தீக்குச்சி சிறிது தீட்சண்யம் பெரிது
திசைகளில் வெளிச்சமிடும்!
நோக்கங்கள் சரியாய் உரசிடும் பொழுது
நிச்சயம் வெற்றி வரும்!
ஆக்கிடப் போகும் ஆயிரம் பணிகளின்
பட்டியல் எழுதிவிடு!
போக்கிய பொழுதுகள் போனால் போகட்டும்
புதிதாய்ப் பிறந்துவிடு!
மார்புக்கு குறியாய் விமர்சன அம்புகள்
மற்றவர் செலுத்தட்டுமே!
யார் சொல்லி என்ன உன் வழி உனது
பயணம் நடக்கட்டுமே!
ஊர் சொல்லும் வார்த்தைகள் உலவிடப் போவது
உன் பலம் தெரியும் வரை!
பேர்சொல்லும் விதமாய் படைத்திடு சாதனை
அலறட்டும் உனது பகை!
சுத்த வீரனை விட்டில் பூச்சிகள்
சாய்த்திட முடியாது
செத்த பாம்புகள் யுத்தம் செய்ததாய்
சரித்திரம் கிடையாது
புத்தனைக் கூட சீண்டிய உலகம்
பழிசொல்லும்! சொல்லட்டுமே!
எத்தனை தடைகள் வந்தாலும் உன்
இலட்சியம் வெல்லட்டுமே!