ஆளுவாய் ஆல வாயே!
பூடகப் பொய்கள் பார்த்து
புன்னகை செய்து கொள்வாய்;
நாடகத் திரைகள் எல்லாம்
நாயகீ! நீக்கி வைப்பாய்;
ஏடகத்து இருப்பாய்; எங்கள்
எழுத்தெலாம் அபகரிப்பாய்;
ஆடகப் பொன்னே & நீயே
ஆளுவாய் ஆல வாயே!
செங்கயல் துள்ளும் வையை
செந்தமிழ் அரசீ! நின்றன்
பங்கயப் பதம்பணிந்தே
பலவினை கரைந்து போகும்;
மங்கல வதனம் மின்னும்
மௌனத்தின் உரையே வேதம்;
அங்கயற் கண்ணி நீயே
ஆளுவாய் ஆல வாயே;
வேணிக்குள கங்கை கொண்ட
வேதன்மேல் காதல் கொண்டாய்;
மாணிக்கப் பொன் மூக்குத்தி
மின்னிடக் கோவில் கொண்டாய்
ஆணிப்பொன் மண்டபத்தில்
ஆளுமைக் காவல் கொண்டாய்
ஆணவம் நீக்கும் தாயே;
ஆளுவாய் ஆல வாயே;
கையிலே கனகக் கிள்ளை
கொண்டவள் தென்னன் பிள்ளை
மெய்யுளே மெய்யை வைத்த
மாதங்கி நிற்கும் எல்லை;
வையகம் வாழ வேண்டி
வையையில் பூத்த முல்லை;
அய்யனின் அருளே நீயே
ஆளுவாய் ஆல வாயே;