேயம்
மனதில் இதனைப் பதித்துவிடு
சாயம் போனவர் வாழ்வினில் நீயே
சூரியன் போல உதித்துவிடும்!
சோர்ந்தவர் வாழ்வினில் சுடரொன்று கொடுத்தால்
சொத்துகள் அழியப் போவதில்லை
சேர்ந்தவர் நலனே நம்நலன் அலவோ
தனியாய் எவரும் வாழ்வதில்லை
தாழ்ந்தவர் உயர்ந்தவர் யாருமில்லை – இதில்
தள்ளி நின்றிடத் தேவையில்லை
வீழ்ந்தவர் எழுந்திடக் கைகொடு போதும்
வாழ்வில் அதைவிட சேவையில்லை!
சொர்க்கம் என்பது தனியாய் இல்லை
சொந்த பந்தங்கள் தருவதுதான்
தர்க்கம் ஆயிரம் வரலாம் – ஆனால்
தொடரும் அன்பு நிரந்தரம்தான்
சிக்கல் இல்லா உரிமையில்தான்
மக்கள் வாழ இறைவன் வகுத்த
மந்திரம் என்பதே ஒற்றுமைதான்!
மூடிய மொட்டுகள் திறக்கிற வேலையில்
மண்ணெங்கும் வாசனை நிறைகிறது
பாடும் பறவைகள் சிறகுகள் விரிக்கையில்
திசைகள் நமக்கெனத் திறக்கிறது
கூடி வாழ்கிற குதூகலத்தில்தான்
கிழக்கும் கூட விடிகிறது!