ஆட்டிப் படைக்கிறவள்
அகல்களில் ஒளிர்பவளோ -அவள்
ஆனந்த பைரவியோ
பகலெனும் பார்வையினால் -என்
பவவினை எரிப்பவளோ
கொலுமுகம் காண்பவளோ-அவள்
குமரியை ஆள்பவளோ
நிலவென எழுபவளோ-என்
நிழலெனத் தொடர்பவளோ
சலங்கையில் அதிர்பவளோ -அவள்
சாமுண்டி மலையினளோ
கலங்கிடும் பொழுதினிலே-என்
கவலைகள் துடைப்பவளோ
ஶ்ரீபுரம் ஆள்பவளோ -அவள்
சிந்துர நிறத்தினளோ
ஶ்ரீசக்ர ரூபிணியோ-என்
சிறுமைகள் பொறுப்பவளோ
ஏதென்று சொல்லுவதோ-அவள்
எங்கெங்கும் நிறைந்தவளோ
மாதங்கி மாரியென்றே-இந்த
மாநிலம் காப்பவளோ
மங்கல மாதங்கியோ-அவள்
மந்திரம் ஆள்பவளோ
குங்கும வாசனையாய் -வந்து
குலவிடும் மோகினியோ
இத்தனை பிறவிகளாய்-எனை
இயக்கிடும் சக்தியவள்
அத்தனை கோள்களையும்-தினம்
ஆட்டிப் படைக்கிறவள்
கோயில் கருவறையில்-நின்று
குளிர்நகை புரிபவளை
மாயைகள் செய்பவளை-மஹா
மாயையைக் கைதொழுவோம்