பாதைகள் இல்லாப் பாறைகள் வழியே
பாய்ந்து வருகிற நதியொன்று!
மோதி நடந்து தரையில் விழுந்து
மெல்ல வகுக்கும் வழியொன்று!
“ஆதரவில்லை எனக்”கெனும் சொல்லை
அழித்து நடக்கும் பேராறு!
ஏதுமில்லாமல் தொடங்கி ஜெயித்தால்
எழுதுமுன் பெயரை வரலாறு!
உள்ளுக்குள்ளே உரமாய் இருந்தால்
உலகம் உன்னை உணர்ந்துவிடும்
தள்ளிய பிறகும் துடிப்பாய் எழுந்தால்
தீரன் நீயெனத் தெரிந்துவிடும்
வெள்ளம் போல சுவடுகள் கரைந்துவிடும்
முள்ளில் நடந்த கால்களுக்காக
மலர்கள் ஒருநாள் பாதையிடும்
வீசும் புயல்கள் வருவதை எண்ணி
விதைகள் பயந்தால் வேர்விடுமா?
பேசும் பழிச்சொல் மனதில் சுமந்தால்
புதிய சிந்தனை தோன்றிடுமா?
ஏசிப்பிழைப்பவன் எதையும் சொல்வான்
பூசி மெழுகும் பாசாங்கெதற்கு
புறப்படு நண்பா தனித்துவமாய்