பல்லவி
உலகம் எங்கும் தினம் அழகுபொங்கும் அட எங்கள் தலைமுறையினாலெ
மழலை பேசிவரும் மலர்கள் வீசும்மணம் அன்பு நிறைவதனாலே
பூமி எங்கள் தாய்மடி
வாழச்சொல்லும் வான்வெளி
நாடு நகரம் எங்கும் பாடும் பறவைகளாம் நாங்கள் போகும்வழி புதுவழி!
சரணம்
சின்னச் சிறகுகளே மின்னல் பறவைகளே
எந்தத் திசைகளிலும் எங்கள் உறவுகளே
ஆயுதம் இல்லா உலகம் – இனி
ஆனந்தமாக மலரும்
சோகங்கள் எல்லாம் முடியும் – புது
ஜோதியில் நாளை விடியும்
எட்டுத்திக்கும் நட்புகொண்டு பாலமிடுவோம்
தக்கதிமி தக்கதிமி தாளமிடுவோம்
மொட்டுள்விட்ட நந்தவனம் போலவருவோம்
காலம் எங்கள் காலம் என்று கானம்பாடுவோமே
சரணம் – 2
எங்கள் உரிமைகளே எங்கும் மலருகவே
எங்கள் கனவுகளே இங்கே நிகழுகவே
வேலிகள் எதுவும் இல்லை – நெஞ்சில்
பேதங்கள் எதுவும் இல்லை
ஆசையில் தாவும் பிள்ளை – இது
ஆயிரம் இதழ்களின் முல்லை
சின்னச் சின்னப் பிள்ளைகளின் புன்னகையிலே
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு உள்ளபடியே
வண்ண வண்ணப் பூக்களென ஆடும் எங்களை
கண்ணில் வைத்துக் காக்கவேண்டும் இந்த உலகே
நேசமென்னும் தென்றல் வந்து வீசும் எங்குமே