மின்னல் வந்து இருள்தின்னும் ஒரு
மழைநாள் இரவினிலே
ஜன்னல் வழியே பன்னீரைமுகில்
சிந்திய வேளையிலே
என்ன பண்டிகை வானிலென்றே -நான்
எட்டிப் பார்த்தேனா -அட
உன்னைத் தானெதிர் பார்த்தேன் என்கிற என்றிடி
ஒங்கிச் சிரித்ததடா!
கண்களில் மழைவரும் கால்ங்களில்நீ
கோழையில் கோழையடா
எண்ணி எண்ணி ஏங்கித் தவிப்பவன்
இவன்தான் எழையடா
மண்ணுக் கெந்த பயனுமில் லாமல்
மனம்போல் வாழுபவன் -தான்
பண்ணிய தவறுகள் எண்ணி அழுவதில்
பயனொன்றில்லையடா
மற்றவர்க்குதவிய மகிழ்ச்சியில் கண்கள்
மழையாய்ப் பொழியட்டும்
உற்றவர் பரிவினில் நனைகிற பொழுதினில்
உன்கண் கலங்கட்டும்
முற்றிடும் தியானத்தின் முத்திரை வேளையில்
குற்றமில் லாத கண்ணீர்த் துளிகள்
கங்கையென் றாகட்டும்
இப்படி சிரித்த இடிக்குரல் கேட்டதில்
இதயம் தெளிந்துவிட்டேன்
எப்பொழுதும் தன் ஏக்கங்கள் சொல்பவர்
எளியரென் றறிந்துவிட்டேன்
அற்புதம் வாழ்வென்று அறிகையில் பொழிகிற
ஆனந்தம் நிரம்பட்டும் -அன்பைக்
கற்பக விருட்சமாய் கொடுக்கிறா மனிதனைக்
காலங்கள் காக்கட்டும்