காட்டு மலர்களின் மீதேறி – அதோ
காற்றுக் குழந்தையின் ஓட்டமென்ன?
கூட்டம் கூட்டமாய் இலைகளெல்லாம் – அதைப்
பார்த்து ரசிக்கிற ஆட்டமென்ன?
பாதம் பதிகின்ற சுவடின்றி – தன்
பாதை எதுவென்ற பயமின்றி
மோதிப் பறக்குது காற்றடியோ – அதன்
மோகக் கிறுக்குகள் பாரடியோ!
மண்ணில் இருந்து மேல்கிளம்பி – அது
மேகங் கிழித்து விளையாடும்!
வண்ண மரங்கள் குலுங்கும்படி – அது
வார்த்தைகள் சொல்லி உறவாடும்!
நீயும் காற்றும் வேறில்லை – உன்
நெஞ்சத்தில் இதனை எழுதிவிடு!
பாயும் திசைகள் எங்கெங்கும் – உன்
பலங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொடு!
பூமியை அளக்கிற காற்றாக – நீ
பலங்கொண்டு நின்றாய் மானிடனே!
நாமிந்த உலகென்று தெரியாமல் – அட
பேதங்கள் ஏனிந்த ஊருடனே!
வீசும் காற்றாய் எழுந்துவிடு – உன்
வழிவரும் யாரையும் வருடிக்கொடு!
நேசப் பூக்களில் நடனமிடு – நீ
நட்பெனும் மழையைப் பொழியவிடு!