நகரும் நிமிடங்கள் முதலீடு -இதில்
நஷ்டக் கணக்குகள் கூடாது
சிகரம் தொடுவது நம் இலக்கு -இதில்
சுணக்கம் என்பதே ஆகாது!
முகமில்லாத தினங்களுக்கும் -ஒரு
முகவரி கொடுப்பது நம் உழைப்பு
பகலும் இரவும் நம் வசத்தில் -இதில்
பயன்கள் காணட்டும் நம்முனைப்பு
பத்துவிரல்களின் பிடியினிலே -மிகப்
பத்திரமாய் நம் நிகழ்காலம்
யுத்த களத்தின் வீரனைப்போல் -நீ
எழுந்தால் உனக்கே எதிர்காலம்
புத்தகம் பேசும் உறுதிகளை – உன்
புத்தியில் இறக்கிப் பயன்படுத்து
நித்தமும் உன்னைப் புதுப்பித்து -அட
நீ யார் என்பதைப் புலப்படுத்து!
வீசும் புயல்கள் வீசட்டும் – நீ
விலகி நிமிரப் பழகிவிடு
ஆசைகள் நிஜமாய் ஆகட்டும்-நீ
அலுப்பில்லாமல் முயன்றுவிடு
பேசும் உதடுகள் பேசட்டுமே – உன்
பாதையில் பயணம் தொடர்ந்துவிடு
வாசல் திறவா இடங்களிலும் -நீ
வெய்யில் போல நுழைந்துவிடு.