சரண்புகுந்தோம்
அகலின் நுனியில் அவள்சிரிப்பு-அதில்
ஆயிரம் கேள்விக்கு விடையிருக்கும்
நகரும் கோள்கள் அவள்கணக்கு-அதில்
நிகழ்கணம் என்றொரு ஜதியிருக்கும்
பகலும் இரவும் அவள்புரட்டு-அதில்
பகட்டு நாடகம் மறைந்திருக்கும்
இகமும் பரமும் அவள் படைப்பு-அதில்
எல்லையின்மையின் லயமிருக்கும்
கன்னியின் சிறுவிரல் அசைவினிலே-யுகம்
கனவென அரும்பும் கலைந்திருக்கும்
அன்னையின் கடையிதழ் புன்னகையில்-அட
ஆயிரம் காவியம் அரும்பிநிற்கும்
முன்னைச் சிவனின் நுதல்விழியில்-அவள்
மூலத் திருக்கனல் ஒளிர்ந்திருக்கும்
தன்னை எதிலும் நிறைத்தவளின்- பெரும்
தயவால் பிரபஞ்சம் உயிர்த்திருக்கும்
மேதையர் நிகழ்த்தும் பேதைமைகள்-அட
மூடர்கள் படைக்கும் அற்புதங்கள்
பாதைகள் எதுவும் இல்லாமல் -நல்ல
பயணம் நிகழ்கிற அதிசயங்கள்
காதல் பாசம் துரோகமென-இங்கே
கலந்து தெறிக்கிற வண்ணங்கள்
ஈதனைத்தும் அவள் விளையாட்டாம்-இதை
இனங்கண்ட எவரும் ஞானியராம்
யாழினில் இசையாய் அவள்வருவாள்-ஸ்வரம்
யாவையும் மௌனத்தில் கருத்தரித்தாள்
ஏழ்கடல் கூந்தலை உலர்த்திடவே-அவள்
இருநில வெளியினில் பள்ளிகொண்டாள்
தாழ்வுகள் உயர்வுகள் அவள்சமைத்தாள்-பல
தாயங்கள் உருட்டிட உலகமைத்தாள்
ஊழினை மிதிக்கிற உரமுடையாள்-எங்கள்
உமையவள் திருவடி சரண்புகுந்தோம்