இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம்
நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம்
தமையை உணராதிருப்பதனால் –  நாம்
துயரம் என்று தவிக்கின்றோம்
சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட
சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன?
சுமைகள் மனதில் ஏற்பவனே – அதை
சுட்டுப் பொசுக்கத் தயக்கமென்ன?

உள்ளே இருக்கும் கனவுகள்தான் – நல்ல
உரம்தரும் உனது தோள்களுக்கு
பள்ளிப் பருவத்து உற்சாகம் – அதப்
பரிசாய்க் கொடு உன் கால்களுக்கு
வெள்ளி உறைக்குள் போட்டாலும் – புகழ்
வெளியே கிளம்பும் வாள்களுக்கு
தள்ளிடு தயக்கம் சோர்வுகளை – தடை
தகர்த்திட பயந்தால் வாழ்வெதற்கு?

கனவுகள் உனது பிறப்புரிமை – அதைக்
காரியம் ஆக்குதல் உன்கடமை
தினம்வரும் விடியல் உன்னுடைடை – அதில்
தங்கம் எடுப்பது உன்திறமை
மனமெனும் புதையலின் சாவியெடு – அதை
மறைக்கும் பூதத்தை ஓட்டிவிடு
இனியென்ன தாமதம் துணிந்துவிடு –  நீ
எண்ணியபடியே உயர்ந்துவிடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *