காற்றில் தவழ்கிற ஒருபாடல் -அது
காதில் விழுந்தால் நல்லநாள்
நேற்று மலர்ந்து ஒருதேடல் – அது
நெஞ்சில் இருந்தால் நல்லநாள்
ஊற்றெனப் பொங்கும் உற்சாகம் -அது
உந்தித் தள்ளினால் நல்லநாள்
போற்றிய கனவுகள் நிஜமானால் – உங்கள்
பாதையில் அதுமிக நல்லநாள்.
முன்பின் தெரியா ஒருகுழந்தை – சிறு
முறுவல் சிந்தினால் நல்லநாள்
தன்னைத் தேடும் ஒரு மனிதர் – உங்கள்
தோள்களைத் தொட்டால் நல்லநாள்
இன்னகள் சுமக்கும் ஒருகிழவர் – அவர்
இரைப்பை நிரப்பினால் நல்லநாள்
இன்னும் இன்னும் எனும் ஆர்வம் – உங்கள்
இதயத்தில் மலர்ந்தால் நல்லநாள்
வாழ்வின் கடமைகள் நடுவினிலே – அந்த
வானம் பார்த்தால் நல்லநாள்
தாழ்வும் உயர்வும் இயல்பென்றே – மனம்
தெளிந்தாள் அதுவும் நல்லநாள்
சூழ்நிலை முகிலாய் மறைத்தாலும் – நாம்
சூரியன் ஆனால் நல்லநாள்
ஆழம் அகலம் உணர்ந்திருந்தால் வரும்
அத்தனை நாட்களும் நல்ல நாள்.