பல்லவி
————
ஒரு பார்வை….ஒரு புன்னகை
உயிரையும் தருவான் சீடன்
குருமேன்மை …அறியாமல்
குதர்க்கம் சொல்பவன் மூடன்
பலர்வாழ்வில் இருள்நீங்க
ஒளியாய் வந்தவன் ஈசன்…
நலம்யாவும் நமதாக
தனையே தருகிற நேசன்
சரணம்-1
————
வான்விட்டு வருகிற தூயநதி
பூமியை நனைக்கிற பாகீரதி
ஊன்தொட்ட உயிரை நனைக்கிற குருவும்
உண்மையில் உண்மையில் ஜீவநதி!
பாவங்கள் கரைக்கிற வேகத்திலே
கேள்விகள் தீர்க்கிற ஞானத்திலே
நதியெனப் பெருகும் குருவின் திருவடி
அதுதான் அதுதான் தாயின்மடி!
( ஒரு பார்வை
துறைமுகம் தேடிடும் படகுகளே
குருமுகம் தேடிடும் உணர்வுகளே
திருமுகம் பார்த்து தவிப்புகள் தீர்த்து
பிறவிகள் தீர்ப்போம் வாருங்களேன்!
வினைகளின் சுமைகள் ஏற்றிடுவார்
விரைவாய் படகை ஓட்டிடுவார்
மறுகரை சேர்ப்பார் மறுமையும் தீர்ப்பார்
சத்குரு சந்நிதி சேருங்களேன்!
ஒரு பார்வை….ஒரு புன்னகை
உயிரையும் தருவான் சீடன்
குருமேன்மை …அறியாமல்
குதர்க்கம் சொல்பவன் மூடன்
பலர்வாழ்வில் இருள்நீங்க
ஒளியாய் வந்தவன் ஈசன்…
நலம்யாவும் நமதாக
தனையே தருகிற நேசன்